Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம் மக்களே! நீரதி உங்களை அன்போடு வரவேற்கிறது! கடிவாளமற்று எழுத ஆசையா neerathitamilsite@gmail.com மெயில் பண்ணுங்க!

KD

Administrator
Staff member
Joined
Apr 24, 2024
Messages
48
அத்தியாயம் 2

வெள்ளிக்கிழமை மதியம் ஆறு.

நல்ல நேரம் 7.30க்கு தொடங்குவதாய் குடும்ப பூசாரி சொல்லியிருக்க, ஆர்.வி. குரூப்ஸின் மொத்த குடும்பமும் தடபுடலாய் கிளம்பிக் கொண்டிருந்தனர் பொண்ணு பார்க்கும் படலத்திற்கு ரெடியாகி.

''அடடடடா! இந்த பொண்ணுங்கதான் கிளம்ப லேட் பண்றாங்கன்னா, இந்த வீட்டு ஆம்பளைங்களும் அவுங்களுக்கு சளைச்சவங்க இல்லன்னு போட்டி போடறாங்களே!''

என்ற வெங்கடேசனோ இடையில் கரங்கள் இறுக்கியவாறு ஆதங்கம் கொள்ள,

''பா, யாருப்பா அந்த பொண்ணு வீட்டுக்காரவங்கக்கிட்ட என் நம்பரே கொடுத்தது?! அது வேணுமா, இது வேணுமான்னு, காலையிலிருந்து பத்து தடவைக்கும் மேலே கோல் பண்ணிட்டாங்க!''

என்ற அருளோ கடுகடு முகத்தோடு வாசலை நோக்கி வந்தான் அவன் டேடியை நோக்கி.

''சோரி அருள்! நான்தான் அன்னைக்கு ஆகுவோட நம்பரே கொடுக்கறதுக்கு பதிலா, தப்பா உன் நம்பரே கொடுத்திட்டேன்!''

என்ற குருமூர்த்தியோ கார் கதவை திறந்த வண்ணம் தவறை ஒப்புக்கொள்ள,

''நல்லவேளை பெரிப்பா, பொண்ணோட சித்தப்பா, அப்பான்னு கோல் பண்ணதோட போச்சு! பொண்ணு கோல் பண்ணிருந்தா!''

என்ற அருளோ கிண்டலான நகைப்போடு அங்கிருந்து நகர்ந்தான் அவன் காரை நோக்கி.

''என்னடா இது?! கல்யாணம் அருளுக்கா, ஆகுக்கா?!''

என்ற வெங்கட்டோ அவரை விட மூன்று வயது மூத்தவரான குருமூர்த்தியை அண்ணன் என்றிடாது உரிமையோடு டா போட்டு சிரிக்க,

''ரெண்டு பேர் பேரும் 'ஏ'லே ஸ்டார்ட் ஆனதாலே அவசரத்துலே நம்பர் மாறி போச்சுடா!''

என்ற குருமூர்த்தியோ தம்பியின் கலாய்யை சமாளித்தார் அசடு வழியும் முகத்தோடு.

இப்படி கலாட்டாவான ஆனந்தத்தில் பரபரத்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது ஓங்கி ஒலித்த குரலொன்று.

''நான் வர மாட்டேன்!''

என்று மீண்டும் கேட்டது அக்குரல் அப்பிரமாண்டமான மாளிகையின் இரண்டாவது வரவேற்பறையில்.

ராதிகாதான் முரண்டு பிடித்துக் கொண்டிருந்தாள் இரண்டாவது அண்ணி சித்ராவுடன்.

அவள் கண்டிப்பாய் வர மாட்டாள் என்றறிந்த ரத்னவேலுவோ, முன்னரே எச்சரித்திருந்தார் குடும்பத்திடம் மகளை அழைத்திட வேண்டாமென்று.

ஆனால், மாமனாரின் பேச்சை கேளாத மருமகள்களோ வீட்டில் நடக்கின்ற சுபகாரியத்துக்கு எப்படி அம்மாளிகையின் மகாராணியை அழைத்திடாமல் இருப்பதென்று மரியாதை நிமித்தம் போய் கூப்பிட, அழுத்தமான எதிர்ப்பே கிளம்பியது ராதிகாவிடமிருந்து.

''ஸ்ரீதேவியே பார்க்க போறப்ப, மூதோவி எதுக்கு?! எல்லாம் போய் கார்லே ஏறுங்க!''

என்று சத்தம் போட்ட ரத்னவேலுவோ வெளியேறினார் மனையிலிருந்து, துளியும் ராதிகாவை துச்சம் செய்யாது.

ராதிகா உடன் வந்தால், கட்டாயம் பேரனின் பெண் பார்க்கும் விடயத்தில் கோளாறு ஏற்படுமென்று உணர்ந்திருந்தார் பெரியவர் அவர்.

அதனால்தான், முறுக்கிக் கொண்டிருந்த மகளின் கோபத்தை மேலும் ஏத்தி விட்டு வீட்டிலிலேயே இருக்க வைத்து வந்தார் தகப்பனவர்.

வெங்கடேசனின் இரண்டாவது மகள் புவனாவோ, அவள் கணவன் சந்திரனோடு பெண் வீட்டுக்கு வந்திடுவதாய் சொல்லியிருந்தாள்.

ஆபிஸ் போயிருந்த சக்தியோ வேலைகள் முடிந்தால் மட்டுமே வந்து சேர்வதாய் சொல்லியிருந்தான்.

சம்பவத்தின் முக முக்கியமான ஆடான மாப்பிள்ளை சாரோ பைக் சர்வீஸ் முடித்து நேரடியாக பெண்ணில்லம் வருவதாய் வாக்குறுதி அளித்திருந்தான்.

குருமூர்த்தியோ சத்தம் போட்டிடாமல் இல்லை ஆகுவை. ஆனால், ஜானகியோ சங்கதியை மாமனாரின் காதில் போட்டு, டென்சன் பார்ட்டியான புருஷனின் வாயை அடைத்தார்.

அவ்வீட்டிலிருந்த எல்லோருக்கும் தெரியும் ஆகு இரண்டு மனதாகத்தான் இக்கல்யாணத்திற்கு சம்மதித்திருக்கிறான் என்று. அதுவும், தாத்தா ரத்னவேலு ஒருவருக்காக மட்டுமே அவனின் முந்தைய முடிவையும் மாற்றியிருந்தான் ஆணவன்.

ஆகவே, அவனை கடுப்பேத்தி ஏதாவது கோளாறு ஆகிப்போனால் அவ்வளவுதான் தாத்தா யாராகினும் தயவு தாட்சனையின்றி பொலந்திடுவார் என்பது அக்குடும்பத்தினருக்கு நன்றாகவே தெரியும்.

மாலை 7.20க்கு, ஒருவழியாய் ஆர்.வி. குரூப்ஸின் ஒட்டு மொத்த கூட்டு குடும்பமும் பெண் வீட்டை அடைந்திருந்தனர்.

தட்டுகளோடு பெண்கள் வீட்டுக்குள் நுழைய, ஹீரோவும் கூடவே புவனா மற்றும் சந்திரனும் கூட, தாமதம் கொள்ளாது சொன்ன சொல்லை காப்பாற்றியிருந்தனர்.

ஏற்கனவே, மூத்தவர்கள் பேச்சு வாக்கில் எல்லாவற்றையும் பேசி முடித்திருக்க, இன்றைக்கு முறையாக பொண்ணுக்கு பூ வைத்து, தட்டு மாற்றி நிச்சயதார்த்தத்திற்கான நாளை குறித்திடவே வந்திருந்தனர் மற்றவர்கள் அனைவரும்.

இருப்பினும், சொந்தங்களின் முன்னிலையிலோ எல்லாம் இப்போதுதான் பிரஷாய் நடப்பது போல் காட்டிக்கொண்டனர் இருதரப்பு குடும்பமும்.

அருளின் பக்கத்தில் ஆகு சென்றமர பார்க்க, பட்டென குறுக்கே புகுந்து இடத்தை நிரப்பினான் சத்திதரன்.

இடமில்லாது நிற்பவனின் முகத்தை கேலியாய் நோக்கி தலையை ஆட்டியவனோ,

''என் பெஸ்ட் பிரெண்டோட மிக முக்கியமான மூமெண்ட்லே நான் இல்லன்னா எப்படி?!''

என்றுச் சொல்லி கண்ணடிக்க, ஆங்காங்கே செக் போஸ்ட் போட்டு கதை பேசி கொண்டிருந்த அனைவரும் வந்துச் சேர்ந்தனர் சோபாவை நோக்கி.

''டேய், நீ ஏன்டா அங்க உட்கார்ந்திருக்கே?! இங்க வா! ஆகுவே, அங்கே உட்காரே விடு!''

என்ற சந்திரன் மாமாவோ, செல்லமாய் தரனின் தொடையில் ரெண்டு தட்டு தட்டிட,

''பரவாலே மாமா, நான் நின்னுக்கறேன்.''

என்றவனோ சோபாவின் பின்னால் போய் நின்றான் நெஞ்சுக்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு.

''இதென்னடா புதுசா இருக்கு?! நிக்க வெச்சு பொண்ணு பார்க்கறது?!''

என்ற ரத்னவேலுவோ நக்கலோடு அங்கிருந்த பெரிய ஒத்தை நாற்காலியில் வந்தமர்ந்தார்.

''டைம் ஆகுது, பொண்ணே முதல்லே பார்த்திடலாமா?!''

என்ற புவனாவோ, வந்த காரியத்தை ஞாபகப்படுத்தினாள் அனைவருக்கும்.

மணப்பெண்ணின் அப்பாவான தெய்வீகனோ, மனைவி காஞ்சனாவை திரும்பி பார்த்து,

''குட்டிமாவே கூட்டிட்டு வரச்சொல்லுமா!''

என்றிட, சொந்தங்களோடு மேல் தளத்திலிருந்த மகளை கீழே கூட்டி வரச்சொல்லி மிதமான குரல் ஒன்று கொடுத்தார் தாயவர், ஹீரோயினியின் தோழிகளுக்கு மாடி படிக்கட்டின் ஓரம் நின்று.

ஒற்றை மகளாகினும் செல்லமும் சரி, ஒழுக்கமும் சரி, சம விகிதத்தில் புகட்டப்பட்டு வளர்க்கப்பட்டவளே இளங்கன்னியவள்.

பணக்கார பரம்பரைத்தான். ஆனால், இப்போதோ வெறும் நடுத்தர வர்க்கமே. ஆண்டுகளாய் தேடி சில மாதங்களுக்கு முன்புதான் கண்டுப்பிடித்திருந்தார் குருமூர்த்தி பால்ய நட்பான தெய்வீகனை.

கடந்த காலங்களை அலசியவர்கள் இறுதியில் அவரவர் சந்ததியின் வருங்காலத்தில் வந்து நிற்க, பையனின் தகப்பனோ மருமகளாய், மகளொருத்தியை கேட்க, பொண்ணை பெத்தவரோ தாமதிக்காது சம்மதித்தார் மருமகனில் மகனை உணர ஆர்வங்கொண்டு.

''மாப்பிள்ளை நிக்கறீங்களே உட்காருங்க!''

என்ற வருங்கால மாமனாரோ கரிசனையாய் ஆகுவை அமர சொல்ல,

''இல்லே பரவாலே அங்கிள், இன்னிக்கு ரொம்ப உட்கார்ந்துட்டேன்! இப்படி, நிக்கறதே நல்லாத்தான் இருக்கு!''

என்றவனோ மென்புன்னகை ஒன்றோடு பேச்சை நிறுத்திக் கொள்ள,

''அப்படி என்ன வேலை பார்த்தீங்க மாப்பிள்ளை, ஒரு நாள் முழுக்க உட்கார்ந்துக்கிட்டே இருக்கற மாதிரி?!''

என்ற தெய்வீகனோ ஆச்சரியத்தோடு வினவ,

''வேறென்னே, வெட்டி வேலைதான்!''

என்ற தரனோ, நண்பனின் மானத்தை வாங்கினான் நக்கலடித்து.

குழுமியிருந்த கூட்டமோ கலகலவென சிரிக்க, ஹீரோவும் வேறு வழியில்லாது தரனின் கடி ஜோக்குக்கு முறுவலான லுக்கொன்றை கொடுத்து, ரகசியமாய் முஷ்டி மடக்கி வைத்தான் ஒரு குட்டு, அவனை விட ஒரு வயது மூத்தவனின் மண்டையில்.

வலியில் தலையை தேய்த்தவனோ, திரும்பி ஆகுவை பார்க்க, ஹீரோவோ பார்வைகளாலேயே தரனை பொசுக்கினான்.

''உட்காருங்க மாப்பிள்ளை! நிக்கறீங்களே! உட்காருங்க!''

என்று இப்போது தெய்வீகனின் தம்பி ஆரம்பிக்க,

''இல்லே பரவாலே!''

என்றவனோ நிற்பதற்கு கூட உரிமை இல்லையா என்ற முறைப்போடு தாத்தாவை நோக்கி திரும்பினான்.

சூழ்நிலையை புரிந்துக் கொண்ட தாத்தாவோ,

''ஏன் ஆளாளுக்கு அவனே உட்கார சொல்லி கட்டாயப்படுத்தறீங்க?! விடுங்க, அவனுக்கு தோணுச்சுன்னா உட்காருவான்! இப்போ காலம் ரொம்ப மாறிடுச்சு! நின்னு பார்த்தாலும், உட்கார்ந்து பார்த்தாலும் மாப்பிள்ளை என் பேரன்தான், பொண்ணு உங்க வீட்டு மஹாலஷ்மிதான்! அப்பறம் என்னே, அவன் விருப்பம் போலவே நிக்கட்டும் விடுங்க!''

என்ற ரத்னவேலுவோ சாமர்த்தியமாய் பேசி ஹீரோவின் டிக்கி பார்க்கிங் பிரச்சனைக்கு ஒரு தீர்வளித்தார்.

உண்மையில், அவருக்கு உள்ளுக்குள் சிறு பயமே, எங்கே எல்லாரும் ஆகுவை நைநை என்றிட மவராசன் கல்யாணம் வேண்டாமென்று சொல்லி தாத்தாவின் திட்டத்தில் கல்லை போட்டிடுவானோ என்று.

அதனாலேயே, தாத்தா குறுக்க புகுந்து பேரனுக்கு சப்போர்ட் செய்த வண்ணம் பேசி அவனை கூலாக்கினார்.

''பொண்ணு வருது! பொண்ணு வருது!''

என்ற சின்ன வாண்டொன்றோ, குடுகுடுப்புக்காரனை போல் செய்தி சொல்ல, அனைவரின் பார்வையும் மாடிப்படி பக்கம் திரும்பியது.

சுண்டி விட்டாலே சிவந்து போகும் எலுமிச்சை வர்ணத்திலான தேகம் தெரியிழை அவளுக்கு. ஐந்தரை அடி ஐம்பொன் சுந்தரி. மீடியம் சைஸ் மொழுமொழு அவகாடோ எனலாம்.

குண்டு மல்லிகையோ, பைந்தொடியின் குழலில் முக்குளித்திருக்க, புருண்டியின் (மல்லிகை) நறுமணத்தை கண்கள் மூடி உள்வாங்கிய ஆகுவோ, சிலிர்த்தவனாய் நெஞ்சுக்கு குறுக்கே கட்டிருந்த கைகளை மேலும் இறுக்கிக் கொண்டான் நெஞ்சோடு சேர்த்து.

ரோயல் ப்ளூ என்றழைக்கப்படும் அடர் நீலத்தில் ஒட்டியானத்தோடு சேலை கொண்டிருந்த காரிகையின் கால் கொலுசுகளோ, மொத்த வீட்டையும் ஆக்ரமித்திருந்தன சில நிமிடங்களுக்கு.

குட்டிஸ்களோ, அங்கு நடக்கும் சம்பிரதாயங்களில் கலந்துக் கொள்ளாது, டிவி ரிமோட்டை கொண்டு அவர்களுக்கு பிடித்தமான சேனல்களை திருப்பினர்.

குனிந்த தலை நிமிராது, ஒன்றோடு ஒன்று பின்னிய கரங்களை அடிவயிற்றோடு ஒட்டிக்கொண்டப்படி , மாடிப்படிக்கட்டிலிருந்து இறங்கிய புனையிழைக்காகவே பாடலை டெடிகேட் செய்தனர் குட்டிஸ் நேரங்காலம் பார்க்காது, எதார்த்தமாய்.

''மதுரை மல்லி
எறங்குனா கில்லி
உன்னோட வாசம் இழுக்குறதே!
குறுக்கு சந்து வழியில போக
உன்னோட பார்வை மயக்குறதே!
எங்கடி பிறந்தா எங்கடி வளர்ந்தா
கண்ணுல பாத்துட்டா நெஞ்சுல நின்னுட்டா!''

என்ற பாடலோ கச்சிதமாய் ஒலித்தது, ஆயந்தியவள் தலையை மேல் தூக்கி, அனைவரின் முன்னிலையிலும் இருக்கரங்கள் கூப்பி வணக்கம் வைக்க.

ஹீரோவின் இதழோரமோ முகிழ்நகை ஒன்று மலர்ந்து மறையாமல் டிமிக்கி கொடுக்க, விரல்களால் அதை மறைத்தவனோ மொய்குழல் அவளையே பார்த்தான் தீவிரமாய்.

இடுப்புக்கூட தெரியாமல் மிக நேர்த்தியாகவே புடவைக் கட்டியிருந்தாள் சனிதம் அவள். மணி, மணியான ஜிமிக்கியோ இன்னும் அதன் ஆட்டத்தை நிறுத்தாது அசைந்தது.

''ஓஹ், இவுங்கதான் குட்டிமாவா?! நான்கூட ரொம்ப குட்டியா இருப்பாங்களோன்னு நினைச்சிட்டேன்!''

என்ற தரனோ மீண்டும் ஆரம்பிக்க, மற்றவர்களோ சிரித்திட ஆரம்பித்தனர்.

''பேசு, பேசு, நல்லா பேசு! உனக்கும் இப்படி ஒரு சம்பவம் நடக்கும்லே அப்பறம் பார்த்துக்கறோம் நாங்க!''

என்ற சந்திரனோ, மச்சானின் நண்பனை கலாய்க்க, பெண்களோ வணக்கம் வைத்த மணமகளை நோக்கி படையெடுத்தனர்.

புவனா எடுத்து கொடுக்க, சந்திரிகாவோ மருமகளின் தலையில் அவர்கள் தரப்பில் கொண்டு வந்திருந்த முல்லையைச் சொருகினார்.

ஆகுவோ பார்வைகளை வேறு பக்கம் திருப்பினான், நெற்றியோரத்தில் கரங்கள் கொண்டு, மலர் கொண்ட அலரின் வதனமோ அவனை கொக்கி போட்டு இழுக்க.

சித்ராவோ மெல்லிய புன்னகையின் ஊடே நின்றிருந்த நாயகியின் நெற்றியில் குங்குமத்தை வைத்து விட்டார்.

சொந்தக்கார பெண்ணொருத்தி காஃபி தட்டை கொண்டு வந்து, நேரிழையின் கையில் கொடுக்க, மிடல் கிளாஸ் மாயோளோ வந்திருந்தோருக்கு காஃபியை பறிமாறிட ஆரம்பித்தாள்.

பெரியவர்கள் பேச, சின்னவர்களோ பலகாரங்களை வாயிக்குள் திணிக்க, ஏந்திழையோ காஃபி தட்டை ஹீரோவின் முன் நீட்டி, ஆகு கப்பை கையிலெடுக்க, அவன் முகம் பார்க்காதே நகர்ந்தாள் அங்கிருந்து.

காஃபி ஒன்றும் அவனின் மிகப்பெரிய பிடித்தமெல்லாம் இல்லை. குடித்திடுவான் அவ்வளவே, பித்து, போதையென்று எதுவும் இல்லை. இப்போதும் அப்படித்தான்.

சூடான காஃபியை சில மிடறுகள் வைத்தவன் அடுத்தது என்னவோ என்ற யோசனையில், மகளிர் அணி புடைசூழ சிரித்துக் கொண்டிருந்த நங்கையையே உற்று நோக்கினான்.

அரிவை அவளை விட அழகான பலப்பெண்களை பார்த்திருக்கிறான் ஆகு. அதுவும், வருடத்தில் ஒருமுறை நடக்கின்ற கம்பெனியின் வருடாந்திர டைரக்டர் மீட்டிங்கில் இல்லாத தங்கச்சிலைகளே இல்லை எனலாம்.

வெவ்வேறான நாடுகளிலிருந்தும் பல பேரழகிகள் வாந்திடுவர். ஆனால், அவர்கள் யாரும் இப்படி தலை நிறைய மல்லியைக் கொண்டு ஆகுவை மடக்கிடவில்லை.

அவன் அம்மாவும் சரி, சித்தியும் சரி அவ்வப்போது கோவில்களுக்கு செல்லுகையில் வைத்திடுவர்.

அக்கா புவனாவும், ராதிகா அத்தையும் அவரவர் மூடை பொறுத்து சந்தியைக்கு (மல்லிகை) வாழ்க்கைக் கொடுத்திடுவர்.

ஆனால், ஆகுவிற்கு பிடித்தாற்போல அளவாகவும் அழகாகவும் மல்லிகைச் சரத்தைக் கொண்டிருந்தது பகினி இவள் ஒருத்தியே.

''பொண்ணுகிட்ட ஏதாவது கேட்கணுமா?!''

என்ற காஞ்சனாவோ ஆரம்பிக்க,

''அதெல்லாம் பின்னாலே பார்த்துக்கலாம். முதல்லே பொண்ணுக்கு மாப்பிள்ளையையும், மாப்பிள்ளைக்கு பொண்ணையும் புடிச்சிருக்கான்னு கேட்டுக்குவோம்?!''

என்ற வெங்கட்டோ பாயிண்டாய் பேச, மணக்கோலம் கொண்ட ஆயிழையோ தெய்வீகனின் காதில் கிசுகிசுத்து மேல்மாடி நோக்கினாள்.

''என்ன சொல்லிட்டு போறா பொண்ணு?!''

என்ற ஜானகியோ, சிரித்தப்படியே கேட்க,

''பொண்ணு மாப்பிள்ளைக்கிட்டே தனியா பேச விருப்பப்படறா.''

என்ற தெய்வீகனோ மகளின் விருப்பத்தை பொதுவில் தெரியப்படுத்த, அதற்கு எதிர்ப்பு கொள்ளா மாப்பிள்ளை சைட்டோ, ஆகுவை துரத்தி விட்டது மேல் மாடிக்கு பெண்ணிடம் பேச.

பால்கனி சென்றவனை, இரண்டடுக்கு வீட்டின் மேல் தளதில் நின்று சுற்றத்தை வெறித்திருந்தவளின் வெற்றிலை வடிவங்கொண்ட புறமுதுகு பிளவ்ஸ்தான் வரவேற்றது.

''ஹாய்..''

என்று அவனே ஆரம்பிக்க, திரும்பியவளோ சின்னதாய் முறுவல் ஒன்றுக் கொண்டு தலையைச் சாய்த்து, எட்டி பார்த்தாள் அவனுக்கு பின்னால்.

அவளின் செய்கையைக் கண்ட ஆகுவோ புரியாது, அவனுமே திரும்பி பார்த்தான் அவனுக்கு பின்னால் எதை அப்படி மும்முரமாய் தேடுகிறாள் பெண்ணென்று.

ஆகுவிற்கு பின்னால் எதுவும் இல்லை, யாருமில்லை. இருந்தும் முன்னிருந்த கோதையின் தேடல் தீர்வதாய் இல்லை.

''யாரே தேடறீங்க?!''

என்று ஆகுவே மீண்டும் ஆரம்பிக்க,

''மாப்பிள்ளை வரலையா?!''

என்றவளோ அவன்தான் மாப்பிள்ளை என்று தெரியாமல் கேட்க,

''நான்தான் மாப்பிள்ளை!''

என்றவனின் முகமும் குரலும் கோணிடாமல் இல்லை.

''நீங்களா?!''

என்றவளோ அதிர்ச்சி கொள்ள,

''ஏன், என்ன பார்த்தா மாப்பிள்ளை மாதிரி தெரியலையா?!''

என்றவனோ முறைக்காமல் இல்லை.

''இல்லே, நான் ரெட் கலர் டி- ஷர்ட் போட்டிருந்தவர்தான் மாப்பிள்ளைன்னு நினைச்சேன்!''

என்றவளோ அருளை குறிப்பிட,

''இப்போ என்னே, அவனே புடிச்சிருக்கா?! கல்யாணம் பண்ணிக்கணுமா?! தாராளமா போய் பண்ணிக்கோங்க! போங்க!''

என்றவனோ குரலில் அழுத்தங்கொண்டு கையை நீட்டினான் விறலியவளை அங்கிருந்து போகச்சொல்லி,

''இப்போ எதுக்கு இப்படி சிடுசிடுன்னு எரிஞ்சி விழறீங்க?! தெரிஞ்சா கேட்டேன்?! தெரியாமத்தானே கேட்டேன்?! அதுக்கு போய் இப்படி கோபப்படறீங்க?! இப்படி சிடுமூஞ்சி மாதிரி இருந்தா எந்த பொண்ணு நம்புவா இந்த தாடி வெச்ச மூஞ்சிதான் மாப்பிள்ளைன்னு?! என் வீட்டு பப்பி கூட நம்பாது!''

என்றவளோ இடையில் கரங்கள் இறுக்கி அவனை வார்த்தைகளால் கடித்து துப்ப,

''உங்களே நம்ப சொல்லி நான் ஒன்னும் கேட்கலே மேடம்! யாரே புடிச்சிருக்கின்னு சொன்னிங்களோ அவனையே போய் கட்டிக்கிட்டு அழுங்கே! அவன் பேசவே மாட்டான்! நீங்க அவனுக்கும் சேர்த்தே பேசிடுவீங்க! இப்படி வாயடிக்கறே உன்னலாம் சத்தியமா கல்யாணம் பண்ணி என்னாலே குடும்பம் நடத்த முடியாது! உனக்கு அவன்தான் ரைட்டு!

என்ற ஆகுவும் அவன் பங்கிற்கு வார்த்தைகளைக் கொட்ட, அவனை மூச்சிரைக்க வெறித்தவளோ,

''என்னடா, அந்த அருளே எனக்கு கோர்த்து விட்டு தியாக சிம்மல் ஆகலான்னு நினைக்கறியா?! அதுவும் கொக்கு மாதிரி வளர்ந்திருக்கற அவனுக்காக நான் பேசணுமா?! ஏன், அவன் என்னே ஊமையா?! இல்லே, நான் தெரியாமத்தான் கேட்கறேன், உனக்கு என்னே பார்த்தா எப்படி இருக்கு?! பசுமாடா நானு?! உரிமையா ஒருமையிலே பேசறே, பொண்டாட்டி மாதிரி?!

என்றவளோ அவன் நெஞ்சிலேயே முஷ்டி மடக்கி குத்தினாள் ஒரு குத்து கதத்தை அடக்கிட முடியாது.

''பாரு! பாரு! இப்போதான் சொன்னேன்! அதுக்குள்ளே நீயே நிரூபிச்சிட்டே இது வாய் இல்லே, கண்டதும் ஓடறே வாய்க்கால்னு!''

என்றவனோ மானினியவள் வாயை அழுத்தமாய் குவித்து புடிக்க,

''விட்றா! விடு! தாடிக்கார பொறுக்கி! விட்றா!''

என்ற மடந்தையோ, ஆணவன் கையை விடுவிக்க போராடி, வேறு வழியில்லாது அவன் ஆண்மையில் அவளின் முட்டிகால் கொண்டு பரிசளிக்க, துடிதுடித்து போனான் ஆகு.

விடுக்கென விரல்களை வல்வியவள் இதழ்களிலிருந்து பிரித்தவனோ, வாயை ஹனுமான் கணக்காய் குவித்து அடிவயிற்றை இறுக்கினான்.

''வலிக்குதா?! நல்லா வலிக்கட்டும்! எனக்கும் இப்படித்தான் வலிச்சது! விடு விடுன்னு சொன்னேன்தானே! கேட்டியா?!''

என்றவளோ ரணத்தில் கூனிக்குறுகி பால்கனி கம்பிகளை பற்றியிருந்தவன் தலையை வேறு ரெண்டு தட்டு தட்ட, ஆகுவோ உதடுகளை மடக்கியவாறு அவனை ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.

''அதுவும் என்னா தைரியம் உனக்கு! இத்தனை பேர் இருக்கும் போதே பாலியல் வன்புணர்வு பண்றே! மனுஷனா நீ?!''

என்ற ஒண்டொடியோ அதரங்களை பற்றியவன் மீது பழி சொல்ல,

''பைத்தியமாடி நீ?! உதட்டே புடிக்கறதெல்லாம் வன்புனர்வா?!''

என்றவனோ இன்னும் மிடல் நீங்காதே துடியிடையவளை வசைப்பாட,

''செக்ஸுவல் ஹராஸ்மெண்ட் பண்ணிட்டு எதிர்கேள்வி வேறே கேட்கறியாடா பொறுக்கி! துளிக்கூட மனுசுலே பயம் இல்லல்லே உனக்கு! வீட்டுலே இத்தனை பேர் இருந்தும் எப்படி இப்படி நடந்துக்க உனக்கு தைரியம் வந்துச்சு!''

என்றவளோ பால்கனி கம்பிகளை இறுக்கியப்படி வலியில் உழன்று சாலையை வெறித்தவனின் கையை இழுத்து வம்பு பண்ண,

''அழகு இருக்கறே அளவுக்கு அடக்கம் இருக்கும்னு நினைச்சது தப்பா போச்சு! முட்டாள்தனத்தோட சேர்ந்த அகராதிதான் இருக்கு உச்சியிலிருந்து உள்ளங்கால் வரைக்கும்!''

என்றவனோ அவளைக் கடந்து அங்கிருந்து அடிகளை முன்னெடுத்து வைக்க,

''அங்க மட்டும் என்ன வாழுதா?! பார்க்க மட்டும்தான் ஆள் டீசண்ட்! பேச்சையும், செயலையும் பாரு! பொறுக்கி மாதிரி!''

''ஹலோ, எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு! இதோட நிறுத்திக்கோ சொல்லிட்டேன்!''

என்ற ஆகுவிற்கோ சினம் பொங்கிட தொடங்கியது, தெரிவையின் தேவையற்ற விதண்டாவாதங்களால்.

''நான் ஏன் நிறுத்தணும்?! ஹான், நான் ஏன் நிறுத்தணும்?! பழக்கமில்லாத பொண்ணே உரிமையா வாடி போடிங்கறே! பட்டா போட்டவன் மாதிரி உதட்ட புடிக்கறே! முட்டாள் சொல்றே! பைத்தியம் சொல்றே! விட்டா இன்னும் என்னென்னெ சொல்லுவியோ. என்னலாம் பண்ணுவியோ, தெரியலே! இப்படிப்பட்ட உனக்கு எதுக்கு மரியாதை?!''

என்றவளின் ஆதங்கமோ பீறி வெடிக்க,

''நான் சொல்லிட்டேன், வேணாம்! இதோட நிறுத்திக்கோ, அதான் உனக்கு நல்லது!''

என்றவனோ அவன் முன்னிருந்தவளை விலகி மீண்டும் நடையைத் தொடர,

''முடியாதுடா தாடிக்கார பொறுக்கி!''

என்றவளோ அவன் கையை இழுத்து பின்னோக்கி தள்ளி, முன்னோக்கி ஓடினாள் வேகமாய்.

''சரியான வித்தாரக்கள்ளி!''

என்ற ஆகுவோ பல்லைக் கடித்த வண்ணம்,

''ஏய், நில்லுடி!''

என்றுச் சொல்லி அவளைத் துரத்த,

''நிறுத்தணுமா, நிறுத்தணும்! இதோ, இப்பவே போய் நிறுத்தறேன்! இந்த தாடிக்கார பொறுக்கியே கட்டிக்க முடியாதுன்னு சொல்லி!''

''நீ என்னடி என்னே வேணான்னு சொல்றது! நான் போய் சொல்றேன்! இது பொண்ணே இல்லே கிறுக்கு கபோதின்னு!''

என்ற ஆகுவோ, வதனியவளை இடித்து தள்ளி முன்னோக்கி ஓடினான் பால்கனியிலிருந்து வெளியேறி.

''எதெய், கிறுக்கு கபோதியா?! நீதாண்டா தாடிக்காரா கேடு கெட்ட கேவலவாதி!''

என்றவளோ அவன் பின்னந்தலையை கொத்தாய் பற்ற,

''போடி போக்கத்தவளே!''

என்றவனோ அவள் கரங்களை அசால்டாய் தட்டி விட்டு, குடுகுடுவென ஓடி வந்த வேகத்தில் மாடிப்படியில் அடிகள் வைக்க,

''நில்லுடா, டேய், தாடிக்கார பரதேசி!''

என்ற யுவதியுமே அவன் பின்னால் வந்து சரணடைந்தாள்.

யார் முந்தி போவதென்ற போட்டியில், இருவரும் ஒட்டி உரசி நின்றனர் அதிர்ந்து, திருமணம் வேண்டாமென்று சொல்ல ஓடோடி வந்த இருவரின் பெற்றோரும் கீழ் தளத்தில் தட்டை மாற்றி, நிச்சயத்திற்கான நாளையும் குறிக்க.

இதழ் மிடறும் முத்தம்...
 

Author: KD
Article Title: இதழ் மிடறும் முத்தம்: 2
Source URL: Neerathi-https://neerathi.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Back
Top