Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம் மக்களே! நீரதி உங்களை அன்போடு வரவேற்கிறது! கடிவாளமற்று எழுத ஆசையா neerathitamilsite@gmail.com மெயில் பண்ணுங்க!

KD

Administrator
Staff member
Joined
Apr 24, 2024
Messages
48
அத்தியாயம் 7

கடந்த காலம்


மனதை குத்திக் கிழிக்கும் சம்பவங்கள் எல்லாம் நடந்து முடிக்க, அகத்தியன் மற்றும் அம்பிகாவின் உயிர் போக காரணமானவர்களை கட்டாயம் கோர்டில் ஏற்றிட வேண்டும் என்று முடிவெடுத்தனர் செழியனும் கபிலனும்.

எவ்வளவோ முயற்சித்தும் அம்பிகாவின் தாலி கொடியை பறித்த அப்பதின்ம வயது இளைஞர்களை கண்டு பிடித்திடவே இயலவில்லை. அவர்களை தேடும் பணியை முடக்கி விட்டு ஓரந்தள்ளி, கபிலன் செழியன் இருவரும் லாரிக்காரன் மீது கவனம் செலுத்தினர்.

அகத்தியனை இடித்து ஓடிய லாரிக்காரனை பிடித்து முட்டிக்கு முட்டி தட்டினார் கபிலனின் நண்பர் புகழரசன். லாரிக்காரனோ அவனின் பிள்ளை குட்டி கதையெல்லாம் செல்லிட கபிலன் என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பினார்.

லாரியின் உரிமையாளனோ நேரடி பேச்சு வார்த்தை நடத்திக் கொள்ளலாம் என்றுக் கூறி கெஞ்சினான் கேஸ் ஏதும் வேண்டாமென்று. புதிதாய் தொழில் தொடங்கி இப்போதுதான் ஆறு மாதம் என்றவன் கருணை காட்டும் படி வேண்டினான்.

மொத்த பணத்தையும் இதில் போட்டிருப்பதாய் வேறு சொல்லி கபிலன் செழியன் இருவரின் காலையும் பிடித்தான். போனவர்கள் திரும்பி வரப்போவதில்லை என்ற உண்மை கசந்தாலும் அதை ஏற்றுக் கொண்டு கேஸை திரும்பி வாப்பஸ் வாங்கிக் கொண்டனர் செழியனும் கபிலனும்.

எதுவும் இழுவையாக இழுத்திடாமல் காதும் காதும் வைத்தாற்போல போலீஸ்காரர் புகழரசன் நடுநிலையாய் இருந்து அனைத்தையும் முடித்துக் கொடுத்தார்.

நாட்கள் கடக்க அனைவரும் நடந்த சம்பவத்தை மறந்து எப்போதும் போல வாழ்க்கையை ஒட்டிட ஆரம்பித்தனர். அத்தை கஸ்தூரி கர்ணாவிற்கு அம்மாவாகி போனார்.

அம்பிகாவின் ஸ்தானத்தில் கர்ணா அவன் அத்தையை நிறுத்தினான். அதனால், கண்மணி அவனுக்கு தங்கையாகிப் போனாள். அவன் பார்வையும் சரி எண்ணமும் சரி ஒரு அண்ணனாகவே பதிந்தது அவளிடத்தில்.

மாமன் அண்ணனாக, மூன்று அண்ணன்களின் இளவரசியாக செல்லங்கொஞ்சினாள் கண்மணி. காதலும் சரி காதல் கடிதமும் சரி கண்மணியை பேச்சுக்குக் கூட எட்டிப் பார்த்ததில்லை. திகழ் மற்றும் தரன் தங்கை என்பதால் அல்ல, கர்ணா அவளின் அண்ணன் என்பதால்.

கர்ணா சிறு வயதிலிருந்தே ஆண்கள் பள்ளியில் படித்தவன். பெண்கள் வாடை என்னவோ அவன் மீது பட்டிட மன்மதன் ஒத்துழைக்கவே இல்லை. போலீஸ் அவனின் எதிர்கால ஆசைகளில் ஒன்றாக இருந்ததே இல்லை.

முதலில் டாக்டர், இரண்டாவது கராத்தே மாஸ்ட்டர் (karate master) மூன்றாவது ட்ரம்மர் (drummer). குடும்பம் தொடங்கி ஏன் அவனே கூட நினைத்திருந்தான் கர்ணா ஒன்று மருத்துவம் பார்ப்பான் இல்லையென்றால் கராத்தே சண்டை போட்டிடுவான் என்று.

ஆனால், யாரும் எதிர்பார்த்திடவே இல்லை, எட்டு வயதில் அவனுக்கு நடந்த சம்பவம் கர்ணாவின் எதிர்காலத்தை மாற்றியமைக்கும் என்று. அவன் அம்மாவின் உயிர் போக காரணமாய் இருந்த கயவர்களை எப்படியும் தண்டித்தாக வேண்டும் என்ற எண்ணம் அவனுக்குள் வேரூன்றியது.

அதற்காக கர்ணா கையிலெடுத்த ஆயுதமே அவனின் போலீஸ் உத்யோகம். படிப்பு பயிற்சி எல்லாம் முடிய முதலில் அவன் தேடிப்பிடித்து தூக்கில் போட்டது அம்பிகாவின் உயிரை எடுத்த திருடர்களைத்தான்.

அப்பா அகத்தியனின் உயிரை கொன்ற லாரிக்காரனையும் விட்டு வைத்திடவில்லை கர்ணா. இவ்விடயத்தில் கர்ணாவிற்கு எமன் பளுவை குறைத்திருந்தான்.

லாரிக்காரன் சில வருடங்களுக்கு முன் குடிபோதையில் லாரியை ஓட்டிட, தடம் புரண்ட லாரியோ எடுத்திருந்தது அவன் உயிரை. சம்பவம் நிகழ்ந்தது அதே பிரதான சாலையில் தான். கர்ணாவின் அப்பா அகத்தியன் உயிர் துறந்த அதே சாலை தான்.

லாரியின் உரிமையாளனை காண சென்ற கர்ணா அவனை எச்சரித்தான் வருங்காலத்தில் அவன் பணிக்கு அமர்த்தும் ஊழியர்களை சரியாக கண்காணிக்கும் படி.

பழைய வழக்கான இதை தூசி தட்டுகையில் தான் அறிந்துக் கொண்டான் கர்ணா, முன்னாளில் இவ்வழக்கு கபிலன் மற்றும் செழியன் மாமாவால் கைவிடப்பட்டது என்று. அதற்கு ஒத்தாசை புகழரசன் என்ற போலீஸ் என்று.

வீடு திரும்பியவன் சிங்கமாய் கோப்பினை நடு வீட்டில் விசிறியடித்து கர்ஜிக்க, சித்தப்பா செழியனோ தானும் கபிலனும் இருந்த அப்போதைய சூழ்நிலையை விளக்கிட எதையும் காதில் போட்டுக் கொள்ள கர்ணா தயாராகவே இல்லை.

அவனின் போலீஸ் சட்டையை இறுக்கிப் பிடித்த சித்தி சந்தியா, அண்ணன் கபிலன் மற்றும் கணவன் செழியன் இருவருக்காகவும் பேசிட; கர்ணாவோ கொஞ்சமும் மசியாமல் அவன் பெற்றோருக்கு அநீதி நிகழ்ந்து விட்டதாகவே வாதாடினான்.

நன்றி கெட்டவர்கள் தம் பெற்றோருக்கு நம்பிக்கை துரோகம் இழைத்து விட்டதாய், கர்ணன் பேச்சு வாக்கில் சினங் கொண்டு தவறுதலாக வார்த்தை ஒன்றை விட்டிட.., அதுவே பெரிய பூகம்பத்தை கிளப்பியது குடும்பத்துக்குள்.

அவன் சொன்ன வார்த்தையையே பிடித்துக் கொண்ட சித்தி சந்தியாவோ கர்ணாவோடு சண்டை போட, தடுக்க வந்தான் திகழ் நடக்கின்ற சலசலப்பை. பேச்சு கைமீறி போக, மல்லுக்கட்டி கோபம் தாளாது கர்ணன் நாற்காலியை இறுக்கி தூக்கியடித்தான் மூத்தவன் திகழை நோக்கி.

இருவரும் அடித்து உருண்ட, சண்டையை தடுத்திட செழியனும் சந்தியாவும் எவ்வளவோ போராடி தோற்றுத்தான் போயினர். அண்ணன் என்றும் பாராமல் மருத்துவம் படிக்கின்ற திகழை புரட்டி எடுத்து வைத்தியம் பார்த்திருந்தான் கர்ணா கொஞ்சமும் பொறுமையின்றி.

அடித்துக் கொண்டவர்கள் அவர்களாகவே மூச்சு வாங்கி பிரிந்துக் கொண்டனர். திகழ் முகமெங்கும் வீங்கி உதடு கிழிந்து கிடந்தது. கர்ணாவின் முகமும் சும்மா இல்லை குத்தி தான் வைத்திருந்தான் திகழ். அவன் மட்டும் என்ன லேசு பட்ட ஆளா என்ன.

கண்ணிமைக்கும் நொடியில் எல்லாம் நடந்து முடிந்திருந்தது. மூச்சிரைக்க அடித்துக் கொண்டாலும் பெற்றவர்களை போல் அல்ல சின்னவர்கள். அதுதான் சகோதர பாசம். கர்ணாவின் நெற்றியில் திகழ் நகம் பட்டு கீறி ரத்தம் லேசாய் கசிய அதைக்கூட திகழ் அவனின் புறங்கையால் துடைத்து விட்டான். ஆனால், கர்ணா என்னவோ இன்னும் முறுக்கிக் கொண்டுதான் இருந்தான்.

நடந்தவைகளை சற்றும் ஏற்றுக் கொள்ள பெத்த வயிறால் இயலவில்லை. சித்தி சந்தியா நம்பிக்கையும் மரியாதையும் இல்லா வீட்டில் இனி ஒரு நிமிடமும் இருக்க முடியாது என்று ஆர்ப்பாட்டம் செய்து வீட்டை விட்டு வெளியேறினார் மகன் திகழ் இலயனோடு.

கர்ணா எவ்வளவோ கெஞ்சியும் சித்தி மனம் இறங்கவில்லை. திகழ் கூட அவன் அம்மாவிடம் பேசினான். பலனில்லை. செழியன் கூட சத்தம் போட்டார். மாற்றமே இல்லை.

வீடே ரெண்டு பட்டு போனது. சந்தியா விருட்டென்று பாய்ந்து கர்ணாவின் பிஸ்ட்டலை எடுத்து தலையில் இறுக்கிட, பதறிய அனைவரும் அவர் சொல்லுக்கு இணங்கி நடக்க ஆரம்பித்தனர்.

எவ்வித பொருளையும் எடுத்திடாமல் திகழ் மற்றும் செழியன் காருக்குள் ஏறிட கையிலிருந்த கைத்துப்பாக்கியை தூர வீசி முகத்தை கைகளால் மூடிக் கொண்டு கதறினார் சித்தி காருக்குள், வலி கொண்ட மனதோடு தூக்கி வளர்த்தவன் துரத்தி ஓடி வருவதை பார்த்திட முடியாமல்.

ரோஷம் யாருக்குத்தான் இல்லை. சந்தியாவிற்கு அதிகப்படியாகி போக எல்லாமும் கை மீறி போயிருந்தது.

கோவிலுக்கு சென்று திரும்பியிருந்த கபிலன் கஸ்தூரி இருவரும் வீட்டுக்குள் நுழைய வீடோ அலங்கோலப்பட்டு கிடந்தது. கஸ்தூரியை ஓடிச்சென்று கட்டிக் கொண்டவன் நடந்தவற்றை ஒன்று விடாமல் ஒப்புவிக்க, மேற்கொண்டு ஆக வேண்டியதை பெரியவர்கள் பார்த்துக் கொண்டார்கள்.

கபிலன் கஸ்தூரி பலமுறை பேசியும் பலனில்லை. சந்தியா முடியவே முடியாது அவ்வீட்டிற்கு திரும்பிட என்று திட்டவட்டமாக சொல்லிட, முடிவெடுத்தான் கர்ணா.

வேலை பார்த்திடும் இடத்திலேயே தங்கி கொள்ள ஆரம்பித்தான் தனியாய். சந்தியா அப்போதும் மனம் மாற்றம் கொள்ளவில்லை. கர்ணா வீட்டிற்கு செல்வதையே முழுதாய் தவிர்த்தான். அப்போதாவது சித்தி சந்தியா, அண்ணா திகழ் மற்றும் சித்தப்பா செழியனோடு வீடு திரும்பட்டுமே என்று.

அவன் நினைத்ததைப் போல நடக்கவேயில்லை. கபிலன் மாமாவோடு பேசுவதை முடிந்த அளவு தவிர்த்தான் கர்ணா. அவர் விளக்கத்தை ஏற்றுக் கொள்ளும் மனதிடம் இப்போதைக்கு இல்லை என்று சொல்லி விட்டான்.

ஒரு வருடம் சட்டென்று ஓடி முடிய, கண்மணிக்கு வரன் பார்த்திருந்தார்கள் கஸ்தூரியும் கபிலனும். சம்பந்தம் அருமையாக பொருந்தி வர நல்ல காரியத்தை தள்ளிப் போடாது உடனேயே கண்மணியின் நிச்சயத்தை நடத்திட பெற்றோர்கள் முடிவெடுத்தனர்.

கர்ணா வந்திருந்தான் கஸ்தூரி அழைத்திட, கண்மணிக்கு வரன் பேசிட ஆரம்பித்த நாளிலிருந்தே கர்ணா அங்கிருந்துதான் வேலைக்கு சென்று வந்தான்.

அப்படி ஒரு நாள், கர்ணா காலையிலேயே வரவேற்பறையில் அமர்ந்து காஃபியை குடித்துக் கொண்டிருக்க முனகிக் கொண்டே வீட்டுக்குள் வந்தாள் தீப்சந்தினி. கண்மணியின் ஆருயிர் தோழி.

அவளோடு அவள் அம்மாவும் வந்திருந்தார். அவர் நேராக கஸ்தூரியை பார்த்திட அடுக்களை போக, மகளோ சோஃபாவில் அமர்ந்திருந்த கண்மணியின் பக்கம் சென்று அமர்ந்தாள்.

கர்ணா காஃபியை நெட்டிக் கொண்டே அவளை கப்பின் ஊடே ஏறெடுக்க, அவளோ பெருமூச்சு விட்டு பேச ஆரம்பித்தாள். ஆனால், அவள் ஸ்பீக்கருக்கு முன்னாள் அவளின் அம்மா ஸ்பீக்கர் திறக்க அவள் அமைதியாகிப் போனாள்.

''பாருங்க கண்மணியம்மா முதலல்லாம் மாப்பிள்ளை பார்த்தா.. கண்மணிக்கு பார்க்கலன்னு சொல்லி வேண்டாம்னா..''

கண்மணி தோழி தீப்தியை திரும்பி பார்க்க, அவளோ மொத்த பல்லையும் காட்டினாள்.

''இப்போ.. கண்மணிக்கு பார்த்தாச்சு.. உனக்கு பார்க்கலாம்னு சொன்னா.. வர மாப்பிள்ளை எல்லாத்தையும்.. கண்ணு சின்னதா இருக்கு.. மூக்கு பொடப்பா இருக்கின்னு வேணாங்கறா..''

கண்மணியோ அருகிலிருந்தவள் தொடையை திருகினாள்.

''என்னடி.. இதெல்லாம் ஒரு காரணமா..''

எரியாத தொடையை தேய்த்து நடித்தாள் தீப்தி.

''ஸ்ஷ்ஹ்.. ஆஹ்.. வலிக்குதுடி..''

''எது.. நான் இப்போ திருகனது..''

உதட்டை பிதுக்கி அவள் பாவமாய் உம் கொட்டி தலையாட்டிட, திடுக்கிட்டாள் கர்ணா டக்கென்று கேள்வி கேட்க. விக்கல் வராதா குறைதான் அவளுக்கு.

''ஒய்.. தீப்தி.. என்ன பிரச்சனை உனக்கு.. ஏன் கல்யாணம் வேணாங்கறே.. யாரையாவது லவ் கீவ் பண்றியா என்ன..''

அவளை அவன் பாணியில் விசாரித்த கர்ணா எழுந்தான் நாற்காலியிலிருந்து. கேபினெட் நோக்கிச் சென்று எடுத்து கட்டினான் அவனின் கைக்கடிகாரத்தை இடது கரத்தில்.

தீப்தியின் மண்டைக்குள் ஓடியது ஒரே ஒரு வாக்கியம் மின்னலாய் பலமுறை.

'விட்றாதே தீப்தி.. விட்றாதே.. சொல்லிடு.. சொல்லிடு.. பட்டுணு போட்டு உடைச்சிடு..'

நீண்ட பெருமூச்சு இழுத்து விட்டவள் சொன்னாள்.

''ஆமா.. காதல் தான் பண்றேன்..''

''தோ.. அவளே சொல்லிட்டாளே.. அப்பறம் என்ன.. அவ யார காதலிக்காறாளோ அவனை பிடிச்சு இழுத்துட்டு வந்து கட்டி வைங்க.. பிரச்சனை முடிஞ்சது..''

கூலாகா சொல்லிய கர்ணா பைக் சாவியை கையிலெடுத்து சுழற்றியப்படி வாசல் நோக்கி நடந்தான்.

'கடவுளே! கடவுளே! நீதான் காப்பாத்தணும் புலி கடிச்சு திண்ணாமே!'

மனதுக்குள் பிராதித்துக் கொண்ட தீப்தி டக்கென்று வார்த்தைகளை கடகடவென கொட்டி தீர்த்தாள் கண்களை இறுக மூடி.

''கட்டிவைங்கன்னு சொல்லிட்டு நீங்க பாட்டுக்கு போனா என்ன அர்த்தம் கர்ணா.. நான் உங்களத்தான் காதலிக்கறேன்.. உங்களத்தான் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறேன்..''

மொத்த குடும்பமும் ஒரு சேர ஷாக்காகி நின்றனர். வேலைக்காரர்கள் முதல். வரவேற்பறை வந்து ஸ்தம்பித்து நின்றனர். அதிர்ச்சியில் தீப்தியின் அம்மா கண்மணியம்மாவின் கரம் இறுக்கி நிற்க, கண்மணியோ குடித்த காஃபியை துப்பியிருந்தாள் வியப்பு தாளாமல்.

தீப்தியோ கைகளை பிசைந்துக் கொண்டு நின்றாள். மூச்சு வாங்கியது அவளுக்கு பயத்தில். வியர்வை துளிகளோ கழுத்திறங்க படபடத்து இருந்தவள் கர்ணாவின் முதுகையே வெறித்திருந்தாள்.

கர்ணாவோ அடிகள் நிறுத்தி ரொம்ப நேரம் ஆகியும் திரும்பிடவே இல்லை மற்றவர்களின் முகம் பார்த்திட.

''வாவ்!!! (wow!!!) தீப்தி.. சூப்பர்யா.. (super) என்னா ஃபீலிங்.. (feeling) என்னா லவ்.. (love )..''

கர்ணா சொல்ல சொல்ல பக்கு பக்கு என்றது தீப்தியின் இதயம்.

''It's really a good proposal Deepthi.. Perfectly amazing!!!
(இது ஒரு நல்ல ப்ரோபோசல் தீப்தி.. நிஜமாவே நிறைவா இருந்துச்சு!!!)

கர்ணா திரும்பினான் மற்றவர்களின் அதிர்ச்சி முகம் பார்த்திட. இடுப்பின் இருப்புறமும் கைகளை இறுக்கியவன் தோள் தூக்கி உதடு உதடு பிதுக்கினான் ஆழ்ந்த மூச்செடுத்து விட்டு கைகளைத் தட்டினான்.

''Nice try! But, I'm not impressed! Better luck next time! Bye!''
(நல்ல முயற்சி.. இருந்தாலும் என்ன கவரலை.. அடுத்த தடவ முயற்சியில வெற்றி பெற வாழ்த்துக்கள்.. போய்ட்டு வரேன்..)

கர்ணாவின் வார்த்தைகளில் அனைவரையும் கவலையோடு தொங்கிப் போக, தைரியத்தை வரவழைத்துக் கொண்டவள் நிறுத்தினாள் அவனை.

''உங்களுக்கு என்ன பிடிக்கலையா கர்ணா..''

''பிடிக்கும் தீப்தி.. நீ நல்ல பொண்ணு.. மரியாதை தெரிஞ்ச பொண்ணு.. முக்கியமா சமைக்க தெரிஞ்ச பொண்ணு.. மேக் ஆப் குறைச்சலா போடறே பொண்ணு..''

''அப்பறம் என்ன.. ஏன் தீப்தியை வேணாங்கறே..''

இடையில் புகுந்தாள் தங்கை கண்மணி.

''பிடித்தல் வேறே காதல் வேறே..''

என்றவன் கண்மணியின் நெற்றியில் ஒரு அடி வைத்து அவளை பின்னோக்கி தள்ளி, கையிலெடுத்தான் கர்ணா மறந்திருந்த அவனின் கடா காப்பினை மேஜையிலிருந்து.

''இப்போ காதல் இல்ல.. காதலிக்கல.. ஆனா, வரவே வராதுன்னு சொல்ல
முடியாதுல..''

தீப்தி நம்பிக்கையான தொனியில் கேட்டாள்.

விரலை சுண்டி திரும்பினான் கர்ணா வாசல் வரை போனவன் மீண்டும்.

''Well.. Yes.. you right.. But, I'm not interest..''
(ஹ்ம்ம்.. ஆமா.. நீ சொல்றது சரிதான். ஆனா, எனக்கு விருப்பம் இல்ல..)

சொன்னவன் வழக்கம் போல வாசல் கதவை ஏறெடுக்க அங்கே சித்தி
சந்தியா சித்தப்பா செழியனோடு நின்றிருந்தார். அந்த ஒரு நொடியில் உலகம் தலைகீழாய் ஆனது ஆனந்தத்தில் கர்ணாவிற்கு.

சந்தியாவை கண்ட கஸ்தூரி வாசல் ஓடிவர, இரு பெண்களும் கைகள் கோர்த்து உள்ளே பரிதவித்து நின்றிருக்கும் தீப்தியை எட்டி பார்த்தனர். கர்ணாவையும் பார்த்திட அவனுக்கு புரிந்தது.

''ஏதோ பண்ணிட்டு போங்க..! பண்ணிட்டு போங்க..!''

என்றான் வேறெங்கோ பார்த்தப்படி இதழில் புன்னகையை பதுக்கி.

கஸ்தூரியோடு சந்தியா இல்லம் நுழைய, சித்தப்பா எப்போதோ சோஃபாவில் ஐக்கியம் ஆகியிருந்தார்.

என்ன இப்படி சொல்கிறான் என்று அனைவரும் புரியாமல் குழப்பத்தில் நிற்க அவனின் முதுகையே பார்த்து, அதிரடியாக சொன்னான் வாசற் கதவின் இருப்பக்க தூணையும் பிடித்து நின்றவன் அவனின் பாணியில்.

''தேதி, டைம், இடம் மட்டும் மறக்காமே சொல்லிடுங்க வந்து தாலி காட்டிடறேன்.. ஓகே..''

பிறகென்ன அவன் சொன்னதே போதும் என்று குடும்பமே கல்யாண வேலையை கவனிக்க ஆரம்பித்தது. நிச்சயம் ஏதும் வேண்டாம் நேராய் கல்யாணம்தான் என்று முடிவானது.

சிகரெட் துண்டு கையை சுட்டிட, பழைய நினைவிலிருந்து விடுப்பெற்றான் கர்ணா.

அவன் கொண்டு வந்து வைத்த அப்பையிலிருந்த வாசனைத் திரவிய போத்தலை கையிலெடுத்தான். அதன் மூடி திறந்து அதை அவளின் கல்லறையை சுற்றீரும் அடித்து விட்டான்.

அதே போத்தலை தூக்கியடித்தான் கர்ணா அக்கல்லறையின் மீது. உடைந்து சிதறியதுகண்ணாடி போத்தல். கோபம் கொப்பளித்து கிடந்தது அவனின் இறுகிய முகத்தில். கழுத்து நரம்புகள் புடைத்துக் கொள்ள எட்டி உதைத்தான் பல உதைகள் அவளின் கல்லறையை.

காரின் ஹார்ன் சத்தம் கேட்க, திரும்பியவன் கௌதம் வந்து விட்டதைக் கவனித்தான்.

கையிலெடுத்தான் கல்லின் ஓரத்தில் வைத்திருந்த ரோஜா பூங்கொத்தை. அதையும் பார்த்தான் கல்லறையில் தீப்தியின் முகமும் பார்த்தான்.

சொல்லிடா முடியா ஆத்திரத்தில் முறைத்தான் அவளின் படத்தை பார்த்த கர்ணா. சிகரெட்டை வேறு வேக வேகமாக இழுக்க காரிலிருந்து அலறினான் கௌதம்.

''டேய்! நீயெல்லாம் எதுக்குடா பூங்கொத்து வாங்கிட்டு வர.. பாவம் அந்த ரோஜாப்பூ எத்தனை தடவ செத்துச்சோ!''

குடித்து முடிக்காத சிகரெட்டை கீழே போட்டு காலணி கொண்டு மிதித்தான் கர்ணா பல்லை கடித்துக் கொண்டே.

''டேய் கர்ணா.. வாடா.. எத்தனை தடவடா செத்தவள சாகடிப்பே..''

கௌதம் புலம்பிட, கர்ணாவோ பூங்கொத்தை தூக்கி விசிறியடித்தான் தீப்தியின் கல்லறையில்.

''இப்பவும் எனக்கு வரல!''

கத்தி சொன்னவன் இருக்கரமும் இடுப்பை இறுக்கிட அவளின் சிரித்த முகத்தையே பார்த்தான்.

தீப்தி சொன்னது போல் அவள் இறந்த பின்னும் கர்ணாவிற்கு அவளின் பால் காதல் வரவில்லை என்று உரைத்தவன் வேக வேகமாய் ஏறினான் கௌதமின் காரில் அவன் வீட்டிற்கு கிளம்பிட.

துரத்திடுவான் கர்ணா பாம்ஷெல்லை..

முந்தைய அத்தியாயங்களை படிக்க:


https://neerathi.com/forum/forums/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B.137/
 
Back
Top