Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம் மக்களே! நீரதி உங்களை அன்போடு வரவேற்கிறது! கடிவாளமற்று எழுத ஆசையா neerathitamilsite@gmail.com மெயில் பண்ணுங்க!
Joined
May 18, 2024
Messages
29
உண்மை சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்டிருக்கும் இந்நாவலில் கருணையற்ற சம்பவங்கள் மற்றும், படுபயங்கரமான சித்தரிப்புகளும் அடங்கிய பல காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இது பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட வாசர்களுக்கு மட்டுமே உரித்தான படைப்பாகும். கதைப்போக்கு நாவல் வாசிப்போரை கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கும்.

ஆகவே, இதயம் பலவீனமானவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் உடல் சுகமற்றவர்கள் இக்கதையைத் தவிர்ப்பது நல்லது.

ஆதலால், கதையோடு ஒன்றி அதன் சாராம்சத்தை புரிந்துக்கொள்ளும் பக்குவம் கொண்டோர் மட்டும் இக்கதையை படிப்பது நல்லது.

நன்றி. வணக்கம்.

______________________________________________________________


அன்சார் நாநாவின் (அண்ணா) மனைவியின் நிலையை பார்த்து சாஹிபா அறை வாசலிலேயே நின்று விட்டாள்... "மூன்று வயது பெண் பிள்ளைக்கு தகப்பன் இல்லை.. வாழ வேண்டிய பெண்ணிற்கு கைம்பெண் நிலை... பூமி பாக்காத மகவுக்கு தகப்பன் அற்றவன் என்ற சொல்"... ஏன்? எதற்காக? இவர்கள் இவ்வளவு அக்கிரமம் செய்கிறார்கள்... இவர்களது போராட்டம் தமிழர்களுக்கு உரிமை வேண்டும்.. வடக்கு மற்றும் கிழக்கு இணைய வேண்டும் என்று தானே.. இடையில் ஏன் முஸ்லிக்களை கொத்து கொத்தாக கொன்று குவிக்கின்றனர் என்பதை, யாராலும் தடுக்கவும் மறுக்கவும் முடியவில்லை...

"வயித்து புள்ளகாரி எதையும் தின்ன குடுங்க " என முதியபெண் ஒருவர் கூற "இரிங்க நான் போறேன் " என்ற சாஹிபா பனங்கற்கண்டு சேர்த்து டீ தயாரித்து கொண்டு வந்து அன்சாரின் மனைவி றிபாயாவின் அருகில் உட்கார்ந்தாள்... "மதினி" என சாஹிபா அழைத்தது தான் தாமதம் ... தேக்கி வைத்திருந்த அத்தனை கண்ணீரும் மடை திறந்த வெள்ளம் போல சாஹிபாவின் தோளில் சாய்ந்து கொட்டி விட்டாள் றிபாயா... சாஹிபா மிகவும் தைரியமான பெண்.. இருந்தாலும் தன்னுடைய வீட்டாரின் கட்டுப்பாடுகளை மதிப்பவள்.. சாஹிபா தனக்கு வந்த அழுகையை அடக்கியவள் " நீ! இந்த டீய குடி மதினி.. வயித்துல இருக்ற எங்க நாநாட புள்ளய பட்டினியா போடாத" என சாஹிபா கூற "நாநாட புள்ள" என்றதும் உடனே டீயை வாங்கி மடமடவென குடித்தாள் றிபாயா..

அவளது மனவோட்டத்தை புரிந்து தான் சாஹிபா அவ்வாறு கூறினாள்.. றிபாயாவின் தலையை தடவி விட்டு, மடியில் கிடந்த குழந்தையை வாங்கி இடுப்பில் இடுக்கி கொண்டு, டீ குடித்த குவளையை மறு கையால் ஏந்தி அறையை விட்டு வெளியே வந்தாள் சாஹிபா... வெளியே நின்ற ஒரு சில ஆண்கள் பரபரப்பாக செயற்பட்டனர்.. "மையித்து வருவுதாம்.. இந்தா பாதி வழியால வந்துட்டாம்.. எல்லாம் ரெடியா வெச்சி இருக்கீங்களா " என்ற குரல் சாஹிபாவின் காதை வந்து அடைய கைகள் நடுங்கி இதயம் வேகமாக துடித்தது...

வெற்றுக் குவளையை வேகமாக வைத்து விட்டு திரும்பியவள், தன் தாய் அழைத்து "அன்சார் நானாவின் மையத்து வருகிறதாம்" எனக் கூறினாள்... மேலும் அமைதியாகவும் ,சத்தமிட்டு அழாமல் இருக்குமாறும் கூறினாள்... ஊதுபத்தி ஏற்றப்பட்டு ஓரமாக வைக்கப்பட, கயிற்றுக் கட்டில் நடுக்கூடத்தில் போடப்பட்டது.. வெளியே நின்றிருந்தவர்களின் சலசலப்பு சத்தம் அதிகமானது.. ஒரு சிலர் "ஐயோ!! அல்லாஹ்!! " என சத்தமிட்டு அழுதனர்.. மையித்து நெருங்கிய உறவுக்கார ஆண்களால் தூக்கிக் கொண்டு வரப்பட்டு நடுக்கூடத்தில் போடப்பட்டிருந்த கயிற்றுக் கட்டில் படுக்க வைக்கப்பட்டது... வெள்ளை புடவையால் அன்சாரின் இறந்த உடல் சுற்றப்பட்டிருந்தது.. தலைப்பகுதியில் ஒரு முடிச்சும், கால் பகுதியில் ஒரு முடிச்சும், உடம்பின் நடுப்பகுதியில் ஒரு முடிச்சுமாக வெள்ளை துணியின் மேல் மூன்று கட்டுகள் போடப்பட்டிருந்தது...

ஒவ்வொருவராக வந்து இறந்த உடலை பார்வையிட்டு சென்றனர்... அன்சாரின் முகம் மட்டும் பார்வைக்காக திறக்கப்பட்டிருந்தது.. அன்சாரின் இறந்த உடல் படுக்க வைக்கப்பட்டிருந்த கயிற்றுக் கட்டிலில் இருந்து சில அடிகள் தூரத்தில் சாஹிபா அவனது குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.. அவளது மனதில் ஆயிரம் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தது.. அதே நேரம் அவளையே அறியாமல் அவளது கண்கள் கயிற்றுக் கட்டில் கீழ் செல்ல அங்கு அவள் கண்கள் கண்ட காட்சியில் உயிர் நாடி உறைந்து விட்டது.. "அன்சாரின் இறந்த உடலில் இருந்து இரத்தம் சொட்டு சொட்டாக வழிந்து கொண்டிருப்பது தான்" அவள் கண்ட காட்சி... கண்களை அகல விரித்தவள் அருகில் இருந்த தாயிடம் விடயத்தை கூறினாள்.. தாயுமே அதை அவதானித்தவர் முந்தாணியை எடுத்து வாயில் வைத்துக்கொண்டு சத்தம் வெளிவராமல் கதறினார்..

சாஹிபாவுக்கும் எதுவுமே புரியவில்லை.. "என்ன உம்மா இது? என்ன இது ரத்தம் ஓடுது? என்ன செஞ்சாங்க? இயக்கம் சுட்டெண்டு தானே சொன்னாங்க.. ஆனா என்ன இது ரத்தம் ஓடிட்டு இருக்கு.. காயத்துல இருந்து இவ்வளவு ரத்தம் வருமா? காயம் பட்ட இடத்தை பஞ்சு வெச்சு அடச்சு கொண்டு வரலியா?" என சாஹிபா மெதுவாக தன் தாயிடம் கேள்விகள் தொடுத்தாள்...

"இல்ல அன்சார் நானாட ரெண்டு கண்ணையும், ரெண்டு கிட்னியையும் அவர் உயிரோடு இருக்கிறப்பயே இயக்கம் தோண்டி எடுத்துட்டானுகளாம்.. அதுக்கு பிறகு தான் வாய்க்குள்ளே சுட்டு உயிர எடுத்தயாம்.. எல்லாமே இப்ப தான் செஞ்சயாம்.. அவனுங்க எப்டி பஞ்சு வெச்சு காயத்தை அடச்சி தருவானுங்க?" என அன்சாருக்கு நடந்த அகோரத்தை சாஹிபாவின் தாய் விளக்கினார் ..

அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. எவ்வளவு கொடூரம் இது என எண்ணி விசும்பினாள்.. இறந்த உடல் இஸ்லாமிய முறைப்படி அனைத்து கிரிகைகளும் செய்யப்பட்டது... "இன்னும் நேரம் போறது சரில்ல.. நாம மையித்த கொண்டு அடக்கம் பண்ணிடலாம்" என மதப் பெரியார் சொல்ல அதுவே அனைவருக்கும் சரி எனப்பட்டது... இறந்த உடலை தூக்கி பாதி வழி கூட சென்றிருக்க மாட்டார்கள் அன்சாருக்கு ஆண் மகவு ஆரோக்கியமாக பிறந்தது... கடந்த காலத்தை நினைத்த சாஹிபாக்கு தங்கள் உயிர் தப்பிக்கும் என்பதில் கிஞ்சித்தும் நம்பிக்கை இல்லை...

தர்ஷன் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தான்.. சாஹிபாவின் பதற்றம் அவனுக்கு புரியாமல் இல்லை.. "எப்படியாவது முஸ்லிம்களின் உயிரை காப்பாற்ற வேண்டும்" என்று நினைத்த இந்துக்களும் அந்த பஸ்ஸில் பிரயாணம் செய்தார்கள் தான் .. சாஹி மற்றும் அவள் தோழிகளின் அருகில் சென்ற தர்ஷன் "வாங்க இந்த இடத்துல இறங்கலாம்.. நீங்க மூணு பேரும் இறங்கி எங்க கூட வாங்க" என்றான்.. அவர்களுக்கு தர்ஷன் மற்றும் அவனது தோழர்கள் மேல் நம்பிக்கை நிறையவே இருந்தது .. ஆனால் தர்ஷனையும் மீறி தாங்கள் பயணிக்கும் வழியால் வரும் இந்துக்கள் மீது நம்பிக்கை இல்லை... அதற்கு காரணம் அவர்கள் வாழும் சூழல்தான்.. யார் யாரை கொல்வார்கள், யார் யாரை வெட்டுவார்கள் என்று தெரியாத ஒரு சூழ்நிலையில் தான் அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

இருப்பினும் பரவாயில்லை தர்ஷனை நம்பி சாஹியும் அவள் நண்பர்களும் பஸ்ஸில் இருந்து இறங்கினர்... அவளை நிமிர்ந்து ஒரு முறை பார்த்த தர்ஷன் "வேற வழி இல்ல ஹிஜாப கழட்டிட்டு வாங்க" வாங்க என்றான்.. சாஹியும் அவள் தோழிகளும் புடவை அணிந்து அதன் மேல் தான் ஹிஜாப் அணிந்து இருந்தனர்.. தர்ஷன் இவ்வாறு சொன்னதும் பெண்கள் மூவரும் கைகளைப் பிசைந்து கொண்டு நின்றனர்... நேரம் செல்லச் செல்ல தர்ஷனுக்கு பதற்றம் அதிகமானது... சாஹியின் கைப்பிடித்து சாலையின் மருங்கில் நின்ற மரத்தின் பின்னால் அழைத்து சென்றவன்; அவளது மருண்ட விழிகளை முகத்திரையின் ஊடாக பார்த்துக் கொண்டே தலையின் பின்புறம் கைகளைக் கொண்டு சென்று ஹிஜாபையும் ,திரையையும் அவிழ்த்து விட்டான்.. சோலை வனத்தில் சேலை அணிந்த தேவதையாக அவள் மிளிர்ந்தாள்... அவள் அழகை ரசிக்கும் தருணம் இதுவல்ல என்று தன் காதல் மனதை கட்டுக்குள் கொண்டு வந்தவன்; அவளது கற்றை கூந்தலின் முன் பக்கம் முடிகளை முகத்தில் தவழ விட்டு, தன்னிடம் இருந்த சிவப்பு நிற பேனையினால் நெற்றி நடுவே சிறு பொட்டிட்டு அவளை இந்து போல் வேடமிட்டான்...

அவனது செய்கைகளை அமைதியாக அனுமதித்தவள் தலை குனிந்து நிற்கவும் "வேற வழியே இல்லமா.. உனக்கு நான் சொல்லி தான் விளங்கனும்டு இல்ல.. உன்ட உயிர இந்த வேஷம் தான் காப்பாத்தும்.. உங்க அல்லாஹ்கு எல்லாம் தெரியும் தானே.. இது பாவம்டு அவரு சொல்லமாட்டாரு .. உன்ட கூட்டாளிங்களையும் கூட்டிட்டு வந்து உன்னை மாதிரி செஞ்சு விடு " என தர்ஷன் கூற" ம் "என தலையாட்டியவள் "நீங்க போய் நான் வரச் சொன்னேன்டு அவங்களுகிட்ட சொல்லுங்க" என்றாள்.. தூரத்தில் எங்கேயோ துப்பாக்கி ஒன்றில் இருந்து இரண்டு தோட்டாக்கள் வெளியான சத்தம் கேட்டது...

தொடரும்.....
 
Back
Top