Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம் மக்களே! நீரதி உங்களை அன்போடு வரவேற்கிறது! கடிவாளமற்று எழுத ஆசையா neerathitamilsite@gmail.com மெயில் பண்ணுங்க!

Sathya

New member
Joined
May 3, 2024
Messages
13
அந்த நதிக் கரையை ஒட்டியிருந்த நடைபாதையின் ஒரு கிரானைட் இருக்கையில் கண்மூடி சாய்ந்திருந்தான் சாய்பிரதாப்... இதயம் சீராக துடித்துக் கொண்டிருந்தது அவனுக்கு... பயமோ! படபடப்போ! ஆக்ரோஷமோ இல்லாமல் குழப்பத்தில் சாந்தமாய் மாறியிருந்தான்...

நதி நீரோடு தவழ்ந்து வந்த இரவு நேர தென்றல் அவன் உடலை இதமாய் வருட, அது தற்போதைக்கு அவனுக்கும் தேவைப்பட்டதாய் இருந்தது... டாக்டர் பக்கத்திலேயே அமர்ந்து மெளனமாக அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்...

மெதுவாக கண்களை திறந்தவன் நிமிர்ந்து உட்கார்ந்து, "நான் கோமால இருந்தனா?" பாவமாய் கேட்டான் டாக்டரை நோக்கி...

மறுப்பாய் தலையை அசைத்தவள், "இல்ல... ஆனா..." என்று எதையோ சொல்லவர, "நானும் என் பொண்ணும் கார்ல வேகமா போனோம்.. ஆக்ஸிடென்ட் ஆணுச்சு!!" என்றான் நினைவுகளின் தாக்கம் குறையாமல்...

"புரிஞ்சிக்கோங்க பிரதாப்... அது எதுவுமே உண்மையில்ல..." டாக்டர் மீண்டும் மீண்டும் அதையே சொல்ல, அவனால் அதை முழுவதுமாக மறுக்கவும் முடியவில்லை, ஏற்றுக் கொள்ளவும் மனம் வரவில்லை...

"அதுமட்டும் கனவா இருந்துருந்தா! ஆக்ஸிடென்ட் ஆன அதிர்ச்சியிலயே நான் சுயநினைவுக்கு வந்துருப்பேன்! ஆனா அப்படி நடக்கலையே?! கிட்டத்தட்ட செத்துட்டேன்.."

"கனவு இல்ல பிரதாப்... கற்பனை... அதுல இருந்து நீங்களா வெளியில வரணும்.. இல்ல வரவைக்கப்படனும்... இப்ப எப்படியோ! ஆனா இப்படி நடக்கிறது உங்களுக்கு இது முதல் தடவை இல்ல..." என்றவள் ஆதரவாக அவன் தோள்மீது அழுத்தம் கொடுத்து, "நீங்க ஒரு 'ஸ்கிசோஃப்ரினியா (பிளவுபட்ட மனநோய்) பேசன்ட்'.."

"நிரூபிக்க முடியுமா?" பட்டென்று கேட்டான் சாய்பிரதாப்...

டாக்டர் உடனே பதில் சொல்லாமல் ஓரிரு நிமிடம் கண்ணை மூடி நிதானித்தாள்... "ஓகே.." பெருமூச்சு ஒன்றை இழுத்து விட்டு, "உங்களுக்கு ஆக்ஸிடென்ட் ஆனதா சொன்னீங்க! ஏன் இப்போ உங்க உடம்புல எந்த வடுவும் இல்ல?"

"பிளாஸ்டிக் சர்ஜரி?" கதாசிரியனின் மூளை தாமதிக்காமல் பதிலை தயார் செய்தது....

"சரி... இப்போ விடுங்க.. கார்ல போகும்போது உங்க கூட யார் யார் இருந்தா?"

"நானும் என் பொண்ணும் மட்டும் தான்..."

"எங்க போயிட்டு இருந்தீங்க?"

"முடிவு பண்ணல.. 'எங்கேயாவது போயிடலாம்'னு நான் தான் சொன்னேன்..."

"அப்போ எங்கிருந்து போனீங்க?"

"அது.. அது..." முதல் மூன்று கேள்விக்கு தாமதிக்காமல் பதில் சொன்னவன் நான்காவதுக்கு திணற ஆரம்பித்தான்...

கண்ணை இறுக்கி மூடி நினைவுப்படுத்த நினைக்க, 'எங்கயாவது போயிடலாம்' என்றதும் அதன்பின்பு விபத்து நடந்ததும் தான் தெளிவற்ற காட்சியாய் தெரிந்தன.... அதற்கு முன்னால் நடந்த எதுவுமே நினைவுக்கு வரவில்லை....

சிக்கலான மன ஓட்டத்தோடு டாக்டரை ஏறிட்டுப் பார்த்தான் சாய்பிரதாப்... அவள் அடுத்தக் கேள்வியை கேட்டு அதிர வைத்தாள்...

"உங்க பொண்ணு பேர் என்ன?"

சாதாரண கேள்வி... ஆனால் சாய்பிரதாபிற்கு உலகமே காலடியில் நழுவியது போல இருந்தது... எவ்வளவு முயற்சித்தும் குழந்தையின் பெயர் அந்த தகப்பனுக்கு நியாபகம் வரவில்லை...

"என் பொண்ணு பேரு.. என் பொண்ணு பேரு..." உதடுகள் அதன் போக்கில் உலற, பெயரை யோசிக்க யோசிக்க மீண்டும் தலையை வலிக்க ஆரம்பித்தது...

'என் பொண்ணு பேரே எனக்கு தெரியாதா?' நினைப்பே நெஞ்சுக்கூட்டை கணமாக்கியது... விட்டிருந்த படபடப்பும் நடுக்கமும் நொடியில் அவனை பற்றிக் கொண்டது மீண்டும்...

பதறிப்போன டாக்டர் உடனே எழுந்து வந்து, "வேண்டாம்... வேண்டாம்.. ஸ்ட்ரைன் பண்ணிக்காதீங்க பிரதாப்! அது உங்களுக்கு நல்லதில்ல.." என்க, அவளது அவசர வார்த்தைகளும் அவனது அவஸ்தையான கேள்வி பதிலும் மாறிமாறி மண்டைக்குள் ஓடியது அவனை மீறி...

உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்த மனநிலையில் தட்டுத் தடுமாறி எழுந்தவன், அதிலிருந்து தப்பிக்க நினைத்து வேகமாக நடக்க ஆரம்பித்தான் அந்த நடைபாதையில்...

"பிரதாப்... நில்லுங்க... சொன்னா கேளுங்க..." டாக்டர் வேகமாக பின்தொடர, இவன் இன்னும் வேகமாக நடக்க ஆரம்பித்தான்...

"என் பொண்ணு பேரு என்ன? என் பொண்ணு..." கேள்வி நிற்காமல் எழுந்துகொண்டே போக, கால்கள் நிதானமில்லாமல் தடுமாற ஆரம்பித்தன..

நேராக நடக்க முடியாமல் வளைய ஆரம்பித்தது அவன் பாதை... பார்வையில் விழுந்த நடைப்பாதை விளக்கின் ஒளியும் மங்கலாகி மங்கலாகி பளிச்சிட்டு பிரகாசிக்க, ஒரு கட்டத்திற்கு மேல் அதைப் பொறுக்க முடியாமல் தலையை சுற்றிக்கொண்டு வந்து பின் பக்கமாக மயங்கி விழுந்து விட்டான்...

***********
"சாய்... சாய்.. என்னைப் பாரு..." மிகக் கனிவான குரல் செவிக்குள் மிதமாய் ஒலித்து, கொஞ்சம் கொஞ்சமாக இமைகளை விடுவித்தன...

இரவு நேரத்தில் மயங்கி விழுந்திருந்தவன் கண்ணை திறக்கும் போது, பகல் வெளிச்சம் அவனை அனுமதித்திருந்த அறையை நன்றாக ஆக்கிரமித்திருந்தது... குரல் வந்த பக்கம் மெதுவாய் தலையை திருப்பிப் பார்க்க, அங்கே கண்களில் பரிவோடு அவனையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள் அவன் மனைவி சுவேதா....

"இப்போ எப்படி இருக்கு?" பாசத்தோடு அவனது தலைமுடியை வருடிக் கொடுத்து கேட்டாள்...

சாய்பிரதாப் எதையும் யோசிக்கவில்லை... யோசிக்கவும் இதில் எதுவுமில்லை.... "டயர்டா இருக்கு..." என்றான் சீராக மூச்சுவிட்டபடி...

பின் முயற்சி செய்து எழுந்து பெட்டில் சாய்ந்து உட்கார்ந்து, "என்ன ஆச்சு?" என்றான் சுவேதாவைப் பார்த்து...

"எப்போதும் போல தான்.. ரொம்ப பிரச்சனை பண்ணி கடைசியில நிறைய யோசிச்சதால மயங்கி விழுந்துட்டியாம்.. வேற வழியில்லாம அப்படியே மயக்க மருந்து கொடுத்து தான் ரெண்டு நாளா ட்ரீட்மென்ட் கொடுத்தாங்க.." சுவேதா சொல்லிக் கொண்டிருக்கும் போதே அறையின் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள் லேடி டாக்டர்...

சாய்பிரதாப் இதழை மெல்லியதாக வளைத்து புன்னகைத்து, "ஹலோ டாக்டர்..." என்றான்...

அவளும் பதிலுக்கு புன்னகைத்து விட்டு, "அன்னைக்கு என்ன ரொம்ப சோதிச்சிட்டீங்க.." என்றாள் போலி கோபத்தில்...

"சாரி டாக்டர்.. என்னையே என்னால கண்ட்ரோல் பண்ண முடியல... எல்லாமே மறந்து போன மாதிரி இருந்துச்சு!"

"ஹ்ம்ம்.. இப்போ எப்படி ஃபீல் பண்றீங்க?"

"எனக்கே தெரியல... ஆனா வீட்டுக்கு போகணும்னு தோணுது.."

"தாராளமா போகலாம்..." சிரித்துக் கொண்டே சொன்னவள், "ஆனா ஒரு சின்ன கண்டிஷன்.." என்றாள் கடைசியில்...

"என்ன அது?" சாய்பிரதாப் அவளை புரியாமல் ஏறிட,

"இதோ! இந்த இன்ஜெக்சனை போட விடணும்.." அன்று போடாமல் விட்டுப்போன 'AE75MAD' என பெயரிடப்பட்டிருந்த மருந்தை காட்டிவிட்டு, "அண்ட் சில கேள்வி மட்டும் கேக்கணும்... கரெக்ட் ஆன்சர் பண்ணிட்டா நீங்க இப்போவே கிளம்பலாம்..." என்றாள் டாக்டர்...

சாய்பிரதாப் தலையசைத்து சம்மதம் தெரிவிக்க, அவள் அந்த மருந்தை சிரஞ்சியில் மெதுவாக ஏற்றி கழுத்தில் போடுவதற்காக அருகே வந்தாள்...

டாக்டர் ஊசியை போடப்போகும் போது சட்டென விழகியவன், "இதை கழுத்துல தான் போடணுமா?" என்றான் சந்தேகமாக...

"இது மத்த இன்ஜெக்சன் மாதிரி கிடையாது பிரதாப்... மூளையில ஏற்படுற இரசாயன மாற்றத்தை கட்டுப்படுத்தும்... அதுவும் ஸ்கிசோஃப்ரினியாக்கு ஒரு காரணம்... அதோட நீங்க அளவுக்கு அதிகமா யோசிக்கிறதையும் கற்பனை பண்ணிக்கிறதையும் கன்ட்ரோல்ல வச்சுக்கும்.." டாக்டர் தெளிபடுத்த, பின் மீண்டும் கழுத்தை காட்டினான்....

பின்னங்கழுத்தில் நீடில் உள்ளே இறங்கும் போது சாய்பிரதாப் வலியில் லேசாக முகத்தைச் சுருக்கி சத்தமிட, சுவேதா அதை பார்க்க முடியாமல் பார்வையை திருப்பிக் கொண்டாள்...

நல்லபடியாக முதல் வேலை முடிந்ததும், 'உங்க பேர் என்ன? என்ன வேலை பாக்குறீங்க?' என்று சாதாரண கேள்விகளை கேட்டு அவனது மனநிலையை ஆராய ஆரம்பித்தாள் டாக்டர்...

முதல் சில கேள்விகளுக்கு யோசிக்காமலேயே பதிலளித்தவன், அடுத்து வந்த சில கேள்விகளுக்கு நொடிகளில் நேரம் எடுத்துக் கொண்டான்...

அதன்பின் வந்த கேள்விகளுக்கு யோசனையிலேயே சிக்கியவன் டாக்டர் எடுத்துக் கொடுத்ததும் நியாபகம் வந்தவனாய் பதிலளித்தான்... ஆனால் கடைசி சிலவற்றிக்கு யோசிக்க முடியாமல் திணறவே தொடங்கினான் பழையபடியே...

மூச்சின் வேகம் மெதுவாய் அதிகரிக்க, டாக்டர் நிலைமையை புரிந்து கொண்டு, "ஓகே பிரதாப்... இன்னைக்கு இது போதும்... மறுபடி நெக்ஸ்ட் மந்த் வாங்க... இன்னும் இம்ப்ரூவ் மெண்ட் தெரியும் உங்ககிட்ட... அதுவரைக்கும் டேப்லெட்ஸை மறக்காம எடுத்துக்கோங்க..." என்று உடனடியாக பேச்சை மாற்றினாள்..

சாய்பிரதாப்பும் அதை புரிந்துகொண்டு கவலையோடு தலையை மட்டும் ஆட்டி வைத்தான்... இருந்தாலும் தன்மீதே நம்பிக்கை இல்லாமல் மனைவி மற்றும் டாக்டரின் முன்னால் அமர்ந்திருப்பது அவஸ்தையை தர, "நான்.. நான் ரெப்ரஷ் பண்ணிட்டு வந்துடுறேன்..." என குழந்தையை போல உத்தரவு கேட்டுச் செல்ல, அவனை சோகமாக பார்த்துக் கொண்டிருந்தாள் சுவேதா...

சாய்பிரதாப் கதவை திறந்து கொண்டு உள்ளே போனதும், சுவேதாவின் கையைப் பிடித்து அவளை வேகமாக அறையின் வெளியே இழுத்துச் சென்றாள் லேடி டாக்டர்...

சிறிது நேரத்தில் சாய்பிரதாப் வெளியே வந்து பார்க்கும் போது, இருவருமே பழைய இடத்தில் நின்றிருந்தனர்....

***********
சுவேதாவின் கார் மிதமான வேகத்தில் சிட்டியை தாண்டி அவர்களது குடியிருப்பு பகுதியை நோக்கி அதிகமான போக்குவரத்தில்லாத சாலையில் நகர்ந்து கொண்டிருந்தது...

சுவேதா சாலையில் கவனத்தை செலுத்தி வண்டியை நகர்த்திக் கொண்டிருக்க, சாய்பிரதாப் காரில் ஏறியதில் இருந்தே அவள் பக்கத்தில் உட்கார்ந்து ஏற்றப்பட்டிருந்த கண்ணாடியில் நெற்றியை சாய்த்து எதுவும் பேசாமல் வெளிப் பகுதியை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான்....

சுவேதாவிற்கும் கூட கவனம் சாலையில் இருந்தாலும் அவள் எண்ணமெல்லாம் டாக்டர் தன்னை தனியே அழைத்துச் சென்று சொன்ன அந்த வார்த்தையில் தான் முழுவதுமாய் பதிந்திருந்தது...

"இதோ பாருங்க சுவேதா... பிரதாப் நிலைமை வரவர மோசமாகிட்டே போகுது... சீக்கிரம் அவரை இங்க அட்மிட் பண்ற வழிய பாருங்க... இல்லன்னா நிஜம் எது கற்பனை எதுன்னு தெரியாம பைத்தியம் மாதிரி மாறிடுவாரு... முடிவு... மேபி ஹி வில் கமிட் சூசைட், அதர்வைஸ் ஹி வில் கில் யூ..."

'காதலிச்சு கல்யாணம் பண்ண என்னோட சாயே என்னை கொலை செய்வானா?' பதில் தெரியாமல் பரிதவித்த சுவேதா, ஏதோ ஒரு உருத்தலில் தலையை வலது பக்கம் திருப்ப, அங்கே அவளை கண்களில் கொலை வெறியோடு பார்த்தபடி உட்கார்ந்திருந்தான் சாய்பிரதாப்....
 
Last edited:

Author: Sathya
Article Title: அத்தியாயம் - 3
Source URL: Neerathi-https://neerathi.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Story is quite interesting with minute twists. Waiting to read the upcoming chapters. Good job buddy! 👍
 
Back
Top