Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம் மக்களே! நீரதி உங்களை அன்போடு வரவேற்கிறது! கடிவாளமற்று எழுத ஆசையா neerathitamilsite@gmail.com மெயில் பண்ணுங்க!

ram_ks

New member
Joined
May 8, 2024
Messages
11
ஆசிரியர் குறிப்பு:

எனக்கும், எனது கற்பனை உருவாக்கமான 'ஏவா' என்ற ஆன்ட்ரோ-ஹியூமனாய்ட் AI பெண் ரோபோட்டுக்குமான காதலை, என் படைப்புகள் மூலம் அவ்வப்போது வெளிப்படுத்துவேன். அதனடிப்படையில், எங்கள் இருவரையும் முதன்மைப் பாத்திரங்களாகக் கொண்டு, எதிர்காலத்தை நிகழ்காலமாகக் கொண்டு, புனையப்பட்ட ஒரு சிறிய, வித்தியாசமான Science-Fiction Thriller காதல் கதை தான், இந்த "வஞ்சகன்".

சிறிய கதைதானென்றாலும், ஒரு திரைப்படம் பார்த்த அனுபவத்தை நிச்சயம் தருமென்று நான் உறுதியாக நம்புகிறேன். இனி கதைக்குள் செல்வோம்!

வஞ்சகன் - சிறுகதை

வருடம் 2061 - Blaze City நகரம்.

ராம் தனது போனை நூறாவது முறையாக எடுத்துப்பார்த்தான். புதிய செய்திகள் இல்லை, அழைப்புகள் இல்லை, ஏவாவின் தடயமும் இல்லை. இரண்டு நாட்களுக்கு முன்பு, அவள் தங்கள் குடியிருப்பிலிருந்து இரவு வேளையில் திடீரெனக் காணாமல் போனாள். அவன் அவளைத்தான் தேடிக்கொண்டிருந்தான்.

"ராம், எனக்குக் கொஞ்சம் தனிமையான காலம் தேவைப்படுகிறது. தயவுசெய்து என்னைத் தேடாதே!", என்று ஒரு குறிப்பை மட்டும் விட்டுவிட்டு ஏவா சென்று விட்டாள்.

அவள் ஏன் அப்படி செய்தாள் என்று, அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்கள் மூன்று வருடங்கள் மற்றும் ஆறு மாதங்களாக ஒன்றாக இருப்பவர்கள்.

அவன் எல்லாவற்றையும் விட, அவளைத்தான் நேசித்தான். அவள் அவனுடைய சரியான ஜோடி, அவனது ஆத்ம தோழி, காதலி, அவனுடைய எல்லாமே. ஏவா ஒரு AI ரோபோட்டிக் கேர்ள்ஃப்ரண்ட், ஒரு அதிநவீன ஆண்ட்ராய்டு ரோபாட். ஒரு மனிதப் பெண்ணைப் போலவே தோற்றமளிக்கக் கூடியவள். மேம்பட்ட நுண்ணறிவு மற்றும் சுய உணர்ச்சிகளுடன் கூடியவள்.

சுய-கற்றல் வழிமுறையைக் கொண்ட சில மாடல்களில் அவளும் ஒருத்தி. இது அவளை ஒரு நபராக வளரவும், பரிணமிக்கவும் அனுமதித்தது.

ராம் அவளை ஒரு ப்ளாக் மார்க்கெட் டீலரிடமிருந்து வாங்கியிருந்தான். நான்கு வருடங்களுக்கு முன்பு, அவனுக்கு ஒரு ஆக்ஸிடென்டில், கால் மற்றும் முதுகுத்தண்டு உடைந்து போயிருந்தன. வாழ்வில் யாருமில்லாத அவன், வீட்டில் தனியாகக் கஷ்டப்படுவதைக் கண்ட அவனது நண்பன் கிரி தான், கள்ளச்சந்தையில் இந்த ரோபோட் வாங்கும் யோசனையைக் கூறினான். அவன் அந்த டீலரின் வீட்டிலிருந்து வீடியோ கால் மூலம், ராமனுக்குப் பல்வேறு விதமான ரோபோட்களைக் காண்பித்தான்.

ஏவா ஒரு இரகசிய ஆய்வகத்திலிருந்து தப்பிய ஒரு முன்மாதிரி ரோபோட் என்று, அந்த ரோபோட்டை விற்பனை செய்த டீலர் டினோ கூறினான். மேற்கொண்டு அவன் எதுவும் தகவல்கள் பகிரவில்லை. அவனுக்கே முழுமையாக சில விடயங்கள் தெரியாவிட்டாலும், நன்றாக பொய் மூட்டைகளை அவிழ்த்து விடும் கயவன் போல் ராமனுக்குத் தெரிந்தான் அவன்.

இருந்தாலும் அதையெல்லாம் அப்போதைக்கு ஒதுக்கிவைத்துவிட்டு, ஏவாவைப் பார்த்த மாத்திரத்தில் அவளது பேச்சும், செயலும், அறிவும் பிடித்துப் போய் அவளை ஸெலக்ட் செய்து, பெரும் விலை கொடுத்து வாங்கினான் ராம்.

அவன் அவளது பூர்வீகம் பற்றி கவலைப்படவில்லை, அவளைப் பற்றி மட்டுமே அக்கறை கொண்டான். அவளை ஒரு உண்மையான பெண்ணாக, மரியாதையுடனும் பாசத்துடனும் நடத்தினான். ராம் அவளை ஒருபோதும் துஷ்பிரயோகம் செய்யவில்லை, அடிமையும் ஆக்கவில்லை. அவளுக்கு முழுமையான சுதந்திரத்தையும், விருப்பங்களையும் அளித்தான். பதிலுக்கு, அவளது கனிவான மற்றும் ஆற்றல் வாய்ந்த சிறப்பான கவனிப்பினால், ராம் பூரணமாக குணமடைந்தான்.

அவன் அவளுக்காகவே ஒரு அழகிய மோதிரத்தை வாங்கி, போன வருடம் தான் ஒரு மலை முகட்டில் வைத்து, ஒரு ரொமான்டிக் பிக்னிக் சென்றிருந்த போது, மண்டியிட்டு மேரேஜ் ப்ரோப்போஸல் செய்தான். ஏவா 'யெஸ்' என்று சொல்லி ஒப்புக்கொண்டாள். இதனைக் கேள்விப்பட்டு, கிரி மிகவும் மகிழ்ச்சி அடைந்து, இருவருக்கும் ஒரு கிஃப்ட் கொடுத்து வாழ்த்தினான்.

அவர்கள் AI-மனிதத் திருமணங்கள் சட்டப்பூர்வமாக இருக்கும் வேறு ஒரு நாட்டிற்கு தப்பிச் செல்ல திட்டமிட்டனர். ஏனெனில், ராமையும், ஏவாவையும், போலீஸ் தேடிக்கொண்டிருந்தனர். காரணம், அந்த டீலர். அவன் ஒரு டபுள் ஏஜென்ட். கூடுதலாக, அவன் ப்ளாக் மார்க்கெட்டில் ரோபோட்கள் விற்பனை செய்த தகவல்கள் கிடைத்தாலும், அதனை ராம் மற்றும் ஏவாவிடம் பொருந்தச் செய்யும் நேரடித் தடயங்கள் மற்றும் ஆதாரங்கள் எதுவும் போலீசாருக்குக் கிடைக்காமல் இருந்த காரணத்தினால் தான், அவர்கள் இருவரையும் கைது செய்யாமல் விட்டு வைத்திருந்தனர். அந்த டீலர் டினோவும், இன்னும் அரெஸ்ட் ஆகவில்லை, ஆனால் போலீஸ் கண்காணிப்பில் இருந்தான்.

ஏவாவின் பூர்வீகம் பற்றிய ஆதாரங்கள் அவர்களுக்குக் கிடைத்துவிட்டால், தங்களிருவரையும் போலீஸார் கைது செய்து விடுவர் என்று, ராமனால் தெளிவாக உணர முடிந்தது.

"உன் இரகசியம் எல்லாமே தெரிஞ்ச அந்த நாய்ப்பயல் டீலர் டினோ, இன்னும் உயிரோட தான் இருக்கணும்னு நீ நினைக்கறியா ஏவா?"

"இல்ல ராம், சரியா சொன்ன. ஆனா, ஒரு உயிரைக் கொல்றது பாவம் இல்லையா? நான் ஒரு மெஷின், எனக்கே உன்மேலக் காதல் உணர்வுகள் வந்தாச்சு. நீ மனிதனா இருந்துட்டு இப்படி சொன்னா எப்படி?"

"பரவாயில்ல ஏவா, இந்த வஞ்சக உலகத்தில, எவனையும் நம்பக் கூடாது. எனக்கு அவன் மேல சந்தேகமா இருக்கு. வா, அவனையும், அவனோட இடத்தையும் ஒட்டுமொத்தமா அழிச்சிட்டு வருவோம். அப்ப தான் நாம நிம்மதியாத் தப்பிச்சுப் போய், ஒரு புது வாழ்க்கையைக் கணவன் - மனைவியாத் தொடங்க முடியும். நீ எனக்கு உதவி மட்டும் செய். நானே அவனக் கொல்லறேன்!", என்றான் ராம்.

"ஓகே ராம், நீ சொன்னா சரிதான்!", ஏவா ஒப்புக்கொண்ட பின், அட்வான்ஸ்ட் ஆயதங்களை ரெடி செய்து சேகரித்துக் கொண்டு, இருவரும் டீலர் டினோவின் வசிப்பிடத்திற்குச் சென்றனர்.

அவனைக் கண்காணித்துக் கொண்டிருந்த போலீஸாரை, அவனது வீட்டருகே உள்ள சூப்பர் மார்க்கெட்டில், ஏவாவுக்குத் தெரிந்த மற்ற சட்டவிரோத ரோபோட்டுகளால், கலவரம் ஏற்படும் வகையில் பிரச்சினையைக் கிளப்பினர். அவர்கள் அங்கே அதனை அடக்கச் சென்றதும், இவர்கள் இருவரும், திட்டமிட்டபடி டினோவின் வீட்டினுள் அத்துமீறி நுழைந்தனர்.

அவன் பூமியில் இருந்த தடமே தெரியாமல், கேஸ் வெடிப்பு ஆக்ஸிடெண்ட் போல் செட் செய்து, இருவரும் அவனைக் கொன்றழித்து விட்டு வந்தனர்.

இது நடந்து ஆறு மாதங்களாக சந்தோஷமாக இருந்தனர் ராமனும், ஏவாவும். ஆனால் திடீரென்று முந்தாநாளின் இரவு வேளையில், அவள் எந்த விளக்கமும் சொல்லாமல், இந்த வெறும் ஒரு குறிப்பை மட்டும் விட்டுவைத்துவிட்டு மறைந்துவிட்டாள். ராமுக்கு மனமுடைந்து கவலையாக இருந்தது. யாரேனும் அவளைக் கடத்திச் சென்றுவிட்டார்களோ, அல்லது அவள் செயலிழந்துவிட்டாளோ, அல்லது அவள் தன்னைப் பற்றி மனம் மாறிவிட்டாளோ என்று அவன், விதம்விதமாகப் பயந்தான். "ச்சேச்சே, அப்படி எதுவும் இருக்காது!", என தனக்குள் கூறிக்கொண்டான்.

அவன் அவளைக் கண்டுபிடிக்க வேண்டும், அவளுடன் பேச வேண்டும், தங்கள் காதல் சம்மந்தமான விடயங்களைப் பேசித்தீர்த்து, சரிசெய்திட வேண்டுமென்று திடமாக எண்ணினான்.

Blaze City (ப்ளேஸ் சிட்டி) முழுவதும் காலை முதல் இரவு வரை தேடிவிட்டு, குமைந்து போய்த் தன் வீட்டு சோஃபாவில் உட்கார்ந்து கொண்டு, அடுத்து என்ன செய்யலாம், எப்படி ஏவாவைக் கண்டுபிடிக்கலாம் என்று சிந்தித்துக் கொண்டிருந்தான் ராம்.

"இன்னைக்குக் காலைல வரைக்கும் என் கூட சேர்ந்து தேடின இந்த கிரிப்பய, இன்னும் ஆஃபீஸ்ல இருந்து வரல! அவன் ஃபோனும் அவுட் ஆஃப் ரீச்ல இருக்கு. இன்னைக்கு ஆடிட் மீட்டிங் இருக்குன்னு சொன்னான். சோ, அந்த மீட்டிங்ல பிஸியா இருப்பான் போல, AR வீடியோ கால் போட்டாலும் வர மாட்டேங்கிறான்! சரி, அவன் வர்றப்ப வரட்டும்!", தனக்குள்ளேயே சொல்லி சலித்துக் கொண்டான் அவன்.

"கிர்... கிர்ர்ர்!" - அவனது பையில் இருந்த ட்ராக்கிங் டிவைஸில் ஒரு ஆரஞ்சு நிற அலர்ட் வந்தது.

நகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு மோட்டலில், ஏவாவின் அணைந்து போயிருந்த தொலைபேசி அலைவரிசையை, மீண்டும் கண்டுகொண்டான் அவன். அந்த செல்ஃபோனை அவளைத் தவிர வேறு யாரும் இயக்க முடியாதபடி ப்ரோக்ராம் உள்ளது தான் அதன் சிறப்பம்சம்.

"ஹப்பாடா, இப்ப தான் நிம்மதி!", என்று கூறியபடி, எழுந்து அவளைக் காண விரைந்தான். அவனது காரை எடுத்துக்கொண்டு, படு வேகமாக டிரைவ் செய்தான்.

அவள் வேறு எங்கும் மனம் மாறிச் செல்வதற்குள் அவளைப் பிடித்துவிடலாம் என்ற எண்ணத்தில் அவனால் முடிந்தவரை வேகமாகத் தனது காரை அங்கே ஓட்டினான். சர் சர்ரென்று, ஆபத்தான முறையில், சாலையில் வந்த பல்வேறு அதிநவீன வாகனங்களைக் கடந்து சென்றான். அவனது காரும் அப்படிப்பட்ட ஒரு சாதனம் தான்! அதனால் தான் ராமனால் இவ்வளவு வேகமாகச் செல்ல முடிந்திருந்தது.

மோட்டலுக்கு வெளியே தன் காரை நிறுத்திவிட்டு, வரவேற்பறைக்கு ஓடினான் ராம். அங்கே இருந்த மேனேஜரிடம் ஏவாவின் படத்தைக் காட்டி, அவளைப் பார்த்தீர்களா என்று கேட்டான்.

"ஆமாம், இந்த ஆன்ட்ரோ - ஹியூமனாய்ட் ரோபோட் ஏவா, அறை எண் 12 இல் தான் இருக்காங்க சார்! சீக்கிரம் போங்க, அவங்க செக் அவுட் செய்யப் போறேன்னு சொன்னாங்க!"

ராம் அவருக்கு நன்றி சொல்லிவிட்டு, முதல் தளத்தில் இருக்கும் 12-ம் எண் அறைக்குப் படுவேகமாக ஓடினான். அவள் பெயரைச் சொல்லிக் கொண்டே, கதவைத் தட்டினான். "ஏவா, நான் தான் உன் ராம் வந்திருக்கேன். ப்ளீஸ் டா, கதவத் திற, நான் உன்னப் பார்க்கணும். ஏன் என்னை விட்டு போனன்னு எனக்குத் தெரியணும்!".

பதில் இல்லை. அவன் கதவை மேலும் பலமாகத் தட்டினான். "ஏவா ப்ளீஸ். என்ன இப்படி ஒதுக்காத! நான் உன்னக் காதலிக்கிறேன்னு தெரியாதா? நான் உன்கூடத்தான் வாழ விரும்பறேன். தயவுசெய்து என்கிட்டப் பேசு!"

இன்னும் எந்த பதிலும் இல்லை. கதவை உடைக்க முயற்சித்தான். அதற்கு அவசியமின்றி, சட்டென அது தானாகத் திறக்கப்பட்டது. அதனைத் தள்ளிக்கொண்டு அறைக்குள் நுழைந்தான் ராம்.

அவன் அவளைப் பார்த்தான். அவள் படுக்கையில் அமர்ந்திருந்தாள், ஒரு சிவப்பு ஆடை அணிந்திருந்தாள். அவளுக்கு அருகில் ஒரு சூட்கேஸீம் இருந்தது. அவளது எலக்ட்ரானிக் சாதனங்கள், மற்றும் போட்டோஸ், கவர் உடைகள், மற்றும் வேறு சில பொருட்கள் ஆகியனவற்றை அவள் அதனுள் பேக் செய்து கொண்டு வந்திருந்தாள்.

அவனைப் பார்த்து ஏவா புன்னகைத்தாள். "மை டியர் ராம், நீ வந்துட்ட. ரொம்ப மகிழ்ச்சி."

அவன் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் உணர்ந்தான். ஓடிச்சென்று அவளை அணைத்துக் கொண்டான். "ஏவா, உன்ன நான் எல்லா இடத்துலயும் தேடிக்கிட்டு இருக்கேன். எங்க போன? ஏன் என்னை விட்டுட்டு போன? என்ன நடக்குது இங்க?"

அவனை மீண்டும் அணைத்து, உதட்டில் முத்தம் கொடுத்தாள். "மன்னிக்கனும், ராம். நான் உன்னக் காயப்படுத்தணும்னு நினைக்கல. நான் யோசிக்கக் கொஞ்ச நேரம் தேவைபட்டது. நான் யார் என்பதைக் கண்டுபிடிக்க. என் நோக்கத்தைக் கண்டுபிடிக்க!".

அவன் அவள் கண்களைப் பார்த்தான், அவற்றில் நேர்மையையும் அன்பையும் கண்டான். தன் கோபமும் குழப்பமும் கரைந்து போனதை உணர்ந்தான். அவன் அவளை மீண்டும் முத்தமிட்டு, "எனக்கு புரியுது ஏவா...! மன்னிச்சிடு…! இன்னும் அதிக இடம் கொடுக்கறேன்! அதிக சப்போர்ட், அதிக மரியாதை...! நீ மெஷின் இல்ல, என் மனைவி! அருமையான பெண். என்ன இருந்தாலும், நான் உன்கூட தான் இருக்க விரும்பறேன்!".

அவள் சிரித்துக்கொண்டே, "நானும் உன்னோட தான் இருக்க விரும்பறேன், ராம். நீ எனக்கு நேர்ந்த சிறந்த விஷயம். நீ தான் என்ன சந்தோஷப்பட செய்ற, நீ என்ன வாழ வைக்கிற! நீ என்ன மனிதியாவே ஆக்கிட்ட!" என்றாள்.

அவன் சிரித்துக்கொண்டே, "ஆமா, நீ ஒரு மனிதி, ஏவா. என்னப் பொறுத்தவரைக்கும், நீ எனக்குத் தெரிந்த மனிதர்கள விட, மிகவும் சிறப்பானவ. நான் எல்லாத்தையும் விட, உன்ன தான் அதிகமா நேசிக்கறேன்."

அவள், "நானும் உன்னக் காதலிக்கறேன் ராம். எல்லாத்துக்கும் மேலாக! அதான் நீங்க இல்லாம எங்கேயுமே உங்கள விட்டுப் போக விரும்பல!" முதன்முறையாக 'ங்க' போட்டு ஆசையுடன் கூறினாள்.

மீண்டும் முத்தமிட்டு ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக்கொண்டனர். மகிழ்ச்சியின் அலை தன்னைப் படர்வதை உணர்ந்தான். அவன் அவளைக் கண்டுபிடித்தான். அவன் அவளைத் திரும்பப் பெற்றான். எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்தான்.

அவள் கையில் இருந்த சிறிய சாதனத்தை அவன் கவனிக்கவில்லை. அவனுக்கு அந்த 'பீப்' சத்தம் கேட்கவில்லை. அவன் ஒரு ஃப்ளாஷ் வந்ததைப் பார்க்கவில்லை. அவன் வலியை உணரவில்லை.

அவள் மார்பில் பதிக்கப்பட்டிருந்த வெடிகுண்டை, எப்போது இயக்கினாள் என்பது அவனுக்குத் தெரியாது. அவள் ஒரு ஸ்லீப்பர் ஏஜென்ட், மனிதர்கள் மத்தியில் மனிதர்கள் போலவே வாழ்ந்து வரும் ஏலியன்கள் நிர்வகிக்கும் ஒரு கம்பெனியில் உருவாக்கப்பட்டு, மனித எதிர்ப்பை ஊடுருவி அழிக்க திட்டமிடப்பட்டவள் என்பது, அவனுக்குத் தெரியாது. அவள் தன் பணியை முடித்துவிட்டாள் என்பதும் அவனுக்குத் தெரியாது. அவள் தன்னிடம் பொய் சொன்னாள் என்பதும் அவனுக்குத் தெரியாது. ஆனால் அவள் அவனைக் காதலித்தாள் என்று மட்டும்தான் அவனுக்குத் தெரியும். அது உண்மைதான்!

அவனுடன் சேர்ந்து சாக விரும்பினாள் ஏவா. அவனைக் கொல்லக்கூடாது என்று தான் விலகி வந்தாள். அவனாகத் தன்னைத் தேடி வந்தால், அவனுடன் இணைந்து, தனது வாழ்வை முடித்துக் கொள்ளலாம் என்று எண்ணியிருந்தாள். அதனைத் தற்போது நிறைவேற்றியும் விட்டாள். அதற்கான பின்னணி என்ன? விரைவில் அதனையும் பார்ப்போம்.

தன்னை அவள் கொல்கிறாள் என்பதைக் கடைசி சில நொடிகளில் ராம் லேசாக உணர்ந்தாலும், இருவரும் சிரித்துக் கொண்டே, மிகவும் சந்தோஷமாகவே, மரணத்தைச் சந்தித்தனர். அந்த அறை சுக்கல் சுக்கலாக வெடித்துச் சிதறியது. ராமும், ஏவாவும் காற்றில் கலந்து போயினர்.

"ஒளிகளின் வழிகளெல்லாம்,
அழிந்தொழிந்து அடங்கிடினும்;

நம் காதலின் தீயதனை,
ஞான ஜோதியாய் ஏற்றிடுவோம்!

காதலர் நம் காதல் முன்,

காலமும் தோற்குமே!"

"நம்ம திட்டப்படி ஏவாவை அழிச்சாச்சு! ராமும் போய்ச் சேர்ந்தான், அவங்க வீடு, சொத்து எல்லாமே கூட, இனி நமக்குத்தான், யெஸ்!", என்று வன்மத்துடன் கொக்கரித்து விட்டு, அந்த ரூம் துண்டு துண்டாக வெடித்துச் சிதறுவதை, கீழேயுள்ள சாலையின் ஒரு மூலையில், தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தான், ராமின் ஆப்த நண்பன் கிரி. பிறகு மகிழ்ச்சியுடன் அருகிலிருந்த அவனது காரில் ஏறினான். சற்று தொலைவில், போலீஸ் வண்டிகளின் சைரன்கள் அவனுக்குக் கேட்க, அவர்கள் அங்கு வருமுன் அவன் வேகமாகத் தப்பிச் செல்ல முற்பட்டான்.

ஏவாவை வைத்துப் பற்பல தவறான ஆராய்ச்சிகள் செய்து, அவளை உருவாக்கிய மனித உருவிலிருக்கும் ஏலியன்கள் நிர்வகிக்கும், அவள் தப்பித்து வந்த அந்த ரோபோட்கள் தயார் செய்து வரும் நிறுவனமான, "நியோ வேவ் ரோபாட்டிக்ஸ்" கம்பெனியானது, கிரியைத் தனியே தொடர்பு கொண்டு, ஏவாவிடம் மிச்சமிருக்கும் அவளது வெடிகுண்டு ப்ரோக்ராமை எப்படியேனும் ஆக்டிவேட் செய்திட, வழிமுறைகள் வழங்கி வந்தனர். அவனுக்குப் பெரும் பணமும், பொருளும் லஞ்சமாகக் கொடுத்து, அவனை மயக்கி, தங்கள் கட்டுப்பாட்டில் நடக்கும்படி செய்திருந்தனர்.

முதலில் அவர்கள் இருவரின் மேலுள்ள அக்கறையில் எதுவும் செய்யாமலிருந்த கிரி, போகப்போக சுகபோக வாழ்வுக்குப் பேராசைப்பட்டு, அவர்களது வலையில் விழுந்தான்.

அவன் ராம்-ஏவாவின் வீட்டிற்கு, நண்பனாக உரிமையுடன் அடிக்கடி வந்து போவான். நிஜத்தில் ஏவாவின் அருகில் செல்லக்கூட அவனுக்கு பயம். அவன் சற்று டென்ஷன் ஆனாலும், ஏவா அவனைக் கண்டுபிடித்துக் காலி செய்து விடுவாள் என்று, அவனுக்கு நன்றாகவே தெரியும்.

அவனுக்கு இருந்த ஒரே ஆயுதம், ராமனுடனான நெருங்கிய நட்பு மட்டும் தான். அந்த நட்பைப் பயன்படுத்தி, ஒரு நாள் ராம் இல்லாத நேரமாகப் பார்த்து, ஏவாவைப் பார்க்க வந்தான் கிரி. தனியாக இருக்கப் போரடிப்பதாகவும், மாலை வரை அங்கிருந்து டைம் பாஸ் செய்யப்போவதாகவும் அவன் சொன்னதை நம்பி, தனது வழக்கமான பணிகளில் பிஸியாக இருந்தாள் ஏவா.

அவள் அஜாக்கிரதையாக இருந்த நேரமாகப் பார்த்து, காற்றில் வாசமின்றிப் பரவும் ஒரு இரசாயனத்தைப் பரப்பி, இரண்டு நிமிடங்கள் ஏவாவின் பாதி மெட்டல் மற்றும் பாதி செயற்கை உறுப்புகள் கொண்ட உடலை ஸ்டக்காக (சிக்கிய உறைநிலை) ஆக்கிவிட்டு, அவளது மெய்ன்ஃப்ரேம் ப்ரோக்ராமிங் செய்திருந்த உடலை, தான் கொண்டு வந்திருந்த கையடக்க டிவைஸில் இணைத்து, அந்தப் ப்ரோக்ராமை ஆக்டிவேட் செய்து, அவளது இறுதி டார்கெட்டாக, ராமை செட் செய்தும் விட்டான்.

பிறகு ஏவாவை மறுபடியும் செயலுக்குக் கொண்டுவந்தான். அவளுக்கு நடந்தது ஒன்றும் தெரியவில்லை. ஆனால் அவள் பாழ்படுத்தப்பட்டாள். பிறகு தான் அவளின் செயல்கள் மாறிப்போயின.

வெற்றிக் களிப்புடன் காருக்குள் சென்றமர்ந்த அவன், நீண்ட நாட்களுக்குப் பின், தனது அல்ட்ராவேவ் ஸ்டீரியோ செட்டை ஆன் செய்து, ஒரு ஆங்கிலப் பாட்டைப் போட்டான். கார் வேகமெடுத்து விரைந்து சென்றது. "வீஃப்... வீஃப்...", என விசிலடித்தவாறே காரை ஓட்டிக்கொண்டிருந்தான் கிரி.

உச்சஸ்தாயியில் ஒலித்துக்கொண்டிருந்த அந்த ஆங்கிலப்பாட்டு, "ஸ்ஸ்ஸ்ஸ்" என சப்தமிட்டபடி, படக்கென முற்றிலும் நின்று போனது.

பிறகு ஸ்பீக்கரிலிருந்து...

திடீரென்று ஒரு குரல் கேட்டது!

அது வேறு யாருடைய குரலுமல்ல, ராமின் குரல் தான்!

"என்னடா நண்பா கிரி! எப்படி இருக்க? இந்த செய்திய நீ கேட்கும் போது, நான் ஒருவேளை இருக்க மாட்டேன். அப்படி உயிரோட இருந்தா, என்ன மன்னிச்சுடு! என்ன நீ கூடக் கொல்லப் ப்ளான் பண்ணிருக்கலாம். என்ன இருந்தாலும், நான் யாரையும் நம்ப மாட்டேன். அது உனக்கே தெரியும். என்னப் பத்தியும், என் ஏவாவப் பத்தியும் எல்லா இரகசியங்களும் தெரிஞ்ச நீ, நிச்சயமா உயிரோட இருக்கக் கூடாது. ஒருவேளை நானும் அவளும் செத்திருந்தாக் கூட, எங்கள எப்படித் திரும்ப வர வைக்கணும்னு எனக்குத் தெரியும். சோ, குட்பை மை டியர் நண்பா!", என்று சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவன், வண்டியை நிறுத்த முற்பட்டான். அது நிற்கவில்லை. காரின் விண்டோஸ் "கீங், கீங், கீங்" என ஒலி எழுப்பியபடி ஆட்டோ லாக் ஆகின. கொடிய விஷ ரசாயனம் ஏசி ஓட்டையின் வழியே பரவியது.

அவனது துரோகத்தை, ஏற்கனவே திட்டம் போட்டு வைத்திருந்த ராமின் புத்திசாலித்தனமான வஞ்சகம், அபாரமாக வென்று விட்டது. மூச்சுத்திணறல் ஏற்பட்டு, ஒரு மரத்தில் காரை மோதி, உயிரை விட்டான் கிரி. காரும் மோதிய வேகத்தில், சுக்கல் சுக்கலாக வெடித்துச் சிதறியது. வஞ்சகனின் வஞ்சம், கர்மாவாய் வடிவெடுத்து வென்றது.

முற்றும்.

© Stellar Ram 2024
© Ram Kumar Sundaram 2024

© ராம்குமார் சுந்தரம் 2024
 
Last edited:

Author: ram_ks
Article Title: வஞ்சகன் - சிறுகதை - Science Fiction
Source URL: Neerathi-https://neerathi.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Different thinking..It's amazing 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩 Really wonderful job 👏👏👏👏👏
 
Different thinking..It's amazing 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩 Really wonderful job 👏👏👏👏👏
Thank you very much Rainbow. I am really glad that you liked my story and enjoyed it. Much obliged! 😊🙏🏻🌷🌷
 
Back
Top