Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம் மக்களே! நீரதி உங்களை அன்போடு வரவேற்கிறது! கடிவாளமற்று எழுத ஆசையா neerathitamilsite@gmail.com மெயில் பண்ணுங்க!

ஏகாந்தமே ஏந்திழை மடி (அத்தியாயம்-12)

Joined
May 18, 2024
Messages
29
அவர்களில் தலைவன் போல் உள்ள ஒருவன் வெயினியின் அருகில் வந்தான்...வெயினியினது மூளை சிறிது நேரம் வேகமாக சுழன்று "ருத்ரன் தான் இவன்" என முடிவெடுத்தது..
அருகில் வந்தவன் அவளை நெருங்கி, அவளது இடது கை தோள் பகுதியை இறுக்கி ,"இந்த பொக்கிஷம் எல்லாமே எனக்கு சொந்தம் ...கொடுத்துட்டு போய்ட்டே இரு" என அவளை மிரட்டினான் ...கவி பாய்ந்து தடுக்க வர அருகில் நின்ற காவலாளி அடித்ததில் கவி சுருண்டு விழுந்தான்... ரத்னா அக்கா "கவிஈஈ" என அழுது கொண்டே அவனை அணைத்து கொண்டார்...

மீனா கண்களில் மிரட்சியுடன் நின்றாள்... வெயினி அசோக்கை தேட பின்னர் தான் நினைவு வந்தது எசக்கியுடன் சேர்ந்து சமையல் பொருட்கள் வாங்க அவனை உதவிக்கு அனுப்பி விட்டது...

"ருத்ரன் தானே நீ உனக்கு கொஞ்சம் கூட கூச்சமா இல்லையா? இவ்வளவு கேவலமா திருட நினைக்குற ?.."என கூறி அவனுக்கு எதிர் பாரா நேரத்தில் கன்னம் பழுக்க ஒரு அடி விட்டாள் வெயினி...
வெயினியின் அடியை அந்த முகமூடி நபர் எதிர்பார்க்கவில்லை ...அவளது செயலால் ஆதங்கம் கொண்டவன் அவளது நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான்... அவளுக்கு மறு கையால் கன்னம் பழுக்க ஒரு அடி விட்டான்... அதோடு அவள் மயங்கி விட்டாள்... சுமி ஒரு ஓரமாக உக்கார்ந்து நடுங்கிக் கொண்டிருந்தாள்... அந்த முகமூடி திருடன் தனக்கு பின்னால் இருந்தவர்களுக்கு சமிக்ஞை செய்ய அனைவரும் உள்ளே சென்று ஆவணங்கள் ,பொருட்கள் ,கணினிகள் என ஒன்றையும் விடமால் அனைத்தையும் கையகப்படுத்தினர்...

வெயினிக்கு அடித்ததால் அவள் மயங்கியதைப் பார்த்த மீனாக்கு அதீத கோபம் வந்தது... கூடாரத்தினுள் நின்ற அந்த முகமூடி நபரை தாக்க முற்பட்ட வேளையில், அவன் திடீரென மீனா புறம் திரும்ப அவளது கை பட்டு அவன் முகமூடி அவிழ்த்து கொண்டது... அவன் யாரென மீனா கண்டு கொண்டாள் ...அதிர்ச்சியில் உறைந்தது உடல் ,அவள் கண்கள் விரிந்தன ...அவன் பெயரை சத்தமின்றி அவள் உதடுகள் உச்சரித்தன....

அவள் தன்னை அடையாளம் கண்டு கொண்டாள் என்பதில் அவனுக்குமே சிறிது அதிர்ச்சி தான்... எனினும் சுதாகரித்து கொண்டவன் அருகில் இருந்த சுத்தியலால் மீனாவின் நெற்றியின் ஓரத்தில் அடிக்க அவள் நினைவிழந்து மயங்கி சரிந்தாள்.... அவர்கள் எல்லோரின் நிலையையும் கண்டவன் தனக்குள் இன்பத்தில் மூழ்கி பொருட்களை கவர்ந்து வண்டியில் புறப்பட்டான்....

அந்த கொள்ளையர்கள் சென்ற சிறிது நேரத்தில் அசோக்கும் ,எசக்கியும் வந்து சேர்ந்தார்கள் ...எதோ ஒரு மயான அமைதி அவ்விடத்தில் ஆட்கொண்டிருப்பது போல் ஓர் உணர்வு அவர்களுக்கு ...வண்டியில் இருந்து அவசரமாக இருவரும் இறங்கி வந்து பார்க்க விக்கித்து விட்டனர்..கவி ஒரு பக்கம் சருண்டு கிடந்தான்... சுமி ஒரு புறம் உறைந்து இருந்தாள்... வெயினி மயங்கி கிடந்தாள்... ரத்னா அக்கா மீனாவை தூக்கி மடியில் வைத்து கொண்டு அழுது கொண்டிருந்தார்... மீனாவின் தலைப்பகுதியில் இருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்தது... கூடாரத்தினுள் எல்லாம் சிதறிக் கிடந்தன...

என்னவென்று எதுவும் புரியாமல் யாரை முதலில் பார்ப்பது என்றும் தெரியாமல் எசக்கி பரிதவித்தான்...அசோக் ஆம்புலன்ஸ்கு கால் செய்தான்... ஆம்புலன்ஸில் மீனா ,வெயினி மற்றும் கவி ஏற்றப்பட்டனர் ...உதவிக்கு எசக்கி ஏறிக் கொண்டான்... அசோக் வண்டியில் ரத்னா அக்கா, சுமியை ஏற்றிக் கொண்டு ஆம்புலன்ஸை பின் தொடர்ந்தனர்...

ஆம்புலன்ஸ் அவ்வூரில் உள்ள எஸ்.வி.ஆர் ஹாஸ்பிடலின் முன்னால் நின்றது....மருத்துவமனை ஊழியர்கள், தாதியர்கள் என அனைவரும் துரித கதியில் செயற்பட்டனர்... வெயினி மற்றும் மீனா அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்...

ரத்னா அக்காவிடம் ;அசோக்கும், எசக்கியும் முழு விபரமும் கேட்டு அறிந்து கொண்டனர்... கவி சாதாரண பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தான் ...அவனுக்கு அவ்வளவு பாதிப்பு இல்லை...சுமி பயத்தால் வந்த அமைதியை தத்தெடுத்து இருந்தாள்....இது இவ்வாறு இருக்க மேல் அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் என பலர் வைத்தியசாலையை நிரப்பி இருந்தனர்...

வெயினியின் அம்மா அப்பா ,சுமியின் அம்மா அப்பா ,கவியின் அம்மா அப்பா என அனைவரும் சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு வந்து கொண்டிருந்தார்கள் ....வெயினி ஆபத்து கட்டத்தை தாண்டி கண் விழித்து விட்டதாக வைத்தியர் அசோக்கிடம் கூறினார்... ஆனால் மீனா கோமாக்கு சென்று விட்டதாக கூற எசக்கி இடிந்து போய் விட்டான்... ரத்னா அக்கா தலையில் அடித்துக் கொண்டு அழுதார்.

ரவி நேற்று சென்றவன் நடந்த விபரீதம் அறிந்து வைத்தியசாலைக்கு வந்திருந்தான்.... வெயினி மெது மெதுவாக எழுந்து தாதியரின் உதவியுடன் வெளியே வந்தாள்... அங்கு இருந்த ஒரு கதிரையில் மெதுவாக உட்கார்ந்தாள் ....பத்திரிகையாளர்கள் பலர் வெயினியிடம் கேள்வி கேட்டனர்..

"மேடம் சரியா இன்னைக்கு நீங்களும் தொல்பொருளை கண்டுபிடிக்க, எப்படி அது திருடப்பட்டது ?"என்றும்;

இன்னொருவன் "அது யார்னு உங்களுக்கு தெரியும்னு சொல்றாங்க.. உண்மையா ?"என்றும் மாறி மாறி கேள்வி கேட்க ;அசோக் தான் அவர்களுக்கு பதில் கூறினான்..."அவங்க பேசுற நிலைமைல இல்லை "என்று கூறியவன் பத்திரிகையாளர்களிடம் "இப்டி ஒரு ஆராய்ச்சி பண்ண போறோம்னு அவங்க சொல்லும் போது ஆதாரவா பத்திரிகைல நாலு எழுத்து எழுத முடியல ..ஆனா !ஒரு பிரச்சினைனா அதெப்படி மத்தவங்கள குறை சொல்ல வரீங்க?" என்று கூறி அனைவரையும் அனுப்பி விட்டான்...

மேலதிகாரிகள் வெயினியிடம் வந்து "இந்த ஆராய்சில நீங்க கண்டு பிடிச்ச பொருளை சேதாரம் இல்லாம எங்க கிட்ட ஒப்படைக்கல ....அதனால உங்கள வேலைய விட்டு இடை நிறுத்தம் செஞ்சிட்டோம்.... இந்த ஆராய்சில கிடைச்ச பொருட்கள எங்க நிறுவனத்திடம் ஒப்படைக்கல ....அதுக்கு செலவு பண்ண தொகை நஷ்டம் ஆகிட்டு.... ஸ்பான்சர் எங்களுக்கு அவரோட நஷ்ட தொகைய கேட்டு மனு கொடுத்து இருக்காரு.... சோ அந்த தொகையை நீங்க திருப்பி கொடுக்கனும்.... அது மட்டும் இல்ல சரியா பொருட்கள் கண்டு பிடிச்ச அன்னைக்கே களவாடப்பட்டும் இருக்கு அதன் காரணமாக இந்த கொள்ளைல உங்களுக்கும் தொடர்பு உண்டா ?என்கிற வகைல போலீஸ் விசாரணை செய்வாங்க" என அவர்கள் அடுக்கிக் கொண்டு போக வெயினி மனமுடைந்து சிலையென சமைந்து விட்டாள்....

ரவி இவை அனைத்தையும் கை கட்டி வேடிக்கை மட்டுமே பார்த்தான்.. வெயினிக்கு அந்நேரத்தில் யாருடைய ஆதரவுமே கிடைக்கவில்லை... அசோக்கின் பேச்சு மட்டுமே இருளில் கிடைத்த மின்மினி பூச்சியின் ஒளியானது.....ருத்ரன் அவள் வாழ்வில் நிகழ்த்திய வெறியாட்டம் அவளது வாழ்வையே தலை கீழாக மாற்றி விட்டது...

கடலில் இருந்து வந்த பிறகு அடிப்படை வசதிகள் குறைவு என்பதால் டெலிபதி தெரிந்த ஆழ்கடலோடிகளை ஹோட்டல்கு தங்க அனுப்பி விட்டாள் வெயினி ....எசக்கி ,அசோக் இருவரும் சந்தைக்கு சென்றிருந்தனர்....அவள் கூடாரத்திற்கு திரும்பும் போது ருத்ரனும் அவன் ஆட்களும் இல்லை.... அதனால் வந்தவன் ருத்ரன் தான் என துல்லியமாக கணக்கிட்டாள் வெயினி....

இவளது இன்னல்கள் யாவும் இடியாப்ப சிக்கலாய் சிலந்தி வலையென இவளை பின்னியது....வெயினியின் தாய் தந்தையரும் ஏனையோரும் வந்து சேர்ந்தார்கள்....சம்பவம் அறிந்து ரவியின் பெற்றோரும் வந்திருந்தனர் ...யாரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.. டாக்டரிடம் பேசி விட்டு, வெயினியையும் கவியையும் டிஸ்டார்ஜ் செய்து கொண்டும் மீனாவை சென்னை ஹாஸ்பிடல்கு மாற்றுவதற்கு தேவையான ஆவணங்களை பூரணப்படுத்தவும் என அனைத்து வேலைகளும் முடிய நேரம் மாலை ஆறு மணியாகியது.....

மீனா மாத்திரம் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டாள் ...உடன் எசக்கியும் ஏறிக் கொண்டான்...மற்றைய அனைவரும் அவர் அவர் காரில் வீட்டை நோக்கி சென்றனர்....

அதிகாலை நேரத்தில் தங்களது வீட்டை அடைந்தனர் அனைவரும்...எசக்கி ஹாஸ்பிடலில் மீனாவிற்கு உதவியாளனாக மாறி விட்டான்.. ரவி மற்றும் அவனது பெற்றோர் எதுவும் பேசாமல் அவர்களது வீட்டிற்கு சென்று விட்டனர்... வெயினியின் தாயும் தந்தையும் மனதளவில் மிகவும் சோர்ந்து இருந்தனர்... சோஃபாவில் இருந்தவாறே வெயினி உறங்கி விட்டாள் யாரும் அவளை எழுப்பி தொந்தரவு செய்யவில்லை....

ஏதோ அதிகமாக சத்தம் கேட்கவும் வெயினி கண் திறந்தாள் .... நேரம் பார்த்தாள் காலை ஒன்பது மணி என காட்டியது.....என்ன சத்தம் என்றவாறு முன் கூடத்தை பார்த்தாள் வெயினி.... அங்கு ரவியின் அம்மா அப்பா மற்றும் ரவி என மூவரும் நின்று கொண்டு வெயினியின் பெற்றோரிடம் வாக்குவாதம் புரிந்து கொண்டு நின்றனர்.....

அரசல் புரசலாக வெயினியின் காதுக்கு அவர்கள் பேச்சு வார்த்தை கேட்டது.... "உங்க பொண்ணு ஒழுக்கமானவனு தான் அமெரிக்கால இருந்து எங்க பையனுக்கு வந்த சம்மந்ததை எல்லாம் விட்டுட்டு உங்க பொண்ணை நிச்சயம் பண்ணோம்... இந்த ப்ராஜெக்ட்ல இவ இவ்வளவு தில்லு முல்லு பண்ணி இருக்கா... அது மட்டும் இல்லாம இதோ இந்த போட்டோஸ பாருங்க ,அங்க வந்த ஸ்பான்சர் கூட இல்லீகல் தொடர்பு வேற...சீ பொண்ணா இது " என ரவியின் அம்மா பேசிவிட்டு இந்த கல்யாணத்தை கேன்சல் பண்ணுங்க என கூறி விட்டு வீட்டை விட்டு வெளியேறினார்கள்.... பின்னாடியே ரவியும் அவனது தந்தையும் சென்றனர்..... இவர்களின் பேச்சு வேதனை அளித்தாலும் திருமணம் நின்றது வெயினிக்கு சந்தோஷமே....

தனது தாய் தந்தை மனமுடைந்து இருப்பதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை ....மெதுவாக எழுந்து வந்து "அப்பா "என்றழைக்க கண்ணீரை துடைத்துக் கொண்டு" வா.. மா வெயினி எழுந்துட்டியா? இரு டீ எடுத்துட்டு வரேன்" என அம்மா சொல்லவும் ..."கொஞ்சம் இருங்க மா "என்றவள் கண்ணில் பட்டது மேசையில் ரவியின் பெற்றோர் வீசிவிட்டு சென்ற புகைப்படம் ....வெயினி அதை கையில் எடுத்துப் பார்த்தாள்... அன்று கடற்கரையில் படகின் மீது வெயினியை ருத்ரன் ஏற்றி விட்ட காட்சி அழகாக பதிவாகியிருந்தது..

அப் புகைப்படத்தில் அவளை தூக்கும் போது அவனது கண்களில் நிரம்பி வழிந்தது காதலா ?காமமா? இல்லை வேறு எதாவதா? என வெயினியால் அறிய முடியவில்லை ...

"இதை உண்மைனும் நான் தப்பானவனும் நீங்க நினைக்கிறீங்களா?" என்று தன் பெற்றோரைப் பார்த்து வெயினி கேட்க; அம்மா அவளை தழுவிக் கொண்டார்... "எங்க பொண்ணை பத்தி எங்களுக்கு தெரியும்... எத பத்தியும் கவலை படாதே" என அப்பா கூறினார்... வெயினி அடக்கி வைத்திருந்த அத்தனை அழுகையும் ஓஓ என அன்னை மடியில் அக் கணமே அழுது தீர்த்தாள் ...

வாசலில் யாரோ அழைக்கும் சத்தம் கேட்டு வெயினியின் அம்மா யாரென்று பார்க்க; விசாரணைக்கு போலீஸ் வந்திருந்தனர் ... வெயினி தன் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு "உள்ளே வாங்க சார் "என அழைத்தாள் உள்ளே வந்தவர்கள் வெயினிடம் நடந்தவை பற்றி விசாரிக்க ஆரம்பித்தார்கள் ....

தொடரும்.....
 

Author: இராவணச்சி
Article Title: ஏகாந்தமே ஏந்திழை மடி (அத்தியாயம்-12)
Source URL: Neerathi-https://neerathi.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Back
Top