Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம் மக்களே! நீரதி உங்களை அன்போடு வரவேற்கிறது! கடிவாளமற்று எழுத ஆசையா neerathitamilsite@gmail.com மெயில் பண்ணுங்க!

Sathya

New member
Joined
May 3, 2024
Messages
13
நேரம் : இரவு 8 மணி....

இடம் : தாம்பரம், சென்னை...

பிரதான சாலையில் அமைந்திருந்த ஒரு பெரிய பழைய பங்களா வீடு அது.. இன்டர்நேஷனல் டிரான்ஸ்போர்ட் சர்வீஸின் பேக்கர்ஸ் க்ரூ வேலையாட்கள் இங்கும் அங்குமாக பரபரப்பாய் ஓடிக் கொண்டிருந்தனர்.. அனைவருக்கும் ஒரே நிறத்தில் யூனிஃபார்ம்... தலையில் கம்பெனி லோகோ தாங்கிய சிவப்பு வண்ண தொப்பி...

சிலர் வீட்டில் இருந்த பொருட்களை தூக்கி வந்து அட்டை பெட்டிக்குள் அடைத்தனர்... ஒருவன் அந்த பெட்டிகளை நன்றாக பேக் செய்து சீரியல் நம்பர் அடங்கிய கியூ.ஆர் கோடு ஸ்டிக்கெரை மேலே ஒட்டினான்.. மிச்சமிருந்தவர்கள் அந்த பெட்டிகளை தூக்கிக் கொண்டு வாசலுக்கு சென்றனர்... அங்கே வீட்டுக்கு வெளியே பெட்டியை எதிர்பார்த்து இரண்டு நேஷனல் பர்மிட் டிரக்குகள் தங்கள் பின்வாயை திறந்தபடி நின்றிருந்தன..

அதையெல்லாம் வீட்டின் பால்கனியில் நின்றபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் நரேன்.. அந்த வீட்டின் முன்னால் உரிமையாளன். ஆம் இப்போது அவனது குடும்பத்திற்கு சொந்தமான இந்த பூர்வீக வீடு விற்கப்பட்டாகிவிட்டது... நரேனும் வெளிநாட்டில் செட்டில் ஆகபோகிறான்... அதனால் மிக முக்கியமான பொருட்களை மட்டும் கடல் மார்க்கமாக கொண்டு செல்லலாம் என்பது அவன் முடிவு... இப்போது நடந்து கொண்டிருக்கும் வேலை அதற்கானது தான்.. அதைத்தான் நரேனும் கவனித்துக் கொண்டிருக்கிறான்..

"இங்க நின்னு என்ன பண்ணிட்டு இருக்க?" நரேனின் பின்னால் சேலை உடுத்திய ஒருத்தி வந்து நின்று, கவனத்தை தன்மீது திசைமாற்றினாள்..

அழகான முகம்... கூர்மையான நாசி... கட்டவிழ்ந்த கருங்கூந்தல்... காதுகளில் பெரிய வளையம்... கட்டியிருந்த சேலை உடலை மறைத்து வளைவு சுழிவை மட்டும் கவர்ச்சியாக வெளிக்காட்டி, பெருமூச்சு விட வைத்தது...

நரேனின் கண்கள் உத்தரவின்றி தன் உடல் வனப்பை மேய்வதில் நானம் கொண்டு, "ஹலோ சார்.. கேள்வி கேட்டா! இப்படி தான் கண்டபடி பார்ப்பீங்களா?" குறும்பாக கேட்டு பார்வையில் போதையூட்டினாள்...

"பாக்குறது மட்டும் இல்ல சுவேதா..." வெடுக்கென அவள் இடையை பிடித்து இழுத்து தன் மார்மீது மோதவைத்து ஒட்டி உரசி நின்று, அவள் வாசனையில் கிறங்கி, "இப்படி பக்கத்துல கொண்டு வந்து..." மோகன சுருதியோடு முத்தமிட நெருங்கினான்...

"அய்யோ! நரேன்.. என்ன பண்ற நீ? ம்க்ம்.. விடுடா பிளீஸ்.." ஆசையிருந்தும் அவஸ்தையோடு நெளிந்தாள் சுவேதா...

"ஏன் உனக்கு வேணாமா?" மயக்கும் மெல்லிய மன்மத குரலில் வேண்ட, "யாராவது பார்க்க போறாங்க!" முயற்சி செய்து முடிந்தவரை அவனிடமிருந்து விழகினாள்...

நரேன் அவளை மீண்டும் இழுத்து அனைத்துக் கொண்டு, "பார்த்தா என்ன?! நியூயார்க்ல எல்லாம் இது ரொம்ப சகஜம் தெரியுமா?" என்றான் ஆப்பிள் கன்னத்தை வருடியபடி...

நரேனின் கண்களில் தெரிந்த ஆசையை ஆவலோடு கிரகித்தவள், தன் அழகை கண்டு அவன் அசந்த நேரத்தில் சட்டென தப்பித்துக்கொண்டு, "அதை அங்க போனதுக்கு அப்புறம் தெரிஞ்சுக்கிறேன்... இப்போ இருக்கது இந்தியால!" என பழிப்பு காட்டினாள்..

மேலே நின்றுகொண்டிருந்த அவர்கள் இருவரையும் தலையை தூக்கிப் பார்த்தான் ஒரு வேலையாள்.. பின் தான் கொண்டுவந்த பெட்டியை டிரக்கில் நின்றிருந்தவனிடம் ஒப்படைத்துவிட்டு மீண்டும் வீட்டுக்குள் நுழைந்தான்...

அவன் வருவதைக் கண்டு, "கணேஷ்.." அவர்களது மேலதிகாரி போல இருந்தவர் பெயரைச் சொல்லி அழைத்தார்.. அவர் போட்டிருந்த பவர் கிளாஸின் ஓரம் லேசாக விரிசல் விட்டிருந்தது பார்த்த மாத்திரத்திலேயே பளிச்சென தெரிந்தது...

'இந்தாளு எதுக்கு இப்போ கூப்பிடுறான்?' நினைத்தபடியே சலித்தபடி வேண்டாவெறுப்பாக முன்னால் போய் நின்றான் கணேஷ்...

மேலதிகாரி, "மேல கடைசி ரூம்ல சில பேக்கேஜ் இருக்கு... பத்திரமா கொண்டு வந்து வாசல்ல வை. கடைசியா டிரக்ல ஏத்தனும்.." என அவனுக்கு மட்டும் தனியாக உத்தரவிட்டார்..

முடியாது என்றா சொல்லமுடியும்? தலையை மட்டும் ஆட்டிவிட்டு கணேஷ் அங்கிருந்து நகரப் பார்க்க, "ஏய் இரு!!" என தடுத்தவர், முதுகு பக்கம் மூக்கை நீட்டியிருந்த அவனது தொப்பியை பிடித்து வெடுக்கென திருப்பிவிட்டு, "ஹ்ம்ம்.. இப்போ போ.." என்றார் அதிகாரமாக...

படியில் ஏறும்போது மீண்டும் தொப்பியை திருப்பிக்கொண்டான் கணேஷ்... மேலேயிருந்து பார்க்கும் போது வீடு இன்னும் பிரமாதமாய் விஸ்தாரமாக தெரிந்தது...

"அம்மாடி!! பெரிய வீடு தான் போலயே!? இவ்வளவு பெரிய வீட்டுல வெறும் மூணே பேரு! ஹ்ம்ம்.. வாழ்ந்தா இவங்கள மாதிரி வாழனும்..." இன்ச் பை இன்சாக வீட்டை கொஞ்சம் பொறாமையோடு அளந்தவன் கால்கள், படிகளை ஏறி முடித்து பத்தடி முன்னேறி நடந்து, பின் வலது பக்கம் திரும்பியதும் சட்டென நின்றுவிட்டது...

காரணம், அவனுக்கு முன்னால் தூரமாய் நீண்டிருந்த குறுகலான நடைபாதை, தன்னுள்ளிருந்த எதிரெதிரான அனைத்து அறைகளின் கதவுகளையும் இறுக்கமாய் இழுத்து மூடிக்கொண்டு அச்சுறுத்தும் அளவிற்கு மொத்தமாய் மூழ்கியிருந்தது இருளில்...

மேலதிகாரி சொன்ன அந்த 'கடைசி அறை' மட்டும் வெளிச்சத்தில் வியாபித்தது.. திறந்திருந்த கதவின் அளவிற்கு மட்டும் பளிச்சிட்ட ஒளிப்பாதை வெளியே வந்து, தரையில் விழுந்து, எதிர்அறையின் மூடிய கதவில் மெல்ல ஊர்ந்து மேலே ஏறிப்போய் உத்திரத்தின் பாதியில் ஒட்டிக் கொண்டிருந்தது.

'அதுவரைக்கும் இந்த இருட்டுக்குள்ளயா போகணும்?' நினைக்கும் போதே கால்கள் வலுவிழந்து தொடை நடுக்கம் எடுத்தது கணேஷிற்கு...

அக்கம் பக்கம் தேடி ஒருவழியாக சரியான ஸ்விட்சை கண்டுபிடித்து அடிப்பாகத்தை அழுத்தி, புதைந்து கிடந்த தலையை 'டொக்'கென்று மேலே வரவைத்தான்... உடனே கும்மிருட்டுக்குள் மலர்ந்திருந்த பிளாஸ்டிக் தாமரை மீது தவம் செய்துகொண்டிருந்த பழைய குண்டு பல்ப், இமைகளை சிமிட்டிவிட்டு சட்டென கண்ணை மூடிக் கொண்டது கருணை காட்டாமல்...

"வொர்க்ல இருக்கும் போது மொபைல் யூஸ் பண்ணக் கூடாது.. என்ன புரிஞ்சிதா??." வேலைக்கு சேரும்போது மேலதிகாரி சொன்னது மண்டைக்குள் ஓடியது ஒருமுறை....

"சோடாபுட்டி வேணும்னே மேல அனுப்பிருக்கான்.." வாய்க்குள்ளேயே வஞ்சித்தவன் இருட்டை இன்னொருமுறை பார்த்து எச்சிலை முழுங்கினான்... பின்பு வேறுவழியில்லால் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு இருட்டுக்குள் தன் முதல் காலடியை மிகமிக பத்திரமாக எடுத்து வைத்தான் கணேஷ்... அடுத்த நொடி அவனது மொத்த உருவமும் அந்த கருமைக்குள் கரைந்து கண்ணுக்குத் தெரியாமல் காணாமல் போனது...

கீழே இருந்தவர்களின் சத்தம் அணு அளவுக்கேனும் மேலே வரவில்லை... காதுக்கு எட்டியவரை அசாத்திய ஆக்ரோஷ நிசப்தம்... சுற்றிப் பார்த்தமட்டும் பக்கத்தில் வேறு எவரும் இல்லை... தட்டுத் தடுமாறி இருட்டுக்குள் இடித்துக்கொள்ளாமல் வேகமாக கடந்து போக முயற்சிக்க, அவனது காலடிச் சத்தம் துணைக்கு சேர்ந்து நடந்து திகிலூட்டியது... அழுத்தமாய் இழுத்து விட்டு மூச்சுக் காற்று அதிபயங்கரமாய் அனத்தியது... அப்போது அங்கே, அவனிருந்த அதே இருட்டுக்குள், அவனையே பார்த்தபடி ஏதோ ஒன்று சுவரோடு சுவராக...

முதுகெலும்பு விறைத்து பின் வெடித்தது போலிருக்க, செயலற்று செய்வதறியாது திகைத்து நின்றான் கணேஷ்... முக ரோமங்கள் முட்களாய் மாறி குத்தி, இதயம் படபடத்து, மூச்சுக் காற்றோடு இருளையும் உள்வாங்கி நுரையீரலை அடைத்தது...

"மேடம் நீ..நீ.. நீங்களா அ.அது?" வியர்த்த முகத்தோடு வெடவெடப்பாய் கேட்டான்...

அந்த உருவம் பதில் பேசவில்லை... அங்கிருந்து நகரவுமில்லை... பார்வையை மாற்றாமல் அங்கேயே நின்று பயமுறுத்தியது... அப்போது தான் அதையும் கவனித்தான்.. ஐந்தடிக்கு குறைவில்லாமல் நின்றிருந்த அவ்வுருவம் மூச்சு விட்டதாய் தோன்றவில்லை... சந்தேகத்தால் முளைத்த குருட்டு தைரியத்தில் நடுங்கும் கையை நீட்டி நகர்த்தி கஷ்டப்பட்டு கண்ணை இறுக்கி மூடி கடைசியில் தொட்டுவிட, வழுவழுப்பான உலோக உடம்பு விரலை வருடியது...

"அடச்சீ..."

உயிரற்ற சிலை என்றறிந்த பின்பு தான் சிலையாய் நின்றவனுக்கு உயிர் வர, அதே நேரம் உச்சியில் ஒட்டிக்கொண்டிருந்த பல்லி ஒன்று நிலைதவறி அவனது கழுத்தில் வந்து விழுந்து, உடைக்குள் புகுந்து நெளிந்து ஓட துடிதுடித்துப் போய்விட்டான் அக்கணத்தில்...

"ஆஆஆஆ....!" என அலறிக்கொண்டே உயிரை கையில் பிடித்தபடி ஓட்டம் பிடித்து, வெளிச்சத்தை அடைந்ததும் உடைகளை போட்டு உதறித் தள்ளினான்....

கீழே வேலை செய்து கொண்டிருந்தவர்களுக்கு அவன் போட்டச் சத்தம் கொஞ்சமாய் கேட்டாலும், ஒரேயொரு நொடி தான் நின்று தலையைத் தூக்கி மேலே பார்த்தார்கள்... பின் மீண்டும் தங்கள் வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டனர், இது வழக்கம் தானே என்பது போல...

கணேஷிற்கு இதயம் இலக்கில்லாமல் அடித்தது... இப்போது முகத்தோடு சேர்த்து கண்களும் வியர்த்துப் போனது தன்னை மீறி... "அவ்வளவு சத்தம் போட்டனே! ஒருத்தனாவது... வரானா பாரு?" பலமாய் மூச்சுவாங்கியபடியே கழண்டு போன சட்டை பொத்தானை போட்டுக் கொண்டு சிடுசிடுத்தான்...

கீழே விழுந்திருந்த தொப்பியை எடுக்கக் குனிய, "ஙீங்ங்ஙிர்ர்ர்..." உடலை சிலிர்க்க வைக்கும் படியான கீரீச்சிட்ட சத்தம் பின்னாலிருந்து மெதுவாய் வந்து மொத்தமாய் அடங்கியது... கைமுடிகள் நட்டுக்குத்தலாய் மாற, நடுங்கும் தலையை கஷ்டப்பட்டுத் திருப்பிப் பின்னால் கவனித்தான்... அங்கே அப்போது முழுவதுமாக மூடியிருந்த எதிர்அறையின் கதவு இப்போது அறையும் குறையுமாக திறந்து கிடந்தது...

அதிர்ச்சியில் மீண்டும் துணைக்கு மூச்சை இழுத்துப் பிடித்திக்கொண்டது நுரையீரல்.... கொஞ்சமும் தாமதிக்காமல் உதரலோடு உடலை திருப்பி நின்றான்... உள்ளே நுழைந்திருந்த வெளிச்சத்தின் உதவியால் இருந்த இடத்திலிருந்தே எட்டிப் பார்த்தான் பயந்த விழிகளோடு.. ரூமுக்குள் வெளிச்சம் விழுந்த இடத்தில் யாரும் இல்லை... எதுவும் இல்லை... சூன்யமான அமைதி சூழ்ந்திருந்தது...

பார்வையை கூர்மையாக்கி சுற்றியிருந்த இருட்டுக்குள் இன்னும் நன்றாக அழுத்தி ஆழமாக கவனிக்க, கன நேரத்தில் ஒன்று வெளியே வந்து அதிர்ச்சியடைய வைத்தது.. சாதாரண காற்றடைப்பட்ட பந்து தான்.. ஆனால் அசாதாரணமாக தன்னந்தனியாய் அவனை நோக்கியே பொறுமையாக தரையில் உருண்டு அருகில் நெருங்கி வரவர அடிவயிறு கலங்கியது... பயத்தில் பாதங்கள் பசை வைத்தாற்போல் ஒட்டிப்போனது தரையோடு...

உருண்டு வந்த பந்து நடுங்கும் காலில் இடித்து நின்று நிலையில்லாமல் ஆட, உச்சியில் சுர்ரென்று ஏதோ ஏறியது.. பற்கள் ஒன்றோண்டு ஒன்று உரசி நரநரத்தன. நாக்கு வறண்டு போயிற்று... வாயை திறந்தான்... பேச்சு வரவில்லை..

அழுத்தமாய் எச்சிலை முழுங்கிக் கொண்டு, "யா... யா... யார் அது?"

பதில் வரவில்லை.. ஆனால் இருட்டுக்குள் நின்று யாரோ தன்னை வெறித்துப் பார்ப்பதை போல உணர்ந்து உடல் கூசியது....

கண்கள் 'அழவா? வேண்டாமா?' என நீர் கோர்த்து கரையை உடைக்க உத்தரவு கேட்க, பயத்தோடு அந்த பந்தை மீண்டும் ஒருமுறை நன்றாய் கவனித்தான்.. அதில் காது வரை இரத்தச் சிவப்பில் வாயை வைத்துக் கொண்டு மர்மமாய் சிரித்தான் ஜோக்கர்... படத்தைப் பார்த்ததும் பட்டென பறந்து போனது பயமெல்லாம்...

"ஹே! குட்டி பொண்ணு! நீ தான அது?" நொடியில் நிலைமை மாற, சின்னப் பிள்ளையாய் மாறி இருட்டை நோட்டமிட்டான் கணேஷ்... தற்போது இருட்டுக்குள் நிழலாய் ஏதோ அசைந்தது.. பந்தை எடுத்து கையில் வைத்துக் கொண்டான்...

"எனக்கு தெரியும்.. எனக்கு தெரியும்... இதே பந்தை வட்சு தான அந்த சோடாபுட்டி மூஞ்சில அடிச்ச வந்ததுமே!? இப்போ என்ன பயமுறுத்த பாக்குறியா?!" பந்தை இருட்டுக்குள் லாவகமாக தூக்கிப் போட, அது தரையிலும் விழவில்லை, சுவரிலும் படவில்லை...

"என்ன பயமுறுத்த எல்லாம் உனக்கு இன்னும் நிறைய ட்ரைனிங் வேணும்.." என்றான்... கைகள் கலங்கிய கண்ணை துடைத்து விட்டது...

பின்பு வந்த வேலையை பார்ப்பதற்காக வெளிச்சம் நிறைந்த அறைக்குள் நுழைந்து அங்கிருந்த பெட்டியில் ஒன்றை தூக்க, சிரிப்பு சத்தம் ஒன்று வேறுபக்கமிருந்து வந்து செவிக்குள் புகுந்து மூளையில் குண்டூசியாய் குத்தியது... விட்டிருந்த படபடப்பும் மீண்டும் ஏனோ பற்றிக் கொள்ள பெட்டியை தாங்க முடியாமல் கை நழுவ தொடங்கியது...

உடனடியாக தூக்கிய பெட்டியை தரையை தாங்கவிட்டு, அறையை அவஸ்த்தையாய் ஆராய்ந்தான்... ஜன்னல் ஒன்று திறந்து கிடந்தது... சிரிப்புச் சத்தம் அதன் பின்னாலிருந்து வந்தது... நெஞ்சுக்கூடு வெடிக்கும் அளவிற்கு விரிய, நடையில் ஓட்டம் பிடித்து ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டி பார்க்க, கண்ட காட்சியில் அதிர்ந்து கண்கள் அகல விரிந்தன...

கீழே ஒற்றை ஊஞ்சல் முன்னும் பின்னுமாக ஆடிக் கொண்டிருந்தது... அதில் அவள் தனியாய் விளையாடிக் கொண்டிருந்தாள்... அந்தக் 'குட்டிப் பொண்ணு'

"அப்போ அங்க????" அவசர அவசரமாக தலையை உள்ளிழுத்து கழுத்தைத் திருப்ப எத்தனிக்க, முரட்டுக் கை ஒன்று மூர்க்கத்தனமாய் அவன் முகத்தை மொத்
தமாக பிடித்து, அவன் திமிரத்திமிரத் தரதரவென இழுத்துக்கொண்டு போனது எதிர்அறையின் இருட்டுக்குள்....
 

Author: Sathya
Article Title: அத்தியாயம் - 1
Source URL: Neerathi-https://neerathi.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Back
Top