Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம் மக்களே! நீரதி உங்களை அன்போடு வரவேற்கிறது! கடிவாளமற்று எழுத ஆசையா neerathitamilsite@gmail.com மெயில் பண்ணுங்க!

Shanthi Jo

New member
Joined
Apr 28, 2024
Messages
6
சேலம் மாவட்டம் போடிநாயக்கன்பட்டி கிராமத்திற்கு செல்லும் வழியில் அமைந்துள்ள குணா பேக்கரியில் வாடிக்கையாளர்களின் கூட்டத்தை எப்பொழுதும் பார்க்கலாம். டீ, பன், கேக், ஜீஸ், வடை மற்றும் எண்ணெய் பலகாரங்கள் போன்ற உணவு பொருட்கள் தினமும் அங்கு விற்பனைக்கு உண்டு. குணா பேக்கரியின் வழமையான வாடிக்கையாளர்கள் என்றால் பேக்கரிக்கு சற்று தொலைவில் அமைந்துள்ள ஆனந்தா கல்லூரி மாணவர்கள் தான். அதற்கு முக்கிய காரணம் பேக்கரி முதலாளி குணாவுக்கும் (40வயது), கல்லூரி மாணவர்களுக்கும் இடையே உள்ள பழக்கவழக்கமே. சில மாணவர்கள் செல்லமாக இவரை மாமா என்றும் அழைப்பார்கள். ஆனால், கடன் கொடுக்கமாட்டார்.
"மாமா 2 லெமன் ஜீஸ் போடுங்க" என்றான் ராமு.
"உட்காருட போட சொல்றேன். என்ன மாதவா, ராமு 2 பேரு டென்சனா இருக்கீங்க?"
"ஆமா மாமா...காலேஜ்ல ப்ரோபஸர் அசைமெண்ட் கொடுத்து தொல்ல பண்ணுறாங்க. "லேப்டாப்" இருந்தா ஈஸியா இருக்கும். நம்மகிட்ட தான் அது இல்லையே. அத யோசிச்சாலே டென்சனா இருக்கு."
"இததான்டா 2 நாளால சொல்லிட்டு இருக்கீங்க...! யார்கிட்டயாவது கடன் வாங்கியாவது லேப்டாப் வாங்குங்கடா. யூஸ் பண்ண லேப்டாப் விலை குறைவா இருக்கும்".
"அதுக்கும் காசு கொஞ்சம் கம்மியா இருக்கு மாமா. இப்போதான் காலேஜ்ல சேர்ந்து 1 வருசம் ஆகுது. யாரு எங்கள நம்பி காசு கொடுப்பா..?" செல்போனில் சினிமா புதுபட நியூஸ்களை பார்த்துகொண்டே மாதவன் சொன்னான்.
அவர்கள் பக்கத்தில் அமர்ந்திருந்த மாநிறம், வெள்ளை சட்டை, பேண்ட், உயரம் குட்டையான, கண்ணாடி அணிந்த, 40 வயதுக்குட்பட்ட கால் ஊனமுள்ள (நொண்டி) அந்த நபர் தான் குடித்த டீ க்கு காசு கொடுத்து விட்டு, செல்போனை அலசிக் கொண்டே ஜுஸ் குடித்து கொண்டிருந்த ராமு, மாதவன் அருகில் வந்து நின்றார்.
"தம்பி நான் பக்கத்து மேசையில உட்காந்து டீ குடிச்சிட்டு இருந்தேன். நீங்க பேசிக்கிட்டு இருந்ததையும் கேட்டேன்."
மாதவனுக்கு இந்த நபரை நேற்றும் பேக்கரியில் பார்த்த ஞாபகம் வந்தது. "சொல்லுங்க சார்" என்றான்.
அவர்கள் அருகில் காலியாக இருந்த நாற்காலியில் அமர்ந்துக்கொண்டே "ஆனந்தா காலேஜ்லேயா படிக்கிறீங்க? என்ன படிக்கிறீங்கா?"னு கேட்டார்.
"ஆமா சார். கம்யூட்டர் சையின்ஸ் இன்ஜீனியரிங் படிக்கிறோம். நீங்க என்ன பண்றீங்க சார்?"
"என் பெயர் தர்மா. கலெக்டர் ஆபிஸல சிவில் சப்ளைஸ் டிபார்ட்மெண்ட்ல வேலை செய்றேன். லேப்டாப் பத்தி பேசுனது கேட்டுச்சி. எவ்வளவுக்குள்ள லேப்டாப் பாக்குறீங்கா?"
"குறைஞ்ச விலைல தான் பார்க்குறோம். நல்ல கண்டிசனா இருக்கணும். ஏன் சார் கேக்குறீங்கா? என்று கேட்டேன் மாதவன்."
"தம்பீங்களா, கலெக்டர் ஆபீஸ்ல மக்களுக்கு அரசாங்கத்தால இலவசமா பொருட்கள் விநியோகம் பண்ற டிபார்ட்மெண்ட் நம்ம கண்ட்ரோல்ல தான் இருக்கு. அங்க இருக்க பொருள யாருக்கும் தெரியாம விற்பனையும் பண்றோம். இலவச லேப்டாப், இலவச டிவி, இலவச மிக்ஸி இன்னும் நிறைய. இலவச லேப்டாப் கண்டிசன் பத்தி உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன்?"
ராம் சட்டென்று "கேள்விப்பட்டிருக்கிறோம், கடையில விக்கிற லேப்புக்கு சமமா தான் இருக்காமே"
"ம்..அருமையா இருக்கும். வேணும்னா சொல்லூங்க. குறைஞ்ச விலைக்கு எடுத்து தரேன்."
"எவ்வளவு வரும் சார்?" செல்போனில் வந்த புதுபட சினிமா போஸ்டரை பார்த்துக்கொண்டே மாதவன் கேட்டான்.
"ஒரு லேப் 6000 க்கு கொடுக்கலாம் தம்பி."
"ரேட் அதிகமா இருக்கே சார். குறைக்கமாட்டீங்களா?" என்றான் ராம்
"விலை குறைக்க முடியாது தம்பி. டிபார்ட்மெண்ட்க்குள்ள இருக்க மத்த ஆபீஸரையும் கவனிக்கணும். அதுக்கு தான் இந்த ரேட்."
"ஓகே சார். நம்ம கிளாஸ்ல இன்னும் 8 பேருக்கும் தேவப்படுது. போன் நம்பர தாங்க முடிவு பண்ணிட்டு சொல்றோம்" என ராம் கூறினான்.
நம்பரை குறித்துக் கொண்ட இருவரிடமும் "எந்த ஊர் தம்பி" என தர்மா கேட்டார்.
"சூரமங்கலம் சார்" என்றான் மாதவன்.
"அந்த வழியா தான் தம்பி போறேன் வாங்க இறக்கி விடுறேன்."
"கால் நொண்டி நடக்கும் தர்மா சார்" சரியாக ஓட்டுவாறா என்ற சிறிய பயத்துடனே இருவரும் அவருடன் சென்றனர்.
அடுத்த நாள் காலை குணா பேக்கரியில், "இப்படியும் வியாபாரம் பண்ண ஆரம்பிச்சுட்டாங்களடா?"
"ஆமா மாமா...கொஞ்ச நாள்ல அரசாங்க பில்டிங்கையும் விக்கிறதுக்கு ஆரம்பிச்சுடுவாங்க. அது சரி இந்த கலெக்டர் ஆபிஸ் சாரு எவ்வளவு நாளா பேக்கரிக்கு வாராரு மாமா" டீ குடித்துக்கொண்டே கேட்டான் மாதவன்.
"டெய்லி நம்ம பேக்கரிக்கு வர கஸ்டமர் தான்டா."
"அப்ப சரி மாமா"
இலவச லேப்டாப்களை இவர்கள் இருவரும் வாங்குவது மட்டுமில்லாமல் வகுப்பில் உள்ள மற்ற "8 மாணவர்களையும்" வாங்க முடிவு எடுக்க வைத்தனர்.
"ஆஹோ சார், மாதவன் பேசுறேன். ஆனந்தா காலேஜ். லேப்டாப் விசயமா...!"
"ஆ...சொல்லூங்க தம்பி"
"அன்னைக்கு பேசுனா எனக்கும், ராமுக்கும் இன்னும் நம்ம கிளாஸ்ல 8 பேருக்கும் லேப் வேணும் சார்"
"10 லேப் இருக்குமானு பாக்கணும் தம்பி. செக் பண்ணிட்டு நான் ஈவினிங் போன் பண்றேன்."
ஈவினிங், தர்மா அவர்கள் மாதவனுக்கு போனில் பேசினார். "ஆஹோ தம்பி 10 லேப்டாப் வாங்கிகலாம். நாளைக்கு காலைல 10 மணிக்கு சேலம் பஸ்டாண்ட் முன்னாடி இருக்குற "கண்ணியம் லேப்டாப் சேல்ஸ் அண்ட் சர்வீஸ்" கடையில "மருது"னு ஒருத்தர் வேலை செய்யுறாரு. அவர்கிட்ட 10 லேப்புக்கும் 60000 பணத்த கொடுத்துறுங்க. 1 மணிநேரத்துக்கு பிறகு வந்து லேப்ப வாங்கிட்டு போங்க".
"1 மணி நேரம் ஆகுமா? அப்பவே வாங்கிட்டு போக முடியாதா?"
"தம்பி யாருக்கும் தெரியாம இலவச லேப்டாப் தான் உங்களுக்கு எடுத்து கொடுக்குறேன். நீங்க காசு கொடுக்குற மருது நம்ம ஆளு. உங்ககிட்ட காசு வாங்கிட்டு எங்க ஆபிஸ்க்கு வந்துருவான். நேக்கா லேப்டாப் வெளிய அவன்கிட்ட அனுப்பிச்சிடுவேன். இங்க இருக்க மத்த ஆபிஸருக்கும் காசு கொடுக்கணும் தம்பி. அப்பதான் அவங்க கண்டுக்கமாட்டாங்க. அந்த கடையில காசு கொடுத்துட்டு நீங்க வெயிட் பண்ணவும் வேணாம். யாருக்காவது சந்தேகம் வந்த பிரச்சனையாகியிரும். அதுக்கு தான் 1 மணிநேரத்துக்கு பிறகு வந்து லேப் வாங்கிக்க சொன்னேன். வழமையா இந்த மாதிரி தான் பொருட்கள விக்கிறோம்."
"ஓ...அப்படியா...! அப்ப ஓகே சார். நல்ல வர்கிங் கண்டிசனா பார்த்து அனுப்புங்க."
"சரி தம்பி."
மறுநாள் காலை 10 மணிக்கு மாதவனும், ராமும் லேப்டாப்புக்கான பணத்துடன் தர்மா சார் சொன்ன அந்த கடைக்கு சென்றனர்.
"மருது இருக்காங்களா?"
"நான் தான் சொல்லுங்க. என்ன வேணும்?"
"உங்ககிட்ட காசு கொடுக்க சொன்னாரு தர்மா சார்."
"ஆ... நீங்களா மொத்தம் 60000 தானேங்க."
"ஆமா அண்ணா ஒருமுறை எண்ணிங்கோங்க."
"சரியா இருக்கு தம்பி. கொடுத்துறேன்."
காலை 9 மணிக்கு நடந்து முடிந்த சம்பவம்.
"வாங்க சார் எப்படி இருக்கீங்க? என்ன வேணும்."
"நல்ல இருக்கேன்பா. கீபோர்ட் ஒண்ணு தாங்க நல்லதா."
"150 தாங்க சார். வேற எதாவது வேணுமா சார்."
"இல்லபா... டைம் வேற போகுது. தம்பி எனக்கு ஒரு உதவி செய்வீங்களா"
"சொல்லுங்க சார் என்ன செய்யணும்."
"எனக்கு தெரிஞ்ச பையன் 10 மணி மாதிரி வந்து 60000 காசு கொடுப்பான். அத வாங்கிவைக்க முடியுமா? எனக்கு அவசரமா ஆபிஸ்ல மீட்டிங் இருக்கு. 10.30 போல வந்து நான் காச எடுத்துக்குறேன்.
"ம்...முதலாளி கடையில இல்ல. லேட்டாதான் வருவாரு தெரிஞ்ச திட்டுவாரு. ஏன் வாங்கி வைக்கிறனு, அத யோசிக்க வேண்டியதா இருக்கு சார்".
"நீங்க சும்மா செய்ய வேணாம் தம்பீ. உங்களையும் கவனிக்கிறேன். 1000 தரேன்."
"ம்ம்...அப்ப சரி. வாங்கி வைக்கிறேன் சார்."
காலை 11.30 மணி பரபரப்பான காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர்க்கு முன்பாக ராம், மாதவன், மருது மூவரும் தலை குனிந்து கவலையுடன் நின்று கொண்டிருந்தனர்.
"ஏன்டா கலெக்டர் ஆபீஸ்ல வேல, லேப்டாப் விக்கிறேன், சொல்ற கடையில காசு கொடுங்க சொன்னான்னு இப்படி 60000 கொடுத்து ஏமாந்து இருக்கீங்களேடா... 2 முற தான் கடைக்கு வந்துருக்கான்னு நல்லவன் நினைச்சி நீயும் ஏன்,எதுக்கு காசு வாங்குறோம்னு கேட்காம, யோசிக்காம 1000க்கு ஆசைப்பட்டு அவனுக்கு "டெலிவரி பாய்" வேலையும் செய்து இருக்க. படிச்சவன் முட்டாள்னுங்குறது சரியா இருக்கு. கலெக்டர் ஆபீஸ்ல இப்படி நடக்குமா, அப்படியும் இலவச பொருள்கள விக்க முடியுமா, விக்கிறது எவ்வளவு பெரிய சட்ட விரோதம்னு, படிச்ச பசங்க நீங்க யோசிச்சு இருந்த இப்படி காச பறிகொடுத்து இருப்பிங்களா. 1000 கிடைக்குதுனு நீயும் உனக்கே தெரியாம அவனுக்கு பார்ட்னர் ஆகி இருப்பியா. அவன்மேல ஏற்கனவே 10 கேஸ் இருக்கு. அவனதான் தேடிக்கிட்டு இருக்கோம். டீவி, நியூஸ் பேப்பர்னு நாங்க விழிப்புணர்வு செய்தி கொடுக்குறோம். பாக்குறது இல்லையா நீங்க... நம்ம எங்க நீயூஸ் பாக்குறோம். உலகமே உங்க கைல செல்போன் வடிவத்துல அடங்கியிருந்தாலும் முக்கியமான செய்திகள விட்டு மத்தது எல்லாம் பாக்குறீங்க, கேக்குறீங்க. செல்போன் அடிமைத்தனத்திலிருந்து எப்ப வெளிய வறீங்களோ அப்பதான் முன்னேறுவீங்கடா. இதுல சைன் பண்ணிட்டு போங்க அவன் கிடைச்சா தகவல் சொல்றோம்" என இன்ஸ்பெக்டர் கோவத்துடன் பேசினார்.
"ஆஹோ, தர்மா பேசுறேன். இன்னிக்கி 60000 வேட்டை நல்லபடியா முடிஞ்சிருச்சி. கொஞ்ச நாளைக்கு நான் வெளிய வரமாட்டேன். எப்பவும் போல நீ தகவல்கள கலெக்ட் பண்ணி வெச்சீக்கோ. உன் பங்கு 15000 நாளைக்கு உன் கைல வந்து சேரும் குணா மாமா...!"

-சாந்தி ஜொ
Green and Pink Science Fiction Book Cover.jpg 8925091190
 

Author: Shanthi Jo
Article Title: இலவசங்கள் விற்பனைக்கு
Source URL: Neerathi-https://neerathi.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Back
Top