Shanthi Jo
New member
- Joined
- Apr 28, 2024
- Messages
- 6
"ஞானி போல வாழ்ந்து காட்டு என்று உன்னிடம் நான் சொல்லவில்லையே, மனிதனாக வாழு என்றுதான் சொன்னேன். ஆனால் இப்பொழுது என்னையே சிந்திக்க வைத்து விட்டாய் உன்னை படைத்தது தவறென்று"
ஹோலில் தனது கால்களை அகலமாக்கி இருந்த சோபாவின் மீது அமர்ந்து பேப்பர் வாசித்த ருத்ரன் காலிங் பெல் சத்தம் கேட்டதும் பேப்பரை கையில் வைத்துக் கொண்டே கதவை திறந்தார்.நீல நிற சட்டையும் கருப்பு பேண்ட் அணிந்த மாநிறமான 30 வயதுக்குட்பட்ட அவன், அழுத்திய பெல்லின் பதிலுக்காக காத்து கொண்டிருந்தான்.

"ருத்ரன் சார் வீடா"
"ஆமா தம்பி, யாரு நீங்க என்ன வேணும்"
"சார் என் பெயர் மனோகர். சாமிநாதன் சார் சொல்லி அனுப்புனாரு, கார் ஓட்ட டிரைவர் வேணும்ணு கேட்டு இருந்திங்கனு சொன்னாரு. நான் பக்கத்துல இருக்க நேதாஜி காலணி இருக்கேன் சார்".
"ஆ... ஆமாப்பா. ஆமா. உள்ள வா. உட்காரு வரேன்" என்று தன் எதிரே இருந்த சோபாவை காட்டிவிட்டு உள்ளே சென்றார் ருத்ரன்.
பனியனை போட்டுக் கொண்டு ஹோலுக்கு திரும்ப வந்த ருத்ரனுக்கு சிறிது ஆச்சரியமாக இருந்தது.
"என்ன தம்பி தரையில உட்காந்து இருக்க, எந்திரி" என்று சொல்லி அவனுடைய தோள்பட்டைகளை பிடித்து அவனை சோபாவில் இருக்க செய்தார். அவரும் அவனுக்கு அருகே அமர்ந்தார். இன்னும் இரண்டு பேர் வேண்டுமென்றாலும் உட்கார சோபாவும், அதை தாங்கும் தரையும் மௌனமாக தான் இருந்தது.
"இல்ல சார் எங்க சாதி ஆளுங்கள மேல உட்கார சொல்ல மாட்டாங்க. அப்படியே உட்காந்தாலும் நம்மல முறைச்சு பாப்பாங்க. கொஞ்ச நாளைக்கு முன்னாடி வரையிலும் எம்.எல்.ஏ வீட்ல டிரைவரா இருந்தேன். இரண்டு தடவ அவரு மருமகன் என்னைய தாண்டி போறத கவனிக்காம பொஸ்தகம் வாசிச்சுட்டு இருந்தேன். அவருக்கு வணக்கம் வைக்கமா பொஸ்தகம் வாசிச்சுட்டு இருந்தேனு சொல்லி திட்டுனாரு. மூணாது முற எம்.எல்.ஏ அடிச்சாரு சார். அத அங்கிருந்து விலக்கிட்டேன்."
மனோகர் சொன்னதை கேட்டுக் கொண்டிருந்த ருத்ரன், "நிரஞ்சன் இங்க வா" என்று சொன்னதும் எட்டு வயதான அவரது மகன் ஹோலுக்கு வந்தான்.
மகனை மனோகருக்கு அறிமுகப்படுத்திய ருத்ரன் இருவருக்கும் அம்மாவை டீ கொண்டு வர சொல்லுமாறு மகனிடம் சொன்னார்.
"தம்பி நீ ஒரு தப்பு பண்ணிகிட்டு இருக்கியே" என்று ருத்ரன், மனோகரிடம் சொன்னார்.
நான் என்ன சார் தப்பு பண்ணேன் என சொல்லிக்கொண்டே சோபாவில் இருந்து தயக்கமாக எழ முற்பட்டான்.
ருத்ரன் சிரித்தவாறே "ஏன் கீழ உட்காந்த" என்றார்.
மனோகர் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் தலையை சொறிந்து கொண்டு இருந்தான்.
"தம்பி நான் அரசாங்க அலுவலகத்துல வேல செய்றவன். என்ன விட பெரிய பெரிய அதிகாரிங்கிட்ட பயமில்லாம பேசுவேன். ஆனா என் பையன்கிட்ட பேசும்போது பயந்துகிட்டு தான் பேசுவேன.; காரணம் சாதரணமானது. என்ன பார்த்து நான் சொல்றத கேட்டு தான் அவன் வளருவான். உன்ன நா கீழ உட்கார வைச்சி பேசுணா அவனும் நாளைக்கு உன்னபோல இன்னொருத்தரையும் கீழ உட்கார வெச்சி தானே பேசுவான்."
ருத்ரன் பேசிக்கொண்டிருந்ததற்கு நடுவே அவரது மனைவி இருவருக்கும் டீ கொடுத்துவிட்டு மனோகரை பார்த்து புதிதாக வந்தவரை வரவேற்கும் புன்னகையை செலுத்திவிட்டு உள்ளே சென்றார்.
ருத்ரன் டீ குடித்துக் கொண்டே பேச்சை தொடர்ந்தார்.
"நீ கீழ உட்காந்தத பார்த்து உன் பையனும் கீழ உட்காருவான். அது அப்படியே தொடர்ந்துகிட்டே போகும் தம்பி. உன்ன அடிச்ச எம் எல் ஏக்கு இந்த வன்முற குணம் எப்படி வந்து இருக்கும். யோசிச்சு பாரு. அவரு வளரும்போது பார்த்த கேட்ட பழகுனததான் உன்மேல காட்டுனாரு. அவருக்குள்ள வன்முறை உருவாக காரணம் அவருக்கு சொல்லி கொடுத்தவங்க... அவங்களுக்கு முன்னாடி, அதுக்கும் முன்னாடினு இது போய்கிட்டே இருக்கும்... அரசியல்வாதிங்க ஜெயிச்சதும் ரோடு போட்டு தாறோம்னு சொல்றாங்க. ஆனா வெயில்ல க~;டப்பட்டு காய்ஞ்சு அந்த ரோட்ட போடுறது யாரு. தொழிலாளிங்க. ஆனா அவங்கள யாருக்கும் தெரியாது. அது அவசியமும் இல்ல. நீங்க போட்ட அந்த ரோட்டுல தான் நாங்க கார்ல போறோம். ஆனா நாங்க மேல, நீங்க கீழ. என்னப்பா நியாயம். பத்ததுக்கு உங்கள நீங்களே ஒதுக்கி வெச்சுக்குறீங்க. உன் உரிமைய யாருக்கும் விட்டுக் கொடுக்காத தம்பி. உனக்கு இப்படி நா சொல்றதுனால உடனே எல்லாம் மாறாது. ஆனா மாற்றத்துக்கான ஒரு ஆரம்பமா நீ இரு".
மனோகர் தான் பேசியதை கேட்டு தனக்குள்ளே இருந்த தாழ்வுமனப்பான்மையை தூக்கி எறிவான் என நினைத்துக் கொண்டு அவனை நாளையிலிருந்து வேலைக்கு வருமாறு சொல்லி அனுப்பினார் ருத்ரன்.
மறுநாள் மனோகரின் வீடு அமைந்துள்ள நேதாஜி காலணியில் எம.எல்.ஏ இலவசங்களை அள்ளி கொடுத்து கொண்டிருந்தார். எம்.எல்.ஏவுக்கு கார் கதவை திறந்துவிட்டு பழையபடி அவரிடமே காரை ஓட்ட தொடங்கினான் மனோகர்.
காந்தியின் அஹிம்சையை சொல்லும் மூன்று குரங்குகளும் அன்றைய பேப்பரில் சிரிப்பது போல இருந்த படத்தை பார்த்து ருத்ரனும் சிரித்தார்.
-சாந்தி ஜொ
(இலங்கை)
Author: Shanthi Jo
Article Title: காந்தி சொன்ன குரங்குகள்
Source URL: Neerathi-https://neerathi.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: காந்தி சொன்ன குரங்குகள்
Source URL: Neerathi-https://neerathi.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.