Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம் மக்களே! நீரதி உங்களை அன்போடு வரவேற்கிறது! கடிவாளமற்று எழுத ஆசையா neerathitamilsite@gmail.com மெயில் பண்ணுங்க!

KD

Administrator
Staff member
Joined
Apr 24, 2024
Messages
48
அத்தியாயம் 9

வார இறுதி குடுகுடுவென ஓடி வந்திருந்தது.

பேசி வைத்தாற்போலவே குருமூர்த்தி மற்றும் தெய்வீகனின் இருகுடும்பமும் தலைநகரின் ஜவுளி கடையொன்றை முற்றுகைக் கொண்டனர்.

தாத்தா இம்முறை அவர்களோடு கலந்துக் கொள்ளவில்லை. சக்தியோடு சேர்ந்து தொழில் சார்ந்த மீட்டிங் நிமித்தமாய் நீண்டதொரு பயணம் மேற்கொண்டிருந்தார்.

போன முறை கோவில் மேட்டரில் சொதப்பியது போல், இம்முறை ஆடைகள் விஷயத்தில் கவுத்திட கூடாதென்று முன்கூட்டியே விடுப்பு சொல்லியிருந்தான் ரகு பணியிடத்தில்.

ஆகவே, அரை நாள் விடுப்பில் வீடு திரும்பியவன், வழக்கம் போல் ஒரு குளியலை போட்ட பின்னே துணிக்கடை நோக்கி பைக்கை அழுத்தினான்.

பெரிய குடும்பத்து மருமகள்கள் இருவரும் ரொக்கத்திலான சேலைகள் பலவற்றை கடை பரப்பினர் விலையைப் பொருட்படுத்தாது.

''குட்டிமா, உனக்கு இந்த மஞ்சள் ரொம்ப எடுப்பா இருக்கும்மா!''

என்று பரிந்துரைத்தார் வெங்கட்.

''இல்லே, இல்லே! சிவப்புதான் அம்சமா இருக்கும்! சிலையாட்டம் இருப்பா நம்ப பொண்ணு!''

என்றார் சித்ரா, சிவப்பு பட்டொன்றை எடுத்து லோட்டசின் முன் காட்டி.

''இது எல்லாத்தையும் விட, பச்சைத்தான் என் மருமகளுக்கு பொருத்தமா இருக்கும்! மதுரே மீனாட்சியே நேருல வந்த மாதிரி இருப்பா இதைக் கட்டினா!''

என்று இம்முறை சந்திரிகா சொல்ல, அவரவருக்கு பிடித்த வண்ணங்களை மணப்பெண்ணின் தேர்வாய் எடுத்துப் போட்ட குடும்பத்தை வெற்று புன்னகையோடு எதிர்கொண்டாள் ஒளியிழை அவள்.

அந்நேரம் பார்த்து அலறியது சித்ராவின் அலைபேசி. அருள்தான் அழைத்திருந்தான்.

''சொல்லுப்பா, எங்க இருக்கே? ஏன் இன்னும் கடைக்கு வரலே?! லேட் பண்ணாமே வந்திடுவேன்னு சொன்னே?!''

என்ற பெத்தவரோ கேள்விகளை வரிசையாய் அடுக்க,

''மா, நான் கொஞ்சம் வெளிய இருக்கேன். வர லேட்டாகும். எனக்கு ட்ரஸ் நீங்களே ஏதாவது பார்த்து எடுத்திடுங்க! எதுவா இருந்தாலும் எனக்கு ஓகேதான்!''

என்றவனின் குரலுக்கு பின்னாலோ,

''அருள், சிக்கன் ஆர் மட்டன்?!''

என்ற பெண் குரலொன்று கேட்டது. அக்குரலில் சித்ராவின் இதயமோ கனத்து போனது.

அருளோ வேள்விக்கொண்ட அரிவையிடம், மட்டன் என்பதை ஒற்றை விரலால் சுட்டிக்காட்டிட, மறுமுனையிலிருந்த சித்ராவோ,

''மேக்னா கூட இருக்கிய அருள்?''

என்றுக் கேட்டார் சுணங்கிய குரலோடு.

''ஆமா, மா! இன்னும் ரெண்டு நாள்லே மேக்னா சிங்கப்பூர் கிளம்பறா. அதான், மீட் பண்ண வந்தேன்.''

''சரிப்பா, பார்த்து பேசிட்டு பத்திரமா வீட்டுக்கு வந்திடு!''

என்ற தாயோ அதற்கு மேலும் பேச்சை வளர்த்திட விரும்பாது வார்த்தைகளை முடிவுக்கு கொண்டு வர,

''ஹான், மா, நான் இன்னைக்கு வீட்டுக்கு வர மாட்டேன். ரெண்டு நாள் ஆகும்.''

என்ற அருளோ முதல் முறை மனசில் எவ்வித சங்கடமும் இன்றி சொல்லி தொடர்ந்தான்.

''நான் வெச்சிடறேன்மா. யாராவது கேட்டா சொல்லிடுங்க, நான் மேக்னா கூடத்தான் இருக்கேன்னு.''

என்றவனோ அழைப்பைத் துண்டித்தான்.

குளமாகிய விழிகளோடு போனை காதிலிருந்து கீழிறக்கிய சித்ராவோ, வாய் பொத்தி ரகசியமாய் கதறியப்படி கடையோரத்தில் நிற்க,

''சித்ரா, என்னாச்சு சித்ரா?! சித்ரா?!''

என்று அவரின் கையை உலுக்கிய சந்திரிகாவோ, விபரம் புரியாது விழித்தார்.

பற்றி எரிந்த சித்ராவின் பெத்த வயிறோ பல காட்சிகளை கண் முன் கொண்டு வந்து நிறுத்தியது. சந்திரிகாவின் கையை தோளிலிருந்து விலக்கி, வேகமாய் வாஷ் ரூம் நோக்கி அவசரமாய் நடைப்போட்டார் சித்ரா.

''என்னாச்சு அண்ணி?! ஏன், சித்ரா கண்ணே கசக்கிக்கிட்டு போறா?!''

என்ற வெங்கட்டோ பெண்களின் சேலை செக்ஷனில் நுழைந்தவாறு கேட்க,

''எனக்கே ஒன்னும் புரியலே தம்பி. இங்கதான் எங்கக்கூட நின்னு பொண்ணுக்கு புடவை பார்த்துக்கிட்டு இருந்தா, போன் ஒன்னு வந்தது, தள்ளிப்போய் பேசினா. இப்போ என்னான்னா, அழறா, ஆனா, கேட்டாலோ எதுவும் சொல்லாமே போறா!''

என்ற குருமூர்த்தியின் திருமதியோ நடந்ததை சொல்ல,

''இருங்க அண்ணி! நான் போய் என்னான்னு பார்க்கறேன்!''

''இல்லே, தம்பி வேணா! இருங்க நான் போறேன்!''

என்ற அண்ணியோ அடிகளை முன்னோக்கி வைத்தார் வாஷ் ரூம் நோக்கி, புருஷனின் தம்பியை நிறுத்தி.

அதற்குள் இதோடு ஆறுக்கும் மேற்பட்ட புடவைகளைக் கட்டி அவிழ்த்த கோக்கனதையோ,

''மா, எனக்கு புடிக்கலமா! இதுலே ஒரு கலர் கூட என் டேஸ்ட்லே இல்லமா!''

என்றாள் காஞ்சனாவிடம் சலிப்போடு.

''இங்கப்பாரு குட்டிமா, விதண்டாவாதம் பண்ணாமே அவுங்க எடுத்து போட்டுருக்கறே புடவையிலே ஒன்னே சூஸ் பண்ற வழிய பாரு! காலங்காலமா கூரைப்பட்டு கட்டி கல்யாணம் பண்ண குடும்பம்! இப்போ, உனக்காக அந்த கூரையே விட்டுட்டு, காஞ்சிபுரத்துக்கு இறங்கிருக்காங்க! இப்போ, போய் அது புடிக்கலன்னு இது புடிக்கலன்னு சொல்லிகிட்டு! கொடுத்தேன்னா பாரு ஒன்னு, சப்புன்னு!''

என்ற தாயோ வழக்கம் போல் மகளை வார்த்தைகளால் அர்ச்சிக்க, வாடிய முகத்தோடு சிவப்பு மற்றும் பச்சையிலான இரு புடவைகளை எடுத்து நீட்டினாள் மலரவள் காஞ்சனாவிடம்.

''என்னம்மா, புடவையெல்லாம் புடிச்சிருக்கா?!''

என்ற தெய்வீகனோ கடைக்காரரிடம் கதை பேசி முடித்த சூட்டோடு வந்த வேகத்தில் மகளின் தோள் மீது கரம் பதிக்க,

''புடிச்சிருக்குப்பா!''

என்ற தளிரியலோ போலி சிரிப்பொன்றை உதிர்த்து வாய் மூடிக்கொண்டாள்.

தகப்பனார் அவரோ, சந்தோஷத்தின் மிகுதியில் வாங்கிய எல்லாவற்றிக்கும் பில் கட்டிட போனார் கீழ் தளம் நோக்கி.

வாஷ் ரூமுக்குள் ஒப்பாரிக் கொண்ட சித்ராவோ,

''அருள் இப்படி நடைப்பிணமா ஆவான்னு தெரிஞ்சிருந்தா, கண்டிப்பா அன்னைக்கு நான் மேக்னாவே வீட்டை விட்டு வெளிய போகவே விட்டுருக்க மாட்டேன்கா!''

''சித்ரா, நடந்தது நடந்திருச்சு! அதை பத்தியெல்லாம் ஏன் இப்போ பேசிக்கிட்டு?! விட்டுத்தள்ளுமா!''

என்ற சந்திரிகாவோ உடன் பிறவா சகோதிரியான சித்ராவின் தோளை ஆறுதலாய் தடவிக்கொடுக்க,

''எனக்கு மட்டும் ஆசையில்லையாக்கா, அருளோட புள்ளைகளே தூக்கி கொஞ்ச?!''

என்ற சித்ராவோ மொத்தமாய் சரிந்தார் குலுங்கி கதறி சந்திரிகாவின் மடியில்.

''உன் வலி எனக்கு புரியாமே இல்லே சித்ரா. ஆனா, வந்திருக்கறவங்க முன்னுக்கு நாமே இப்படி நடந்துக்கறது நல்லாவா இருக்கு, சொல்லு?! அருள் பத்தி பொண்ணு வீட்டுக்காரவங்களுக்கு எதுவுமே தெரியாது! அப்படி இருக்கும் போது, நாமளே அடுத்தவங்க நம்ப பையனை பார்த்து பரிதாபம் படர அளவுக்கு நடந்துக்கணுமா சொல்லு?!''

என்று புலம்பி அழுத சித்ராவை சமாதானம் செய்ய,

''நான் அவுங்க வாழ்க்கையிலே தலையீடமா இருந்திருந்தா இன்னைக்கு அந்த புள்ளக்கூட எப்படியோ என் பையன் சந்தோஷமா இருந்திருப்பாந்தானேகா!''

என்ற சித்ராவோ மூக்கை உறிஞ்சினார் கண்ணீர் கடலில் குளித்து.

சந்திரிகவோ மகனின் வாழ்க்கையை நரகத்திற்கு வாரிக்கொடுத்த தாயவளின் தலையை மெதுவாய் தட்டி அவரை ஆசுவாசப்படுத்திட ஆரம்பித்தார்.

வருங்கால குடும்பத்தின் கலவரம் அறியா அந்திகையோ தனியொருத்தியாய் சேலை பகுதியில் குத்த வைத்திருந்தாள்.

ஆள் உயர கண்ணாடி முன் அமர்ந்திருந்த கோக்கனதையோ, தொங்கிய தலையோடு அங்கிருந்த சேலைகளுக்கு மத்தியில் துழாவி எடுத்தாள் ரோயல் ப்ளூ வர்ண புடவை ஒன்றை.

அதைத் தூக்கி தோள் மீது சாத்திக்கொண்ட நங்கையோ, வாடிக்கிடந்தவளின் முகத்தை கண்ணாடியில் ஏறெடுத்தாள். பின், மீண்டும் கவலையாய் சிரத்தை கீழே குனித்துக் கொண்ட தெரிவையோ, நெஞ்சில் கிடந்த அச்சேலையை விரல்கள் தொட்டு தடவி ரசித்தாள்.

''வெச்சு பார்க்கறதுலே என்ன இருக்கு வித்தாரக்கள்ளி, கட்டி பார்க்கறதுலதானே நிம்மதி!''

என்ற குரலோ அம்மணியின் செவியோரம் கேட்க, பட்டென விழிகளை மேல் தூக்கினாள் நேரிழையவள்.

கண்ணாடி வழி கண்ட பாவையின் பார்வைகளிலோ, புனையிழையின் தாடிக்கார பொறுக்கியின் முகம் சிரித்திருந்தது.

ரகு கடைக்கு வந்துச் சேர்ந்து அரை மணி நேரமாயிற்று. அதுவும் ஒரு புடவைக் கூட பிடிக்கவில்லை என்று யுவதியவள் அம்மாவிடம் சண்டைபோட்ட காட்சிக்குக்கூட சாட்சியாகி, அத்தனையையும் ஒரு ஓரமாய் நின்று வேடிக்கைக் கொண்டான்.

வருங்கால மாமனார் மற்றும் மாமியாரின் தலை மறையவே, லோட்டசின் பக்கம் வந்தான்.

அன்றைய நெருக்கம் போலவே இன்றைய உரசல்களும் இருந்தன ஜோடிகளுக்குள். கொஞ்சம் பின்னோக்கினால் பேடையின் பின்னந்தலை ரகுவின் மார் இடித்திடும். அவன் கைகளுக்குள் அழகாய் அடக்கமாயிருந்தாள் ஆயிழையவள்.

அவன் இதழ்கள் உதிர்த்த வார்த்தைக் கொண்ட கனலில் கொதித்து போனாள் பெண்டு அவள். மல்லிகை சரம் இல்லாத போதும் மாயோளின் குழலோ அதே நறுமணத்தில் ஆணவனை சுண்டி இழுத்தது.

இருவரின் கரங்களும் மேஜையில் ஒன்றோடு ஒன்று தொட்டுக்கிடக்க, ரகுவோ அவனறியாது கண்களை மூடி, முற்றிழையின் சிகையில் முல்லையின் வாசம் பிடித்தான்.

அவனை தடுத்திடவும் முடியாது, நிறுத்த சொல்ல விருப்பமும் கொள்ளாது தள்ளாடினாள் மதங்கியவள். கோதையின் சொருகிய விலோசனங்களோ மெதுவாய் மூடிக்கொள்ள, படக்கென்று பற்றினாள் நாயகியவள் ரகுவின் விரல்களை.

தாபம் முறுக்கேற்ற, கூந்தல் நுகர்ந்தவன் வதனமோ வஞ்சியின் கழுத்தோரம் புதைய பார்க்க,

''வந்துட்டிங்களா மாப்பிள்ளே?!''

என்ற தெய்வீகனின் குரல் மோகத்திலிருந்த இருவரையும் தெளிய வைத்தது. ரகுவோ மெதுவாய் விலகிக் கொண்டான் கோக்கனதையிடமிருந்து.

அமர்ந்திருந்தவளும் சட்டென எழுந்து அங்கிருந்து நகர்ந்தாள் உடல் வெடவெடக்க ஆரம்பிக்க.

''இதான் நீ வர நேரமாடா?!''

என்ற வெங்கட்டின் குரலில் ஆண்கள் இருவரும் அவரைத் திரும்பி பார்க்க,

''நாங்களும் பர்சாசிங் முடிச்சாச்சு!''

என்ற சத்தத்தோடு காஞ்சனாவோ, வாஷ் ரூமிலிருந்து வெளிவந்த பெண்களோடு ஒன்று சேர்ந்து மேல் தளம் நோக்கி வந்திருந்தார்.

வந்த வேலை முடிய, மதிய உணவிற்கான இடத்தை ஒருவழியாய் தேர்தெடுத்தனர் குருமூர்த்தியும் தெய்வீகனும்.

ரகுவோ அவர்களை முன்னே போகச் சொல்லி, லோட்டாஸோடு முதல் முறை பைக்கில் ஜோடி போட்டான், வேறொரு இடம் நோக்கி.

இதழ் மிடறும் முத்தம்...

https://neerathi.com/forum/forums/இதழ்-மிடறும்-முத்தம்.143/
 

Author: KD
Article Title: இதழ் மிடறும் முத்தம்: 9
Source URL: Neerathi-https://neerathi.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Back
Top