Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம் மக்களே! நீரதி உங்களை அன்போடு வரவேற்கிறது! கடிவாளமற்று எழுத ஆசையா neerathitamilsite@gmail.com மெயில் பண்ணுங்க!
Joined
May 1, 2024
Messages
9
சிவா மனசுல சக்தி - 1


ஊரே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த அந்த காலை நேரத்தில் ஒரு வீட்டின் சமயலறையில் ஒருவர் மட்டும் புலம்பி கொண்டிருந்தார்..

கொஞ்சமாச்சும் இவளுக்கு பொறுப்புனு ஒன்னு இருக்கா?? அது எப்படி இருக்கும்?? எல்லாரும் இவள தல மேல தூக்கி வச்சு கொண்டாட்டி இருந்தா.. அவ என்ன செஞ்சாலும் செல்லம் கொடுத்து கொஞ்சிகிட்டு இருந்தா.. கண்டிக்க வேண்டிய நேரத்துல கண்டிக்காம இருந்தா இப்படித்தான் இருப்பா" என்று இடையிலேயே தன் கணவர் கதிரவனையும் சேர்த்து திட்டி கொண்டிருந்தார் மலர்..

"இன்னைக்கு காலேஜ் இருக்குனு கொஞ்சமாச்சும் அறிவிருக்கா? எத்தனை தடவை போய் எழுப்புறது.. இவள எழுப்பிகிட்டே இருந்தா இந்த வேலைகளைலாம் யார் பாக்குறது.. அவ அப்பா வந்து பாப்பாரா?" என்று புலம்பி கொண்டே.

"ஏண்டி கவி, "நீயாவது போய் அவள எழுப்பி விடேண்டி.. என்னால மேலயும் கீழேயும் ஏறி ஏறி இறங்க முடியல.. முதல்ல இவ ரூம்ம கீழ மாத்தணும்" என்று தன் இளைய மகள் சங்கவியை ஏவிக் கொண்டிருந்தார்..

அவளோ, " போம்மா உனக்கும் வேலையில்ல. உன் செல்ல பொண்ணுக்கும் வேலையில்ல.. நானே ஸ்கூல்க்கு ரெடி ஆகி வந்துட்டேன்.. இன்னும் அவ எழும்பாம இருக்கா.. அவள எழுப்பிட்டு இருந்தா எனக்கு லேட் ஆகிரும்.. இன்னைக்கு ஸ்கூல்க்கு ஃபர்ஸ்ட் டே வேற.. என்னால லேட் ஆக முடியாது" என்று சொல்லி விட்டு அவள் சாப்பிட அமர்ந்தாள்..

இவள வச்சுக்கிட்டு நான் என்னத்த செய்ய என்று புலம்பி கொண்டே மறுபடியும் அவரே போய் அவளை, " ஏய் எழுந்துறுடி எவ்வளவு நேரம் உன்ன வந்து எழுப்புரது என்று பின்னாலயே சுளீரென்று ஒரு அடியை போட்டார்.."

அதில், "அவுச்" என்று சொல்லி கொண்டே எழுந்தாள் நம் கதையின் நாயகி சக்தி...

சக்தி, " ஏம்மா காலையிலேயே இம்சைய கூட்டுற.. அவ்வ் எப்படி வலிக்குதுன்னு தெரியுமா?" என்று அடித்த இடத்தில் தேய்த்து கொண்டே எழுந்து அமர்ந்தாள்..

மலர், "சொல்லுவடி எல்லாம் சொல்லுவ.. நேத்து ராத்திரி தூங்கும் போது என்ன சொல்லிட்டு தூங்குன.. காலைல காலேஜ் முதல் நாள்.. சீக்கிரமே போகனும் அப்போதான் நல்லா இருக்கும்.. சீக்கிரமே எழுப்பி விடுங்கன்னு சொன்னியா இல்லையா??.. இதுல அலாரம் வேற.. என்னமோ அது அடுச்சதும் எழுந்துக்குற மாதிரி எதுக்குடி வைக்கிற.. அடிச்சு அடிச்சு ஓயுது" எனக் கடுப்புடன் சொல்ல..

சக்தி, "ஆமா அதுக்கு என்ன இப்போ.. ஏழு மணி தான ஆகுது" என வலி பொறுக்காது தூக்க கலக்கத்தில் எரிந்து விழுந்தாள்..

மலர், "அதுக்கு என்ன இப்போ வா?? அடியே மணி என்னாச்சுன்னு பாரு"..

சக்தி, "இந்தம்மா ஏன் இவ்லோ கோபமா இருக்காங்க அப்படி மணி என்னதான் ஆகிருக்கும் என்று மனதிற்குள் நினைத்து கொண்டே திரும்பி பார்த்தாள்".

"அய்யய்யோ மணி எட்டரை ஆகிறுச்சா என்று அலறி கொண்டே அவசரமாக துணி எடுத்து கொண்டு குளிக்க வேகமாக ஓடினாள்"..

மலர், "ஏய் வழுக்கி எதுவும் விழுந்து தொலஞ்சுறாத.. மெதுவா போ" என்று அதட்டி கொண்டே அவர் மறுபடியும் இறங்கி வந்து சமயலறைக்குள் நுழைந்து கொண்டார்..

அப்போது கதிரவன் தயாராகி வந்து சாப்பிட அமரும் போதே , "என்ன காலைல இருந்து ஒரே சத்தமா இருக்கு" எனக் கேக்க ..

மலர்,"அதுதான் சத்தமா இருக்குதுன்னு தெரியுதுல என்ன ஏதுன்னு கொஞ்சம் வெளிய எட்டி பார்த்தீங்களா?? அப்படியே உள்ளுக்கயே இருக்கிறது.. உங்க பொண்ணு தான் கிளம்புறதுக்குள்ள உயிர வாங்குறா.."

கதிரவன், "சரி சரி விடு இன்னைக்கு முதல் நாள்ள அதான் கொஞ்சம் முன்ன பின்ன இருக்கும் இனிமே சரியா பண்ணிருவா"..

மலர்,"இப்படியே காலத்துக்கும் சொல்லுங்க.. ஸ்கூல் படிக்கிறப்பவும் இப்படி தான் பண்ணுவா... எப்ப தான் அவள் மாறுவாளோ??" என்று சொல்லி கொண்டிருக்கும் போதே தேவதை போல அட்டகாசமான வெள்ளை நிற சுடிதாரில் மாடியிலிருந்து இறங்கி கொண்டிருந்தாள்..

இருவரும் அவளையே விழி அசையாது பார்த்திருந்தனர்..

"அம்மா அப்பா போய்ட்டு வரேன்" என்று சக்தி சொல்லி விட்டு அவர்களை தாண்டி செல்லும் போதே நினைவுக்கு வந்த மலர், "அடியே சாப்டுட்டு போ" என்று சொல்ல..

சக்தி,"இல்லம்மா லேட் ஆகிருச்சு நான் அங்க போய் பார்த்துக்கிறேன்" என சொல்ல

மலர், "அதெல்லாம் வேணாம் இன்னைக்கு அங்க எப்டி இருக்கோ என்னமோ.. நீ இங்கேயே சாப்டு"

சக்தி, "அம்மா " என சிணுங்கி கொண்டிருந்தவளை..

கதிரவன், "அம்மா சொல்றாங்கள.. சாப்டுட்டு போ சக்தி" என சொல்ல

சக்தி, " சரிப்பா" என்று அமர்ந்தவளுக்கு மலரே போட்டு ஊட்டி விட்டார்...

சக்தி, "சரிப்பா, அம்மா போயிட்டு வரேன்" என்று சொல்லி விட்டு சென்று விட்டாள்..

கதிரவன், "யாரோ இவலோ நேரம் மகளுக்கு செல்லம் கொடுக்குறத பத்தி திட்டிட்டு இருந்தாங்க.. இப்போ அவங்களே ஊட்டி விட்டு அனுப்பி விடுறாங்க" என்று கேலி செய்ய..

மலர், "நேரமாச்சுன்னு செஞ்சேன் பொழுதன்னைக்கும் அவளுக்கு சப்போர்ட் பண்ணல" என்று கழுத்தை வெட்டி உதட்டை சுழித்து கொண்டு சென்றார்..
அதுக்கு கதிரவனும் புன்னகைத்து விட்டு, "சரி நானும் கிளம்புறேன்" என்று சொல்லி விட்டு அவரும் சென்று விட்டார்..

இப்படியே எப்போவும் சந்தோசமா இருக்கும் இந்த வீடு இப்படியே தொடர்ந்து இருக்குமா இல்ல அவங்க அமைதியை குலைக்கும் விதமாக புயல் வீச போகுதான்னு பொறுத்திருந்து பார்ப்போம். ..

❤️❤️❤️❤️❤️

"டேய் சிவா எழுந்துருடா.. எவ்ளோ நேரமா அம்மா ஃபோன் பண்ணிக்கிட்டே இருக்காங்க பயந்துற போறாங்கடா. எழுந்து பேசு சிவா" என்று சிவாவின் ஆருயிர் நண்பன் மணி அவனை எழுப்பி கொண்டிருந்தான்...

சிவா, "ப்ச்... ஏன்டா தொந்தரவு பண்ற நீயே எடுத்து நான் தூங்கிட்டு இருக்கேனு சொல்லு" என்று சொல்லி விட்டு மறுபடியும் குப்புற படுத்து தூங்கி விட்டான்..

மணி, "அடேய் !! ஏற்கனவே என்னை கூப்பிட்டும் கேட்டாங்கடா... நானும் சொல்லிட்டேன்.. ஆனாலும் அவங்களுக்கு உன்கிட்ட பேசுனா தான் நிம்மதியா இருப்பாங்க.. எழுந்துரு சிவா" என கூறிக் கொண்டிருக்கும் போதே.. மறுபடியும் அவனின் ஃபோன் , "அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல" என்று அடித்தது.. மணியை ஒரு பார்வை பார்த்து விட்டு.. அடித்து முடிய போகும் போது சோர்வாக எடுத்து காதில் வைத்தான் சிவா..

"ஹலோ" என்று சிவாவின் தாய் பவித்ரா கூற, " ஹான் சொல்லுங்கம்மா" என்று கூறினான்..

பவித்ரா, "என்னப்பா என்னாச்சு நேத்து காலைல வெளில வேலை இருக்குன்னு கிளம்பி போன... நைட் மணி வீட்லயே தூங்கிகிரேன்னு சொன்ன.. விடுஞ்சு நேரமும் ஆகி போச்சு.. நீயாவும் ஒரு கால்லும் பண்ணல.. நான் பண்ணாலும் எடுக்க மாட்டேங்குற..எதுவும் பிரச்சனையா??.. அம்மா கிட்ட எதுவும் மறைக்கிரியா??.. உன் முகமே ஒரு வாரமா சரி இல்ல.. எதுவா இருந்தாலும் சொல்லுப்பா" என்று படபடவென பரிதவிப்புடன் கேட்டார்..

சிவா, "அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா.. நான் நல்லா தான் இருக்கேன்.. இந்த பக்கம் கொஞ்சம் வேலை இருந்துச்சு அதான் வந்தேன் .. அப்படியே லேட் ஆனதும் மணி வீட்லயே தங்கிட்டேன்.. நைட் கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தோம்மா அதான் தூங்க கொஞ்சம் லேட் ஆகிருச்சு .. இப்போ தான் எழுந்தேன் "..

பவித்ரா, "ஓ! அப்படியா.. சரிப்பா ஆனா எந்த பிரச்சனைனாலும் அம்மா கிட்ட சொல்லணும் சரியா"..

சிவா, "சரிமா!"

பவித்ரா, "அப்புறம் சிவா உன்னை பிரியா தேடிட்டே இருக்காடா.. போனும் பண்ணாலாம்.. நீ எடுக்கலயாம்.. சீக்கிரமே வர சொல்லி சொன்னாடா.. அவ கல்யாண விஷயத்துல நீ தள்ளியே நிக்கிற மாதிரி ஃபீல் ஆகுதாம்.. சீக்கிரம் வருவியாம்டா.. பாவம் அவ ரெம்ப வருத்தப்பட்டு சொன்னா".

சிவா, "அய்யோ அதெல்லாம் இல்லமா.. நேத்து வேலை விஷயமா அலைஞ்சுட்டு இருக்கும் போது ஃபோன் பண்ணா நான் தான் அப்புறம் கால் பண்ணிகுவோம்னு எடுக்காம இருந்தேன்.. அப்புறம் மறந்துட்டேன்.. இப்போ பேசிறேன் மா" என்று சொல்ல... அவரும், " சரிப்பா" என்று சொல்லி அழைப்பை துண்டித்தார்..

அவன் அழைப்பை துண்டித்து விட்டு அலைபேசியை கட்டிலின் மேலயே தூக்கி எறிந்தான்..

அதை பார்த்து பதறிய மணி, "அட லூசு பயலே.. எதுக்குடா இப்போ ஃபோன தூக்கி போடுற? உடைந்து போயிருந்தா என்ன பண்ணுவ??".

சிவா, "ப்ச்.. இங்க நானே உடைஞ்சு போயிருக்கேன் இப்போ இந்த ஃபோன் உடயிறதுதான் முக்கியம் பாரு"..

மணி, "இப்போ உனக்கு என்ன தான்டா பிரச்சனை"..

சிவா, "நான் தான்டா எனக்கு பிரச்சனை. என்னால அவ முகத்த பாக்க முடியல குற்ற உணர்ச்சியா இருக்குடா".

மணி, "டேய் பைத்தியக்காரா.. நீ என்ன அவளுக்கு பாவம் பண்ண குற்ற உணர்ச்சியா உணர்றதுக்கு"..

சிவா, "என் மனநிலை உனக்கு புரியாதுடா... அவளுக்கு மேரேஜ்ன்னு அவங்க வீட்ல பேச்செடுக்கும் போது எனக்கு மனசுல தோனுணது என்னன்னா.. நம்மலும் யாரையோ கல்யாணம் பண்ணிக்க போறோம்.. அது ஏன் பிரியாவா இருக்க கூடாது.. நம்ம பற்றி நல்லா தெரிஞ்சவளும் அவதானு தோனிட்டு இருக்கும் போதே அவங்க வீட்லயும் அதயே சொன்னாங்க.. ஆனா அவ என்னை அந்த மாதிரி நினைச்சு கூட பார்க்கலைனு சொல்லிட்டாடா.. அப்போ அவள அந்த மாதிரி நான் நினச்சுறுக்கேனு தான அர்த்தம்"..

மணி, "அது அப்படி இல்லடா மச்சான்" என ஆரம்பிக்க..

சிவா, "உனக்கு புரியாதுடா இப்போ நீயும் தான அவளோட க்ளோஸ் ஃப்ரெண்ட் ஆனா நீ அப்படி யோசிக்கலயே.. என்னால அவ முகத்த கூட நிமிர்ந்து பாக்க முடியலடா"..

மணி, "ஏன் அவ முகம் என்ன அவளோ கொடுரமாவா இருக்கு" என கேட்டு சிரிக்க ...

சிவா, "டேய்" என முறைத்து விட்டு, "எனக்கு அவ்ளோ கில்ட்டியா இருக்குடா"..

மணி, "மச்சி இதுல நீ கில்ட்டியா ஃபீல் பண்றதுக்கு ஒண்ணுமே இல்ல.. நீ இப்படி தான் நினச்சேனு பிரியா கிட்ட சொன்னா கூட அவ ஒண்ணுமே சொல்ல போறது இல்ல புரியுதா.. ஆனா நீ இப்படியே அவளை ஒதுக்கி வச்சுட்டு இருந்தேனு வை அதுக்குதான் அவ கவலைபடுவா.. இப்போவே சிவா ஏன் ஒரு மாதிரி டல்லா இருக்கானு என்கிட்ட கேட்டுட்டு இருக்கா.. இன்னுமே நீ புலம்பிட்டு இருந்தின்னா நான் பிரியாகிட்டயே நேரடியா உண்மைய சொல்லிருவேன்".. என ஒரு நண்பனாக அவன் மன நிலையை மாற்ற முயன்றான்..

சிவா, "சரி இனி நான் அவ விசயங்களில் தள்ளி நிக்கல.. ஆனா அதுக்கு நீ ஒரு உதவி பண்ணனும்"..

மணி,"என்ன உதவி?"...

மணி மனதிலோ, "பிரியா கிட்ட சொல்லாதன்னு சொல்ல போறானோ?" என்று நினைத்து கொண்டு இருக்க .. ஆனால் அவன் சொன்ன பதிலில் மணி திகைத்து தான் போனான்..
 

Author: தஸ்லிம்
Article Title: அத்தியாயம் - 1
Source URL: Neerathi-https://neerathi.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Back
Top