Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம் மக்களே! நீரதி உங்களை அன்போடு வரவேற்கிறது! கடிவாளமற்று எழுத ஆசையா neerathitamilsite@gmail.com மெயில் பண்ணுங்க!

KD

Administrator
Staff member
Joined
Apr 24, 2024
Messages
48
அத்தியாயம் 8

சரியாக மணி இரவு எட்டைத் தொட்டிருந்தது.

அனைவரும் உணவுக்கு ஆர்டர் கொடுத்துக் காத்திருந்தனர்.

கார் பார்க்கிங்கில் வருங்காலத்தைக் கழட்டி விட்டு வந்தவனோ, எல்லோருக்கும் முன்னதாகவே உணவு விடுதிக்கு வந்துச் சேர்ந்திருந்தான்.

பெரிய குடும்பம் என்பதால் அனைவரும் ஒற்றுமையாய் அமர்ந்திட மேஜைகளை செட் செய்ய சொல்லி கேட்டுக் கொண்டான் ரகு அங்கிருந்த பணியாளர்களை.

தனியொருத்தியாய் ஒப்பாரிக் கொண்ட கோக்கனதையோ ரெண்டு குடும்பமும் கார் பார்க்கிங்கில் எண்டர் ஆகிடும் முன், முகத்தை வெட் திசுவால் துடைத்தெடுத்து மீண்டும் லைட் மேக் ஆப் கொண்டாள்.

கோவிலுக்கு வரமுடியாது போன சக்தியோ, டின்னரில் வந்து கலந்துக் கொண்டான். ராதிகாவை அழைத்திடலாம் என்று குருமூர்த்தி சொல்ல, தாத்தா பார்த்த ஒரு முறைப்பில் வாய் மூடிக்கொண்டார் மூத்த மகனவர்.

வருங்கால அண்ணி புவனாவிற்கு எதிரே அமர்ந்திருந்தாள் லோட்டஸ். அக்காவிற்கு வலது பக்கத்தில்தான் அமர்ந்திருந்தான் ரகு. கலகலப்பான குடும்ப கன்வர்ஷேஷனில் ஜோடிகள் இருவரும் கலந்துக் கொள்ளவே இல்லை.

வாழை இலையை மட்டுமே குனிந்த தலை நிமிராது பார்த்திருந்தான் ரகு. லோட்டஸோ அவ்வவ்போது அவனை ஏறெடுக்க, மவரசன் மொத்த கவனத்தையும் சோற்றில் மட்டுமே கொட்டியிருந்தான்.

இரவு உணவை உள்ளே இறக்கிய பெரியவர்களோ முடிவு செய்தனர் அடுத்த வார வீக்கெண்ட்ஸ் பெண்ணுக்கு நிச்சயதார்த்த புடவை எடுத்திட சென்றிடலாம் என்று.

அப்படியே வீட்டிலிருக்கும் மற்றவர்களுக்கும் புதுத்துணியை ஒரேடியாக எடுத்திடலாம் என்று திட்டங்கொண்டனர்.

எதையுமே காதில் வாங்காது கேரட்டை வாயுக்குள் திணித்து கடித்துக் கொண்டிருந்தான் ரகு.

வித்தாரக்கள்ளியின் தலையோ இலையைப் பார்த்து குனிந்திருந்தாலும், விழிகள் என்னவோ ராகுவையேதான் உற்று நோக்கியது.

'பார்க்கறான்னான்னு பாறேன்! பொறுக்கி! பொறுக்கி! டேய், அந்த சோத்து மேல காட்டுற ஆர்வத்தே கொஞ்சம் என் மேலையும் காட்டுறதாம்! தாடிக்கார பொறுக்கி! பாருடா என்னே! டேய்!'

என்ற யுவதியோ மனதுக்குள்ளேயே புழுங்கிட, உருளைக்கிழங்கை நசுக்கிய ரகுவோ அப்படியே நிறுத்தினான் அவன் செயலை.

மெதுவாய் கண்களை மட்டும் மேலேத்தி ஏறெடுத்தவனோ, அவனை கடித்து தின்பது போல் வெறித்த கோக்கனதையை பார்த்தான்.

உள்ளுணர்வு சொல்லத்தான் உண்பதையே நிறுத்தி, சேயிழையின் வதனம் நோக்கினான் ரகு.

ஆனால், அவனின் கேள்வியென்னவோ எப்படி ஆணவன் உள்ளுணர்வு உணர்ந்தது, அவனை நோக்கிய லோட்டஸின் கொலைவெறியான லுக்கிங்கை.

ஒருவழியாய் இவ்வளவு நேரம் சோற்றை பார்த்தவன் இப்போது சுந்தரியின் முகங்காண, தலையை நிமிர்ந்த வாக்கில் மேல் தூக்கியவளோ, இலையோரமிருந்த அப்பளத்தைக் கையிலெடுத்தாள்.

ரகுவோ குறுகுறுவென நேரிழை அவளையே பார்த்தான் சாம்பார் சாதத்தில் கோலங்கொண்டு.

'அப்பளத்தே விட்டு அடிக்க போறாளா?!'

என்றவன் உள்ளம் கொண்ட கேள்விக்கோ பதிலாய், அப்பளத்தையே வெறியோடு கடித்து உண்டாள் லோட்டஸ்.

அதுவே உணர்த்தியது ஆணவனுக்கு இதுதான் அவன் நிலை சிக்கினால் என்று.

திருதிருவென்று விழித்தவன் பம்பிடும் சிறுப்பையனை போல் தலையை மீண்டும் கீழே குனித்து மீண்டும் லைட்டாய் மேல் தூக்க, அவன் செயலில் சிரிப்புக் கொண்ட கள்ளியோ, விரல்களில் சிக்கிய கேரட்டை சைகையால் வேண்டுமா என்று அவனிடம் கேட்டாள்.

நோ, என்பதை சிறு தலையசைவின் மூலம் தெரியப்படுத்திய ரகுவோ, சாம்பார் கிழங்காவது வேண்டுமா, என்றவளிடம் மறுபடியும் வேண்டாமென்று தலையாட்டினான்.

மென்புன்னகை கொண்ட பொற்றொடியோ அவனை பார்த்தப்படியே பிசைந்த சோற்றை வாயுக்குள் தள்ள, ஆணவனோ அவன் போனை ஒற்றை விரலால் மெல்லமாய் ரெண்டு தட்டு தட்டி கண்ணசைத்தான் கோதையவளிடம்.

முதலில் புரியாது புருவங்களைக் குறுக்கிய தெரியிழையோ, சில நொடிகள் ரகுவின் விழிகளையே உற்று நோக்கினாள். ஆணவன் கண்களோ மீண்டும் போனில் பதிந்து நகர, புரிந்துக் கொண்ட பகினியின் இமைககளோ ஆணவன் இழுத்த இழுப்பில் போய் நின்றது.

மெதுவாய் மடியிலிருந்த அலைபேசியைத் தூக்கி மேஜை மீது வைத்தாள் லோட்டாஸ். சாப்பிடும் போது போனில் கை வைத்தால் அவ்வளவுதான், காஞ்சனா குமட்டிலேயே குத்தி லெக்ச்சர் அடித்திட ஆரம்பித்திடுவார்.

ஆகவே, யாரும் காணாதவாறு வாட்ஸ் ஆப் பக்கம் போனால் பதுமையவள், உணவருந்தியப்படியே. குறிப்பாய் பெத்தவளின் பார்வைகளில் சிக்காது.

ரகுவோ ஜி.ஐ.எப். படமொன்றை அனுப்பியிருந்தான் கோக்கனதைக்கு. அப்படத்தைப் பார்த்த வித்தாரக்கள்ளியோ, குபீரென்று சிரித்து விட்டாள் சத்தமாய்.

''குட்டிமா! என்னதிது?!''

என்ற காஞ்சனவோ மகளின் கரத்தை பிடித்து உலுக்க,

''மா!''

என்ற கோக்கனதையோ ஒரு முறையோடு நிறுத்தாது, தொடர்ந்து குலுங்கி சிரித்தாள் மற்றவர்கள் அனைவரும் ஒன்றும் புரியாது பெண்ணவளையே வெறிக்க.

''அப்படி இருக்கீங்க மாமா, இப்படி இருக்கீங்க மாமான்னு, நீ சொல்லும் போதே நான் சுதாரிச்சிருக்கணும் கோக்ஸ்!''

என்ற அருளோ, அரைப்பட்ட உணவுகளால் அலங்கோலமாகியிருந்த அவன் முகத்தை கையால் வழித்தெடுத்தபடி சொல்ல,

''சோரி மாமா! சோரி மாமா!''

என்ற கோக்கனதையோ மீண்டும் சிரிக்க ஆரம்பித்தாள் வாயை மறைத்தப்படி.

ஆனால், அப்படியானதொரு சம்பவம் நடக்கையில் கூட அத்தனைக்கும் காரணமான புண்ணியவான் ரகுவோ உதடு மடக்கி, சிரிப்பை அடக்கி, சத்தமில்லாது வாழை இலையை வழித்துண்ணதுதான் ஹைலைட்டே.

குறும்புக்காரன் அவன்தான் அனுப்பியிருந்தான் கோக்கனதைக்கு, நடிகர் வடிவேலுவின் காமெடி எமோஜி ஒன்றை.

சிரிப்பு நடிகர் அவரோ அதில் நெஞ்சை இருமுறை தட்டி பின் வெடிப்பது போல் சைகை செய்து, நாக்கு தள்ளி சாவது போலிருக்க, அதைக் கண்டதும் பனிமொழியவளால் பீறிட்டு வந்த சிரிப்பை அடக்கிட முடியவில்லை.

அதன் விளைவாகவே புவனாவிற்கு இடது பக்கத்தில் அமர்ந்திருந்த அருளின் முகத்தில் மொய்குழலவள், வாயில் அதக்கியிருந்த உணவுகளைத் துப்பித் தொலைத்தாள்.

''ஏன்மா, சிரிப்புக்கு கொஞ்சம் பிரேக் விட்டு அது என்னன்னு சொன்னா, நாங்களும் உன்னோட சேர்ந்து சிரிப்போம்லே?!''

என்ற வெங்கட்டோ நிலையை சமாளிக்க முனைய,

''சும்மா இருக்கீங்களா! அப்பறம் வாயிலே இருக்கறே மிச்சத்தையும் உங்க மூஞ்சிலே துப்பவா?!''

என்ற சித்ராவோ நக்கலடிக்க,

''குட்டிமா இப்போ நீ நிறுத்த போறியா இல்லையா?!''

என்ற காஞ்சனாவோ, மகளை அதட்டியதோடு நில்லாமல், அவள் தொடையில் ஒன்று சுளீரென்று போட, ஒருவழியாய் அடங்கிப்போனாள் மகளவள்.

''ஆனா, ஜிப்பாலே ஒரு பருக்கைக்கூட படாமே மொத்தத்தையும் என் மூஞ்சிலே துப்பினா பார்த்தியா, அங்க நிக்கறே கோக்ஸ் நீ!''

என்ற ஆருளோ, கிண்டலோடு இருக்கையிலிருந்து எழ,

''போடா! போடா! முதல்லே போய் முகத்தே கழுவிட்டு வா!''

என்ற சந்திரனோ, டாக்டர் அருளை துரத்தினான் அங்கிருந்து.

''மன்னிச்சிருங்க! தெரியாமே நடந்துருச்சு!''

என்ற காஞ்சனாவோ பொதுவாய் மன்னிப்புக்கோர,

''பரவாலே சம்பந்தி விடுங்க! ஏதோ எதர்ச்சையாத்தானே நடந்துச்சு!''

என்ற சந்திரிகாவோ சமாதானம் செய்தார் குற்ற உணர்ச்சிக் கொண்ட காஞ்சனாவை.

ஆனால், எல்லாவற்றிக்கும் காரணமான ரகுவோ, அப்போதும் சோறுண்டு அவனுண்டு என்பது போலவே உணவருந்திக் கொண்டிருந்தான்.

''கோக்ஸ் இப்போவாவது சொல்லேன், அப்படி எது உன்னே இப்படி புளிச்சின்னு என் மூஞ்சியே பார்த்து துப்ப வெச்சதுன்னு?!''

என்ற அருளோ முகத்தை திசுவால் துடைத்தப்படி கேட்க,

''ஐயோ, மாமா! பிளீஸ்! ஆளே விடுங்க! எக்ஸ் கியூஸ்!''

என்ற கோக்கனதையோ, அங்கிருந்து எடுத்தாள் ஓட்டம் வாஷ் ரூம் நோக்கி.

அதுவரை பொறுமைக் காத்த ரகுவோ, இம்முறை வாய் விட்டே சிரித்து விட்டான் மற்றவர்களோடு சேர்ந்து.

''சரி கிளம்பலாமா?!''

என்ற தாத்தாவின் செறுமிய குரலில், இருகுடும்பத்தாரும் அடுத்த பத்தாவது நிமிடத்தில் உணவு விடுதியிலிருந்து வெளியேறினர்.

டின்னரை சீக்கிரமாக உண்டு முடித்த ரத்னவேலு தாத்தாவோ, பேரனின் வருங்கால சம்பந்தியையும் மூத்த மகன் குருமூர்த்தியையும் மட்டும் தனியே அழைத்து போனார்.

மூவரும் வேறொரு மேஜையில் அந்தப்பக்கமாய் அமர்ந்து ரகசியமாய் சில விஷயங்களைக் கலந்தாலோசித்த சமயமே, கோக்கனதையின் லீலை இந்தப்பக்கம் ஆரம்பமாகியது.

என்னதான் கார் பார்க்கிங்கில் மனம் சபலப்படும் வகையில் நெருக்கமான சங்கடம் ஒன்று நிகழ்ந்திருந்தாலும், அதை அப்படியே தூக்கி சாப்பிட்டிருந்தது உணவு விடுதியில் நடந்திருந்த கூத்து.

லோட்டஸ் குட் நைட் அனுப்பிட, ரகுவும் பதிலுக்கு அனுப்பினான் வீடியோ கிளிப்பிங் ஒன்றை அம்மணியின் நித்திரைக்கு துணையாய்.

ஆணவன் அனுப்பிய நகைச்சுவை புயல் வடிவேலு மற்றும் மூத்த கலைஞர் சத்யராஜின் காமெடி காணொளியான சந்திரமுகி ரீமேக்கை பார்த்து எத்தனை முறை சிரித்தாளோ தெரியாது கோக்கனதை.

ஆனால், விடாது சிரித்து விக்கல் வரைக்கும் போய் ஒரு போத்தல் நீரை முழுவதுமாய் நெட்டித் தீர்த்தாள் ஒண்ணுதல் அவள்.

நிலா மேகத்துக்குள் நுழைய, ஆபிஸின் வரவு செலவு கணக்குகளை மேற்பார்வை பார்த்த வெங்கட்டோ, நள்ளிரவு ஒன்றுக்கு படுக்கையறை நோக்கினார்.

ஆனால், விளக்கு எரிந்த அறையிலோ சித்ராவைக் காணவில்லை, தேடி குழம்பியவர், கீழ் மாடி சென்றார்.

மனைவியை அடுக்களையில் தேடிய வெங்கட்டோ, பூஜை அறை வெளிச்சங்கொண்டிருப்பதைக் கண்டார். விரைந்து அடிகளை துரிதப்படுத்தியவரோ, சித்ராவை அவ்வறையில் கண்டார்.

இறைவனை கையெடுத்து கும்பிட்டுக் கொண்டிருந்தார் சித்ரா.

''சித்ரா, என்னாச்சு?! கெட்ட கனவேதும் கண்டியா?!''

என்று விசாரிக்க,

''தப்பின்னு தெரிஞ்சும், தவறான எண்ணம் ஒன்னு மனசுக்குள்ளே உருத்திக்கிட்டே இருக்குங்க!''

என்றவரோ பொடி வைத்து பேச,

''சித்ரா, உனக்கு நல்லாவே தெரியும், எனக்கு இந்த சுத்தி வளைச்சு பேசறதெல்லாம் சுத்தமா செட்டாகாதுன்னு! என்ன சொல்லணுமோ அதை நேரடியாவே சொல்லிடு! டைம் வேஸ்ட் பண்ணாதே!''

என்ற வெங்கட்டோ, மனைவியின் முன் சப்பளமிட்டு அமர,

''நம்ப அருள் இன்னைக்கு மாதிரி வாய் விட்டு சிரிச்சு எத்தனை வருஷமாச்சுங்க?! பார்க்கவே எவ்ளோ அழகா இருந்தது?! திரும்பவும் எப்போங்க இப்படி சிரிப்பான் நம்ப மகன்?!''

என்றவரின் கண்களோ கலங்கி ஊற்ற,

''இங்கப்பாரு சித்ரா, எதுவும் நம்ப கையிலே இல்லே! நடக்கறது எல்லாம் தொப்பளானோட சித்தம்தான்! நம்ப வேலை அவனே நம்பறது மட்டும்தானே தவிர எதிர்பார்ப்புகளை வளர்த்துக்கறது இல்லே!''

என்று விஷயத்தை கேட்டறியும் முன்னரே பாரியாளை நாசுக்காய் எச்சரித்தார்.

"புரியுதுங்க! ஆனா, இன்னைக்கு பார்த்திங்கத்தானே இதுவரைக்கும் நம்பக்கிட்ட கூட சிரிச்சு பேசிடாத அருள், அந்தப் பொண்ணுகிட்ட மட்டும் எப்படி சிரிச்சு பேசினான்னு?!"

என்ற சித்ராவோ ஈரமான கன்னங்களை துடைத்துக் கொள்ள,

"நானும் பார்த்தேன்மா. மனசுக்கு ரொம்பவே நிம்மதியா இருந்தது! இனி எப்போதுமே அருள் இப்படியே இருக்க தொப்பளானே வேண்டிக்கிட்டேன்!"

"என் மனசுக்கூட ஆதங்கப்பட்டுச்சிங்க, ஏன் நம்ப அருளுக்கு அந்தப் பொண்ணோ பேசி முடிக்கலன்னு!"

என்ற துணைவியின் வார்த்தைகளில் பதறிப்போன வெங்கட்டோ,

"சித்ரா! என்ன‌ பேசறே நீ?! உனக்கு என்னாச்சு?! ஏன் இப்படியெல்லாம் தப்பு தப்பா பேசறே?! நீ இப்படி பேசனது மட்டும் அண்ணன் அண்ணிக்கு தெரிஞ்சா ரொம்ப வருத்தப்படுவாங்க! அப்பாக்கு தெரிஞ்சா உடைஞ்சே போயிடுவாரு!"

என்று கவலைக்கொள்ள,

"என் பையன் இதுவரைக்கும் எந்த பொண்ணுக்கிட்டையும் இப்படி சிரிச்சு பேசலையேங்கே இந்த ஐஞ்சு வருஷத்துலே!"

என்ற சித்ராவோ வாய் மூடி ஓலமிட,

"ஒரு கண்ணே புடிங்கி மறுகண்ணுக்கு வெளிச்சங்கொடுக்க பார்க்கறியே சித்ரா!"

என்ற வெங்கட்டோ வேட்டாளின் விபரீதமான எண்ண ஓட்டத்தின் குரூரத்தை பூடகமாய் பறைசாற்றினார்.

"தப்புதாங்க! இப்படி நினைக்கறதோ இல்லே பேசறதோ மகா பாவம்ன்னு நல்லாவே தெரியும்ங்க! ஆனா, பெத்த மனசு கேட்க மாட்டுதே! என் பையன் வாழ்க்கையிலும் சந்தோஷம் திரும்ப வராதான்னு என் அடிமடி கதறுதுங்க!"

என்ற சித்ராவின் அழுகையில்,

"மனச தளர விடாத சித்ரா! தொப்பளான் கண்டிப்பா நம்ப பையனே கைவிட்டிட மாட்டான்! நிச்சயம் அருள் வாழ்க்கை நாமே நினைக்கறத விட பன்மடங்கு நல்லா இருக்கும்மா!"

என்ற வெங்கட்டோ, அழுகைக்கடல் கொண்ட வீட்டாளை கைத்தாங்கலாய் பற்றி அவர்கள் அறைக்கு கூட்டிச் சென்றார்.

இதழ் மிடறும் முத்தம்...

முந்தைய அத்தியாயங்களை படிக்க:


https://neerathi.com/forum/forums/இதழ்-மிடறும்-முத்தம்.143/
 

Author: KD
Article Title: இதழ் மிடறும் முத்தம்: 8
Source URL: Neerathi-https://neerathi.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Back
Top