Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம் மக்களே! நீரதி உங்களை அன்போடு வரவேற்கிறது! கடிவாளமற்று எழுத ஆசையா neerathitamilsite@gmail.com மெயில் பண்ணுங்க!
Joined
May 18, 2024
Messages
26
DISCLAIMER ✍️

உண்மை சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்டிருக்கும் இந்நாவலில் கருணையற்ற சம்பவங்கள் மற்றும் படுபயங்கரமான சித்தரிப்புகளும் அடங்கிய பல காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இது பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட வாசர்களுக்கு மட்டுமே உரித்தான படைப்பாகும். கதைப்போக்கு நாவல் வாசிப்போரை கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கும்.

ஆகவே, இதயம் பலவீனமானவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் உடல் சுகமற்றவர்கள் இக்கதையைத் தவிர்ப்பது நல்லது.

ஆதலால், கதையோடு ஒன்றி அதன் சாராம்சத்தை புரிந்துக்கொள்ளும் பக்குவம் கொண்டோர் மட்டும் இக்கதையை படிப்பது நல்லது.

நன்றி.
வணக்கம்.

______________________________________________உறை பனிக்குள் உதிர நெடி


வாசகர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்...." உறை பனிக்குள் உதிர நெடி" இது என்னோட புதுக் கதை.. கண்டிப்பா கதைக்குள்ள போறதுக்கு முன்னாடி தலைப்போட அர்த்தத்த சொல்லியே ஆகனும்... அடர்ந்த பனிக்கட்டிக்கு கீழே உறைஞ்சு போய் இருக்குற இரத்தத்தை பார்க்கவும் முடியாது.. அதன் வாடையை உணரவும் முடியாது.. பனிக்கடியை பாக்கும் போது அழகான வெண்மையாக நமது கண்களுக்கு குளுமையானதாக காட்சியளிக்கும்... அதே போல தான் ஒரு சமூகத்துக்கு நடந்த அவலம், அவமானம், வேதனை இதெல்லாம் ஆழமாக புதையுண்டு கிடக்கிறது... இந்த அட்டூழியத்தை செய்தவர்களை நல்லவர்கள் என்ற போர்வையில் சமூகத்தில் பலர் கொண்டாடுகின்றனர்...

இல்லை அவர்கள் நல்லோர் இல்லை... அவர்களால் நிகழ்த்தப்பட்ட அகோர கொலை வெறித் தாண்டவம் சற்றே இன்று உலகறிய செய்யப்பட்டுள்ளது... அந்த காலகட்டத்தின் நிகழ்கின்ற காதல் கதை ஒன்றை உண்மையோடு கற்பனை கலந்து எழுதப் போகிறேன்.. உங்கள் ஆதரவை எதிர் பார்க்கும் நான் 😊...(தகவல் பெறப்பட்ட நூல் - "சாட்சியமாகும் உயிர்கள் :- சர்ஜுன் ஜமால்தீன் LLB, யூடியூப் சேனல்கள் மற்றும் கூகுள் விக்கிப்பீடியா ஆதாரங்கள்)

"தர்ஷன்!!! மகன் இன்னும் நீங்க போகலியா? எவ்வளவு நேரம் போய்ட்டு பாருங்க.. சாப்பாடு கட்டி வெச்சிருக்கேன்.. உங்கட கூட்டாளிமாரும் வந்துட்டாங்க.. எவ்வளவு நேரம் தான் உங்க தங்கச்சி கூட சண்டை போடுவீங்களோ வாங்க" என அழைத்தது வேறு யாரும் இல்லைங்க நம்ம கதாநாயகன் தர்ஷனோட தாய் "சாந்தி அம்மாள்" தான்... தர்ஷன் கிழக்கு இலங்கையின் மட்டக்களப்பைச் சேர்ந்த இளைஞன் அம்மா சாந்தி அம்மாள் இல்லத்தரசி... அப்பா நாகராசன் போடியார் (பண்ணையார்).. தங்கை மதிவதனி தரம் பன்னிரெண்டில் கல்வி பயில்கிறாள்... அண்ணன் நிரோஜன் அரச பாடசாலையின் ஆங்கில ஆசிரியர்... பாட்டி கனகாம்மாள் என கூட்டாக வாழும் குடும்பத்தில் பிறந்தவன்...

அசோக், யசோதரன் என இரு இணை பிரியாத தோழர்கள் உண்டு.." ஜட்டி போடாத காலத்துல இருந்தே நாங்க கூட்டாளிங்க(நண்பர்கள்)" என அடிக்கடி அசோக் தங்கள் நட்பின் வரலாற்றை பலரிடம் கூறுவதுண்டு..

" டேய் தர்ஷன்!! இன்னும் எவ்வளவு நேரம்டா மச்சான் நாங்க காத்திட்டு நிக்கிற? பஸ் வந்தா விட்டிட்டு ஓடிருவம் பாத்துக்க" என்றான் யசோதரன்... "செரி! செரி! இந்தா வாரன் டா... என் தங்கச்சி பிசாசு சும்மா இருக்க விடுராளா.. என் கொப்பி( நோட்புக் ) ,பேனை எல்லாம் களவெடுத்து வெச்சு.. அதுல அவள் பேர எழுதிட்டு என்டத தொடாதனு சண்டை போடுறாள்டா" என்றான் தர்ஷன் கடுப்புடன்....

"டேய்!!! போடா பனமரம்... கருவண்டு"என மதிவதனி அறையில் இருந்து சத்தம் கொடுக்க, " வா மச்சான் நாம போவலாம்... பஸ்ஸுக்கு டைம் போயிட்டு.. என தர்ஷன் கூற மூவரும் பேசிக் கொண்டே பஸ் தரிப்பிடத்தை நோக்கி விரைந்தனர்....

" ஏன் மச்சான் இந்த... டைம் போயிட்டுனு ஒரு வார்த்தை சொல்றியே!!! அத நாங்க ரெண்டு பேரும் வாசல்ல வந்து பிச்சைக்காரன் போல நிக்கிறப்ப விளங்கலியாக்கும் " என்றான் அசோக்... "ஈஈஈஈ" என பல்லைக் காட்டிய தர்ஷன் "அங்க பாரு மச்சான்... பஸ் வந்திட்டு ஏறு" என நண்பர்களை துரிதப்படுத்த, மூவரும் ஏறி கொண்டு பல்கலைக் கழகத்தை நோக்கி பயணப்பட்டனர்...

ஆம் இலங்கையின் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ,கலைப் பிரிவில், மூன்றாம் ஆண்டு கல்வி பயிலும் மாணவர்கள் .. "என்ன மச்சான் ஏறாவூர் வந்துட்டா" என யசோதரன் கண்ணடித்து அசோக்கிடம் கேட்க "அட மச்சான் ஏறாவூர் போய் கன நேரம் (அதிக நேரம்) போய்ட்டுடா" என்றது தான் தாமதம் "என்ன! என்ன! ஏறாவூர் போய்ட்டா.. பஸ்ஸ நிப்பாட்டுங்க" என தர்ஷன் சத்தம் போட அசோக் அவனின் வாயை பொத்த, யசோதரன் கோழி அமுக்குவது போல் அமுக்கி சீட்டில் உட்கார வைத்தான்...

" மச்சான் சோலியன் குடும்பி சும்மா ஆடாதுனு சொல்லுவாங்கடா.... இது தான் நீ பஸ்ஸுக்கு ஏற அவசரப்பட காரணமா?" என கேட்டான் யசோதரன்...." அட நாம பாதி வழிய கூட தாண்டலடா... என்னடா அவசரம் உனக்கு "என அசோக் கேட்க "இல்லடா மூனு நாளா அவ வரல.. அவ முகம் கண்ணுக்குள்ளே நிக்கிடா" என தர்ஷன் வருத்தமாக கூறினான் ... "மச்சான் இது சரியா வரும்னு உன்ட மனசு சொல்லுதா?" என அசோக் மீண்டும் கேட்க "தெரியாதுடா.... இருந்தாலும் எனக்கு சாஹிபா இல்லாம வாழ முடியாதுடா" என கலக்கம் நிறைந்த குரலில் தர்ஷன் கூறவும் அவனது காதலின் ஆழம் புரிந்த நண்பர்களால் அவனுக்கு உதவ முடியவில்லை.. காரணம் தர்ஷன் இந்து.. சாஹிபா முஸ்லிம்... அதையும் தாண்டி அவர்கள் வாழும் சூழல்.. இரு மதமும் இருமனம் இணைந்து திருமணம் வரை கொண்டு செல்லுமா என்பது ஐயமே...

பஸ்ஸின் முன் கண்ணாடி வழியாக சாஹிபா தோழிகளுடன் பஸ் தரிப்பிடத்தில் நிற்பதைக் கண்ட தர்ஷன் வானத்திற்கும் பூமிக்கும் இடையே குதித்தான்... " மச்சான்!! மச்சான்!! சாஹிபா நிக்காடா " என அசோக்கின் முதுகில் தர்ஷன் ஆனந்த வாத்தியம் கைகளால் வாசிக்க "டேய் மாடு!! நோகுதுடா... அதுக்கு ஏன்டா எனக்கு போட்டு அடிக்கா" என நெளிந்தான் அசோக்... பஸ் தரிப்பிடத்தில் வந்து நிற்க சாஹிபா அவள் தோழிகளான கதீஜா மற்றும் சைத்தூனுடன் பஸ்ஸில் ஏறினாள்...

சாஹிபா முகத்திரை அணியும் பெண்... கதீஜா மற்றும் சைத்தூன் அணிய மாட்டார்கள்... பஸ்ஸில் ஏறியதும் விழிகள் இரண்டும் தர்ஷனை தேடி கண்டு கொண்டன.. அளவான கேசம் தாடி மீசையுடன் இருபத்து நான்கு வயது ஆடவனாக அம்சமாகவே இருந்தான்... அவன் தங்கை கூறுவது போல் அவன் கருவண்டு அல்ல பிரவுன் நிற தேகம்... ஒரு ஓரப் பார்வையோடு தலையை கவிழ்ந்து கொண்டாள் சாஹிபா... பஸ் ஏறாவூரை தாண்ட அடுத்த நிறுத்தத்தில் ஏறிக் கொண்ட நபர்கள் கூறிய செய்தியில் பயணிகளுக்கிடையே சலசலப்பு ஏற்பட்டது...

"என்ன! என்ன! என்று எல்லோரும் பதற "இடைல போற வழில இயக்கம் நிக்கிது... சோனவங்கள (முஸ்லிம்கள்) வெட்றானுங்க.. திரும்பி போங்க" என்பது தான் அச்செய்தி... சாஹிபாக்கும் அவள் தோழிகளுக்கும் மற்றும் இன்னும் சில முஸ்லிம் பயணிகளுக்கும் உயிர் ஊசல் ஆடியது இச்செய்தியால்... அவர்களின் கையில் சிக்கினால் உயிரோடு உலை வைப்பார்களே கொடூர பாவிகள்...
போன மாதம் தான் சாஹிபாவின் குடும்பத்தில் இயக்கத்தினரால் ஒரு துயர் நடந்தது.. அதுவே இன்னும் ஆறவில்லையே!!!

ஆம் ஒரு மாதத்திற்கு முன்னர் மதிய வேளையில் சாஹிபாவின் அண்ணன் ஜமால் வேர்க்க விருவிருக்க "உம்மா!!! உம்மா!! (அம்மா) "என அழைத்துக் கொண்டு ஓடி வந்தான்... கிணற்றடியில் துணி துவைத்து கொண்டிருந்தார் அம்மா சக்கீனா... அவருக்கு உதவியாக வாளியால் நீர் அள்ளி ஊற்றிக் கொண்டிருந்தாள் சாஹிபா..." உம்மா!!! எங்க தான் கெடக்கீங்க... கூப்புர்ரது கேக்கலியா" என ஜமால் கத்த "இந்தா வாரன் மகன்" என குரல் கொடுத்தவர், "சாஹிபா!! நீ சொச்சம் (மிச்சம்) இருக்ற உடுப்ப கழுவு.. நாநா (அண்ணன்) கூப்புர்ரான்.. என்னண்டு கேட்டுட்டு வாரன்" என கூறி கைகளை அலம்பிக் கொண்டு எழுந்து சென்றார்...

" என்ன மகன்!! கூப்புட்ட.. உடுப்பு கழுவிட்டு நின்டேன் சொல்லுங்க" என ஜமாலின் தாய் சக்கீனா கேட்க "உம்மா!!!! நம்ட அன்சார் நாநாவ இயக்கம் கடத்திட்டானுங்க" என கூறியது தான் தாமதம்"என்ட அல்லாஹ்வே!!" என மார்பில் அடித்து கொண்டு கதறினார் சக்கீனா..

இந்த சத்தத்தைக் கேட்ட சாஹிபா வேலையை பாதியிலேயே விட்டுவிட்டு ஓடி வந்தவள், "என்ன நாநா!!" என ஜமாலிடம் கேட்க "சாஹி!! நம்ம பல்கீசு பெரியம்மாட மகன் பொலிஸ் அன்சார் நாநாவ, இயக்கம் கடத்திட்டானுங்க" என நொந்து போய் கூற "அல்லாஹ்வே!! அவரு பொஞ்சாதி வேற புள்ளத்தாச்சியா இருக்கா நாநா... அடுத்த மாசம் டேட் (பிரசவ திகதி)... நேத்து தானே போய்ட்டு பாத்துட்டு வந்தோம்.. என்ன நடந்தயாம்?".‌.. என அழுது கொண்டே அவள் கேட்டாள்...

"ஸ்டேஷன்ல டியூட்டி முடிச்சிட்டு இரவு ஊட்டுக்கு (வீடு) போற வழில கடத்திட்டானுங்க... காலைல பொலிஸ் ஸ்டேஷன்கு அறிவிச்சு இருக்கானுங்க போல... மையித்த (இறந்த உடல்)இந்த இடத்தில போடுவோம்... வந்து தூக்கிட்டு போங்கனு... அப்ப தான் பெரியம்மா வீட்டுல எல்லாருக்கும் தெரிய வந்திருக்கு ...அது வரைக்கும் நாநா டியூட்டில இருக்காருனு தான் எல்லாரும் நினச்சி இருக்காங்க... மையித்த எடுக்க இப்ப போகனும்.. நானும் போப்புறன்" என ஜமால் கூற, "அல்லாஹ் நீங்க போகாதீங்க மகன்.. எனக்கு பயமா இருக்கு.." என தாய் சக்கீனா அழுதார் ...

"உம்மா!! எத்தனை நாளுக்கு நாள் இந்த அக்கிரமம் தொடரும்... நான் போய்ட்டு வாரன்". என ஜமால் இறந்த உடலை எடுக்க உறவினர் ,மற்றும் ஊர் பிரமுகர்களுடன் செல்ல வெளியாகினான்... சக்கீனா அழுது ஓய்ந்து விட்டார்.. அவர் எதுவும் உண்ணவில்லை.." உம்மா வாங்க நாமளும் பெரியம்மாட்ட போவோம்... வாப்பா (அப்பா) இன்னும் வரல... அங்க தான் நிப்பாங்க போல" என பேசி, ஓரளவு தன் தாயை தேற்றி, பெரியம்மா பல்கீசின் இல்லம் வந்தடைந்தாள் சாஹிபா....

மரண வீட்டில் ஆளுக்கொரு மூலையில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தனர் உறவினர்கள்... ஒரு சிலர் இறந்த மனிதரையோ அல்லது உடலைப் பற்றியோ ஏதோ பேச அவர்களை எல்லாம் கடந்து சாஹிபாவும், அவள் அம்மாவும் பெரியம்மா மற்றும் கடத்தப்பட்ட நபர் அன்சாரின் மனைவி இருக்கும் அறையை அடைந்தனர்....

நிறை மாத கர்ப்பிணியாக இருக்கும் கடத்தப்பட்ட முஸ்லிம் காவல் துறை அதிகாரி அன்சாரின் மனைவியை கண்ட போது சாஹிபாவால் அழுகையை அடக்க முடியவில்லை.. தனக்கே இப்படி என்றால் அந்த பெண்ணின் நிலை... எல்லோரும் ஏதேதோ ஆறுதல் கூற ,யார் பேச்சும் அந்த பெண் செவியில் நுழையவில்லை.... சுவற்றில் நிலை குத்திய பார்வையுடன், வலது கையை வயிற்றில் வைத்தவாறு, மூன்று வயது பெண் குழந்தையை அணைத்தவாறு இருந்தாள் அன்சாரின் மனைவி....

தொடரும்....__________
 
Last edited:
Back
Top