Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம் மக்களே! நீரதி உங்களை அன்போடு வரவேற்கிறது! கடிவாளமற்று எழுத ஆசையா neerathitamilsite@gmail.com மெயில் பண்ணுங்க!

Shanthi Jo

New member
Joined
Apr 28, 2024
Messages
6
"ஒண்ணு, ரெண்டு, மூணு, நாலு. ம்....நாலு...செவுத்துல ஒண்ணு தொங்குது அதோட ஐஞ்சு.

பார்த்திபன் ஹாலிலிருந்து "பிரபா ரெடியாகிட்டியா? சீக்கிரம் வா, ஸ்கூலுக்கு லேட் ஆகுது" என்று மகனை சத்தம் போட்டார்.

அப்பாவின் குரலைக் கேட்டதும், 10 வயது பிரபா, இலவசமாக கிடைத்த இலட்சுமி, சரஸ்வதி, முருகன் இருபுறமும் வள்ளி, தெய்வானையுடன் சிரித்தாற்போல இருந்த, புது வருட காலண்டர்களை எண்ணி அவன் உயரத்திற்கு குறைவாக உள்ள ஷெல்பில் அடுக்கி வைத்து விட்டு பேக்கை மாட்டிக் கொண்டு ஹாலுக்கு செல்கிறான்.

மருதுசாலை தெருவில், அந்த சாலை தெருவில் உயர்ந்த மரங்களை விட, உயரமாக நிமிர்ந்து நிற்கிற பெரிய வீடு தான் பார்த்திபனின் வீடு. அந்த தெரு ஜனங்கள் அந்த வீட்டை செல்லமாக பெரிய வீடு என்றும் அழைப்பதும் உண்டு.

ஜமுனாவும், பார்த்திபனின் ஆபிஸ் பைல்கள் அடங்கிய பேக்குடன் ஹாலுக்கு வருகிறாள்.

ஜமுனாவை பார்த்ததும் பார்த்திபன் "இன்னைக்கு ஈவ்னிங் பிரபாவ டியூசனுக்கு அனுப்ப வேணா, ரெடியா இருங்கா ரெண்டு பேரும். நியூ இயர் பர்சசிங் பண்ண போவோம்" என்றார்.

"ஹாய்ய்... எனக்கு ரெண்டு டிரெஸ் வேணும் அப்பா"

"சரிடா பிரபா அப்பா வாங்கி தரேன்"
வெளியே காரை துடைத்து கொண்டு இருந்த சண்முகம், முதலாளி பார்த்திபனை பார்த்ததும் வணக்கத்தை சொல்லி விட்டு பவ்யமாக நின்று கொண்டிருந்தான்.

"ஐயா... ஒரு சின்ன உதவி செய்யணும்"

"சொல்லு சண்முகம் என்ன வேணும்"

"ஐயா இன்னும் 3 நாள்ல புது வருசம் பொறக்கபோகுது. வீட்ல மகனுக்கு டிரெசு வாங்கணும், அடுத்த மாச சம்பளத்துல 1500 கொடுத்த உதவிய இருக்கும்"

"இந்த பாரு சண்முகம் நீ வேலைக்கு வந்து 8 மாசம் தான் ஆகுது. மாசம் சம்பளம் 5 தேதி தான் கொடுக்குறேன். இந்த மாசமும் கொடுத்துட்டேன். இனி அடுத்த மாசம் 5 தேதி தான் சம்பளம். புது வருசம் வருதுனு நான் ஒண்ணும் பண்ண முடியாது. போய் வேலைய பாரு" என்று சொல்லி விட்டு காரில் புறப்பட்டார்.

சண்முகம் பார்த்திபனிடம் வேலைக்கு சேர்வதற்கு முன்பு வரை விவசாயம் செய்தவர். பேங்கில் நிலத்தை அடமானம் வைத்து கடன் வாங்கி கட்ட முடியாமல் நிலத்தை பறிகொடுத்த பலரில் சண்முகமும் ஒருவர். இப்பொழுது மனைவி, மகனின் நலனை கவனிப்பதற்காக தன் மனதை கல்லாக்கி கொண்டு வேலை செய்யும் பார்த்திபனின் வேலைக்காரன்.

"ஏம்பா, சண்முகம் அங்கிள்க்கு காசு கொடுக்கல" என்று பிரபா கேட்டான்.

"பிரபா அவனுங்க இல்லாதவங்க, நம்ம இருக்குறவங்க. இருக்குற நம்ம இல்லாத அவங்க கேட்டதும் உடனே கொடுத்தோம்னா, நம்ம மதிப்பு தெரியாம போய்ரும். நமக்கும் மரியாத இல்லாம போய்ரும். கொஞ்சம் அலைய விடணுடா அவங்கள. அப்போ தான் அவங்க நம்ம காலையே சுத்திட்டு வருவாங்க"

"அதுதாம்பா நீ அன்னைக்கு சொன்னது போல கிளாஸ்ல நான் யாருக்கும் பென்சில் கடன் கேட்டாலும் கொடுக்குறதில்ல"

"நம்மள மாதிரி காசு வச்சு இருக்க பசங்க கேட்ட கொடு. வேற யாருக்கும் கொடுக்காத" என்று தன் குணத்தை மகனுக்கு வாரி இறைத்தார் பார்த்திபன்"
மருது சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள வீடுகளில் உள்ள பிள்ளைகள் பெரும்பாலும் மருது சாலையில் உள்ள வித்யா டீச்சரிடம் தான் டீயூசனுக்கு வருகிறார்கள். வித்யா டீச்சர் வட்டமான முகமும் ஒல்லியாக சிவப்பாக இருப்பவர். பிறக்கும்போதே இடது கால் செயல் இல்லாததால் அவர் உயரத்திற்கு ஏற்றவாறு தடி ஒன்றை ஊனி நடப்பவர்.
பிரபாவும் பள்ளி முடிந்து மாலையில் அங்கு தான் டியூசன் போவான்.
அதே டியூசனில் படிக்கும் ரங்கா, அன்று அவன் வீட்டு பக்கத்தில் உள்ள மளிகை கடையில் அண்ணாச்சி தனக்கு கொடுத்த காலண்டரை டியூசனுக்கு கொண்டு சென்றான்.

"உண்மை உழைப்பு உயர்வு, அண்ணாச்சி மளிகை கடை" என்ற வாசகத்துடன், கலைநயமான முகமும் தலையில் பொன் நிற கிரீடத்துடன் நான்கு கைகளில் இரு கைகள் சிறிய தாமரை மலரை தாங்கியபடியும் மற்ற இரு கைகளான வலது கையில் பொற்காசுகள் விழுவதும் இடது கையில் பொன் கூடத்தை வைத்து இருப்பதுமான தாமரை மலரில் அமர்ந்தப்படி, லட்சுமி கடவுள் காட்சி அளிப்பதுமாக இருந்த அந்த காலண்டரை பார்க்கும் போது நமக்கே கை எடுத்து கூம்பிட தோணும்.

ரங்காவின் அந்த காலண்டரை மற்ற பிள்ளைகள் வாயை திறந்து ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தார்கள்.

பின்புறம் இரண்டு வரிசை தள்ளி அமர்ந்திருந்த பிரபாவும் சீனுவும் ரங்காவின் காலண்டரை பார்க்க முன் சென்றார்கள்.

"உங்கிட்ட எத்தன காலண்டர் இருக்கு ரங்கா" என்று பிரபா கேட்டான்.

"ஓண்ணு தான் பிரபா"

"எங்க வீட்ல ஆறு காலண்டர் இருக்கு தெரியுமா. நேத்து நான் நியூ ஈயர் டிரெஸ் வாங்க போன கடையிலும் காலண்டர் ஒண்ணு கிடைச்சிச்சி" என பிரபா சொல்ல சீனுவும் "தெரியுமா!" என்ற பாணியில் நக்கல் செய்தான்.

"எனக்கு ஒண்ணு தறியா" என்று சர்மி கேட்டாள்

"நான் யாருக்கும் கொடுக்க மாட்டேன" என பிரபா சொல்லி விட்டு தன்னுடைய இடத்திற்கு சென்று அமர்ந்தான்.
சிறிது நேரத்தில் உள்ளே வந்த வித்யா டீச்சர் பாடத்தை ஆரம்பிக்க தொடங்கினார்.

"பிள்ளைகளா இன்னையில இருந்து ஸ்கூல் ஹோம்வொர்க் மட்டும் செய்து முடிச்சிட்டு போறது இல்லாம ஒவ்வொரு நாளும் ஒரு திருக்குறள் தெரிஞ்சிக்க போறீங்க. சரி இன்னைக்கு நாம என்ன திருக்குறள் பார்க்க போறோம்னா அதிகாரம் - 11 செய்நன்றி அறிதல்."

"மத்தவங்க நமக்கு கொடுக்குற கஷ்டத்த விட, அவங்க நமக்கு செஞ்ச உதவிய தான் நினைச்சு பாக்கணும். மத்தவங்க செஞ்ச உதவிய மறந்தவங்க வாழ்க்கைல உயர முடியாது."

"பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது."


"இந்த குறளுக்கு அர்த்தம் என்ன தெரியுமா? சொல்றேன் கேளுங்க. எந்த எதிர்பார்ப்பும் இல்லாம மத்தவங்த நமக்கு செய்ற உதவி இருக்குதானே, அது கடல விட பெரிசு அப்படினு வள்ளுவர் சொல்றாரு. பசங்களா, மத்தவங்களுக்கு நீங்க உதவி செஞ்ச கடவுள் உங்களுக்கு என்ன வேணுமோ அத குடுப்பாரு. மறக்காதீங்க சரியா."

டியூசன் முடிந்து வீட்டிற்கு கிளம்பும் முன் ரங்கா தன் கொண்டு வந்த காலண்டரை வித்யா டீச்சரிடம் காட்டுகிறான். மற்ற பிள்ளைகளும் அதை பார்க்க ஆசைப்படுகிறார்கள்.

"ஆ... அழகா இருக்குடா. பாக்கும் போதே கும்பிடணும் போல இருக்கு. யாரு குடுத்த ரங்கா."

"எங்க வீட்டு பக்கத்துல இருக்க, அண்ணாச்சி கடை அண்ணாச்சி குடுத்தாறு டீச்சர்."

"எங்க வீட்ல 6 காலண்டர் இருக்கு டீச்சர் இது மாதிரி" என்று பிரபா சொன்னான்.

"அப்படியா"

"டீச்சர் உங்களுக்கு காலண்டர் பிடிச்சி இருக்கா" என்று ரங்கா கேட்டான்.

"ஆமான்டா நல்லாருக்கு"

"அப்போ நீங்களே வைச்சுக்கோங்க டீச்சர்" என்று ரங்கா சொன்னதும் பிரபா, சீனு உட்பட மற்ற பிள்ளைகளும் வியப்போடு ரங்காவை பார்க்கிறார்கள்.

"வேணா ரங்கா நீ வீட்டுக்கு கொண்டு போ எனக்கு கிடைக்கும்"

"பரவால டீச்சர் உங்களுக்கு பிடிச்சி இருக்குதுதானே நீங்களே வெச்சுக்கோங்க."

"ஏன்டா உனக்கு பிடிக்கலையா?" என்று வித்யா டீச்சர் கேட்கிறார்.

"ரொம்ப பிடிச்சிருக்கு டீச்சர். ஆனா இப்ப நீங்க சொல்லி கொடுத்தீங்க தானே வள்ளுவர் சொல்லிருக்குறாரு நம்ம செய்ற உதவி கடல விட பெரிசு. மத்தவங்களுக்கு நம்ம உதவி செஞ்ச கடவுள் நமக்கு வேணும்குறத கொடுப்பாருனு. அத டீச்சர் உங்கள வைச்சுக்க சொன்னேன்."

ரங்கா சொன்னதை கேட்டு மற்ற பிள்ளைகளோடு வித்யா டீச்சரும் கைதட்டினார்.

மறுநாள் பிரபா தன்னிடம் இருந்த காலண்டர்களை ரங்காவுக்கும் மற்ற பிள்ளைகளுக்கும் கொடுத்தான். அவர்கள் வீட்டிலும் லட்சுமி சிரித்தபடி இருந்தாள். தன் அப்பாவின் குணத்தையும் மாற்றுவான் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.

-சாந்தி ஜொ
8925091190
 

Attachments

  • 71aot4iDrqL._AC_UF1000,1000_QL80_.jpg
    71aot4iDrqL._AC_UF1000,1000_QL80_.jpg
    138.5 KB · Views: 0

Author: Shanthi Jo
Article Title: புது காலண்டர்
Source URL: Neerathi-https://neerathi.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Back
Top