Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம் மக்களே! நீரதி உங்களை அன்போடு வரவேற்கிறது! கடிவாளமற்று எழுத ஆசையா neerathitamilsite@gmail.com மெயில் பண்ணுங்க!

Sathya

New member
Joined
May 3, 2024
Messages
13
(இனி கதையில் வரும் வெளிநாட்டு கதாபாத்திரங்கள் அனைவரும் புரிதலின் காரணமாக தமிழ் பேசுவதாகவே சித்தரிக்கப் பட்டிருக்கின்றனர்.)

'அப்பா' என்ற குழந்தையின் குரலைக் கேட்டு பதறிப்போய் கதவில் பொருத்திய காதை சட்டென்று விலக்கிக்கொண்டான் சாய்பிரதாப்...

பேயரைந்த முகத்தோடு கதவை ஒருமுறை நன்றாக கவனிக்க, அது சங்கிலியால் பிணைக்கப்பட்டு நன்றாக பூட்டப்பட்டிருந்தது.. உள்ளே ஆட்கள் செல்ல வாய்ப்பேயில்லை... ஆனால் அங்கிருந்து தான் அந்த குரல் வந்தது..

வார்த்தைகள் முன்னுக்குப் பின்னாய் இடம்மாறி புரியாத பாஷையில் மந்திரம் ஓதுவது போல, மூளைக்குள் நுழைந்து அவனை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்வது போலிருந்தது...

சாய்பிரதாப் பயம் பரவிய பார்வையோடு கதவை இமைக்காமல் பார்த்தான்.. தலையை இடவலதாக அசைத்து, "இல்ல... இது உண்மை கிடையாது.. கற்பனை.. எல்லாம் என் கற்பனை..." சுயநினைவை இழந்து விடாமல் இருக்க தனக்கு தானே சொல்லிக்கொண்டு, தன்னை அறியாமலேயே பின்னால் நகர ஆரம்பித்தான்...

இருந்தும் அவனது கற்பனை முடிவில்லாமல் நீண்டது.. அவன் தள்ளிப்போக தள்ளிப் போக குரலின் சத்தம் மேலும் அதிகரித்து காதுகளை மொத்தமாய் அடைத்தது... சாய்பிரதாப்பிற்கு மூச்சின் வேகமும் கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுக்க ஆரம்பித்தது...

அதோடு சேர்ந்து எடுத்துக் கொண்ட மருந்தின் வீரியமும் மனதின் சோர்வும் அவன் உடலை வெகுவாய் வலுவிழக்க செய்ய, தாக்குப் பிடிக்க முடியாமல், "பிளீஸ்... போதும் நிறுத்து..." காதுகளை அழுத்தி பொத்திக் கொண்டு தரையில் மண்டியிட்டான்...

ஆனாலும் அந்தக் குரல் அவனுக்கு இறக்கம் காட்டாமல் பேசியது.. பேசிக் கொண்டிருந்தது... பேசிக்கொண்டே இருந்தது... நேரம் ஆகஆக சாய்பிரதாப்பின் இரத்த நாளங்கள் புடைத்தது... மூளை நரம்புகளில் மின்சாரம் பாய்ந்தது...

அடுத்த நொடியே, "நிறுத்துன்னு சொல்றேன்ல.." ஆக்ரோஷமாய் வெடித்தது அவன் குரல்...

அப்போதும் அந்த குழந்தையின் குரல் அசரவில்லை....

சாய்பிரதாப் தன் கட்டுப்பாட்டை இழந்திருந்தான்....

அது இன்னும் இடைவிடாமல் பேசியது....

அவனது உடல் தசைகள் இறுகி இரும்பாக மாறியது...

அது மேலும் வேகமாக பேசியது....

தலையை தாழ்த்தி தரையில் அழுத்தமாய் கைகளை ஊன்றி பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவன், ஒருகட்டத்திற்கு மேல் குனிந்திருந்த தலையை நிமிர்த்தி கதவை எரித்துவிட்டும் அளவிற்கு பார்க்கும்போது, சுவேதா கண்ட அந்த பயங்கரமான பார்வை திரும்பியிருந்தது அவனிடம்...

கட்டுக்கடங்காத கோபத்தோடு எழுந்து நின்றவன், "நிருத்துன்னு சொன்னா கேக்க மாட்ட??" காட்டுமிராண்டித் தனமாய் ஓடிச் சென்று வந்த வேகத்தில் கதவை ஓங்கி மிதித்தான்... இல்லை.. மிதிக்கவில்லை... சாய்பிரதாப்பின் கால் அந்த கதவிலேயே படவில்லை... அவன் தான் நிலைதடுமாறி கீழே விழுந்திருந்தான்...

என்ன நடந்ததென புரியாமல் தரையில் கையை ஊன்றி தலையை மட்டும் நிமிர்த்த, அந்த கதவு இருந்தது பத்தடித் தள்ளி... திடுக்கிட்டுப் போய் பரபரவென பின்னால் நகர்ந்து படியில் இடித்துக் கொண்டான் சாய்பிரதாப்...

உள்ளே இருந்து வந்த அந்த குரல் இப்போது அவனைப் பார்த்து ஏளனமாக சிரிப்பது போலிருந்தது... மீட்டுக் கொண்ட கோபத்தோடு மீண்டும் எழுந்தவன், இந்தமுறை அறையை நெருங்கியதும் முழுபலம் கொண்டு கையை முறுக்கி ஓங்கிக் குத்த, அது மொத்தமாய் காற்றைத் தாக்கியிருந்தது... கதவு முன்பு போலவே பத்தடி தள்ளியிருந்தது...

சாய்பிரதாப் மொத்தமாய் மிரண்டு போனான்... இரும்பாய் மாறியிருந்த உடலை துரும்பாய் மாற்றி, பின்னால் திரும்பிப் பார்த்தால் அந்த இடம் அளவு மாறாமல் அப்படியே தான் இருந்தது.. அவனுக்கு இப்போது ஏதோ புரிந்தது...

அதை உறுதிப்படுத்திக் கொள்ள குரலின் வார்த்தைகளில் கவனத்தை செலுத்தாமல் பக்கத்தில் கிடந்த பழைய கண்ணாடி பாட்டில் ஒன்றை கையில் எடுத்து கதவை கவனித்தான்.... மரத்தாலான அந்த பழைய கதவு கம்பீரமாய் இவனைப் பார்த்து சிரித்தது..

இறுக்கிப் பிடித்த பாட்டிலை கதவை நோக்கி கண்ணை மூடாமல் வேகமாய் வீசியெறிய, பட்டென உடைந்து நொறுங்கும் சத்தம் கேட்டது.. ஆனால் கதவு பக்கமிருந்து அல்ல அவன் காலடியிலிருந்து...

குத்திட்ட விழிகளோடு தலையை குனிந்து கீழே கவனிக்க கண்ணாடிச் சில்லுகள் காலடியில் சிதறிக் கிடந்தன...

அவன் உதைத்தது உண்மை... ஓங்கி குத்தியது நிஜம்... பாட்டிலை அடித்து நொறுக்கியது கற்பனை கிடையாது.. மாறாக அதையெல்லாம் கதவின் மேல் பிரயோகித்தது தான் கற்பனை.. ஆம்... அனைத்தையும் அவன் செய்திருந்தது நின்றிருந்த இடத்திலேயே தான்...

உடைந்த கண்ணாடித் துண்டு ஒன்றை தன் விரல் நுனியை பதம் பார்த்ததை கூட உணராமல் அவன் உறைந்து நிற்க, வெட்டுக் காயத்திலிருந்து வெளியேறிய இரத்தத் துளி ஒன்று கீழே கிடந்த கண்ணாடியின் ஒரு பகுதியில் விழுந்து முழுவதுமாக பரவியது...

பரவியதோடு நின்றுவிடாமல் சாய்பிரதாப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே சிவப்பு நிறத்திற்கு மொத்தமாய் மாறிய அந்த கண்ணாடி அதிசயமாய் ஆடி ஆடி காற்றில் மிதக்க ஆரம்பித்தது... மெதுமெதுவாக மிதந்து முகத்திற்கு முன்னால் வந்து, தண்ணீரின் மேல் கிடக்கும் இலையை போல தள்ளாடியது..

சாய்பிரதாப் நடுங்கும் கையை மேலே கொண்டு வந்து ஆச்சரியமாய் அதை நோக்கி நகர்த்த, அவன் விரல் பட்ட கணமே மேற்பரப்பு நொருங்கியது.... அடுத்த நொடி உரிந்து விழுந்து, உள்ளே இருந்து பட்டாம்பூச்சி ஒன்று சிறகடித்து பறந்தது...

முதலில் தலைக்கு மேலே அங்கும் இங்குமாக போக்குக்காட்டி பறந்த சிவப்பு வண்ண பட்டாம்பூச்சி கடைசியாய் அந்த கதவில் போய் அமர, அதுவரை இடைவிடாது கேட்டுக் கொண்டிருந்த சத்தம் நொடியில் நின்று போனது மொத்தமாய்... அதேநேரம் பேஸ்மென்ட்டின் கதவு வழியாக மணி பனிரெண்டு ஆகிவிட்டதாக சுவர் கடிகாரம் அறிவித்த ஓசை உள்ளே நுழைந்தது....

சாய்பிரதாப் மேலே செல்லும் பாதையை ஒருமுறை பார்த்தான்... பேசாமல் வெளியே போய்விடலாம் என்று தோன்றியது.. ஆனாலும் ஏதோ ஒன்று உள்ளுக்குள் உறுத்தியது.. தலையைத் திருப்பி அறையின் கதவை கவனிக்க, அதன் மேலே ஒட்டிக் கொண்டிருந்த பட்டாம்பூச்சி சிறகை அசைத்து பக்கத்தில் அழைத்தது...

வியர்த்துப் போன முகத்தோடு அவனும் நெருங்கிச் சென்று பயத்தோடு கையை நீட்டினான்... இம்முறை கதவை அவனால் தொட முடிந்தது... நம்ப முடியாமல் கைகளை முடிந்தவரை அலைபாய வைத்தான்.. ஒன்றுமே ஆகவில்லை...

"ஒருவேளை காயப்படுத்த தான் முடியலையோ!?" முணுமுணுத்துக் கொண்டே அதை சோதித்துப் பார்க்க முடிவெடுத்தான் சாய்பிரதாப்...

கையை இறுக்கிக் கொண்டு கதவில் ஓங்கிக் குத்திவிட்டு, தலையை தூக்கிப் பார்க்க ஓங்கிய கை ஓங்கிய நிலையிலேயே தான் இருந்தது...

"நான் தான் மாத்திரை எடுத்துக்கிட்டனே! அப்புறம் ஏன் இப்பிடி நடக்குது?" சாய்பிரதாப்பிற்கு பைத்தியமே பிடித்துவிடும் போல இருந்தது...

அதற்கு மேல் நொடியும் தாமதிக்காமல் பேஸ்மென்டை விட்டு வெளியேறி ஹாலில் வந்து நின்றான்... அங்கிருந்த ஒவ்வொரு பொருளும் அவனை முன்னால் வந்து முறைத்துப் பார்ப்பது போல தோன்றியது.... முதல்முறையாக தன் வீட்டிலேயே தன்னந்தனியாக இருக்க பயமாய் இருந்தது சாய்பிரதாப்பிற்கு...

"ஒருவேளை மறுபடியும் அந்தக் குரல் கேட்டா?" பயம் மேலும் வளர, துணைக்கு பக்கத்து வீட்டு சாரதாவை கூப்பிடுவதற்காக வாசலை நோக்கி விரைந்து சென்றான்...

வெளிக்கதவை திறந்து சாய்பிரதாப் வெளியே வர, சாரதா காரில் ஏறி வீட்டை விட்டு வெளியே சென்று கொண்டிருந்தார்.. அடுத்து என்ன செய்வதென புரியாமல் சில நிமிடங்கள் அங்கேயே நின்றுவிட்டான்...

பின் வீட்டுக்குள் பார்வையை ஓட விட்டான்... "இதை இப்படியே விட முடியாது..." தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அந்தக் கதவை திறந்து பார்த்துவிட முடிவெடுத்தான் சாய்பிரதாப்...

ஓடிய பார்வையை பின் தொடர்ந்து உள்ளே சென்று, கொத்துச் சாவியை தேடி எடுத்து, பேஸ்மென்ட்டுக்குள் இறங்கினான் மீண்டும்... கதவில் ஒட்டிக் கொண்டிருந்த பட்டாம்பூச்சி இப்போது காணாமல் போயிருந்தது...

அதை கண்டுகொள்ளாமல் விறுவிறுவென கதவை நெருங்கி வந்து சாவிக் கொத்தில் இருந்த அனைத்து சாவியையும் பிரயோகித்துப் பார்த்தான்... எதுவுமே கதவின் பூட்டுக்குச் சேரவில்லை...

"இதோட கீ எங்க இருக்குன்னு தெரியலையே? சுவேதாவுக்கு தெரியுமோ?!" உடனே மொபைலை கையில் எடுத்து தன் மனைவிக்கு அழைப்பு விடுத்தான்...

அவள் எடுக்கவில்லை.. மீண்டும் மீண்டும் முயற்சித்தான்.... அப்போதும் அவள் அழைப்பை ஏற்கவில்லை.. சாய்பிரதாப்பும் இப்படியே விட்டுவிடுவதாயில்லை...

பேஸ்மென்ட்டில் இருந்து மேலே வந்து பைக் சாவியை எடுத்துக் கொண்டு நேரடியாக சுவேதா வேலைப் பார்க்கும் அலுவலகத்திற்கு வண்டியை விரட்டினான்...

ஒன்றரை மணி நேர பயணத்தில் களைத்துப் போய் கண்ணாடிக் கதவை திறந்து உள்ளே நுழைந்தவனைக் கண்டதும், எழுந்து நின்று சம்பிரதாயமாய் இதழை வளைத்தாள் ரிஷப்சனில் நின்றிருந்த இளம்பெண்...

"வெல்கம் சார்.. மே ஐ ஹெல்ப் யூ?"

அவள் முன்னால் போய் நின்ற சாய்பிரதாப், "யா... ஐம் சாய்பிரதாப்.. அர்ஜென்ட்டா ஹெச்.ஆர் சுவேதாவை பார்க்கணும்.. நான் வந்துருக்கேன்னு சொல்லுறீங்களா! இங்கேயே வெயிட் பண்றேன்.." கிடுகிடுவென சொல்லிவிட்டு அங்கிருந்த சோஃபாவில் அமரப் போக,

ரிஷப்சனிஸ்ட் "சாரி சார்... இன்னைக்கு மேம் ஆஃபீஸ் வரல.. லீவ்.." என்றதும் திடுக்கிட்டு அவள் பக்கம் திரும்பினான்...

"என்ன????"

"ஆமா சார்.. காலையிலேயே எம்.டிக்கு கால் பண்ணி லீவ் சொல்லிட்டாங்க..."

"இல்ல... இல்ல.. நீங்க தப்பா புரிஞ்சிகிட்டீங்க! அவங்க டூ ஹார்ஸ் பர்மிஷன் தான் கேட்டுருந்தாங்க... ஆஃபீஸ்ல கூட முக்கியமான மீட்டிங் இருக்குன்னு..."

"இன்னைக்கு ஆஃபீஸ்ல எந்த மீட்டிங்கும் நடக்கல சார்..." குறுக்கிட்டுச் சொல்ல, சாய்பிரதாப்பிற்கு என்ன சொல்வதென்றே தோன்றவில்லை...

தன் மனைவி வேலை இருப்பதாக சொன்னதும் காற்றில் முத்தமிட்டு கிளம்பியதும் கண்முன் வந்து போக, "சுவேதா மேம் கால் பண்ணும்போது நான் அங்க தான் இருந்தேன்.. அவங்க லீவ் தான் கேட்டாங்க..." உறுதியாய் பதிலளித்தாள் அந்த இளம்பெண்...

நம்பிக்கை இல்லை என்றாலும், "அவ.. அவங்க.. என்ன ரீசன்காக லீவ் கேட்டாங்கன்னு தெரியுமா?" தயங்கித் தயங்கிக் கேட்க,

"அவங்களோட ஹஸ்பன்ட்டோட ட்ரீட்மென்ட் விஷயமா ஹாஸ்பிடல் போகனும்னு சொன்னாங்கன்னு நினைக்கிறேன்.." என்றாள்...

"பை த பை.. நீங்க யாருன்னு சொன்னா! மேம் வரும்போது இன்ஃபார்ம் பண்ணிடுவேன்.."

"அவளோட புருஷன்..." திரும்பிப் பார்க்காமல் சொல்லிவிட்டு கட்டிடத்தை விட்டு வேகமாய் வெளியே வந்தான் சாய்பிரதாப்...

வெளியே வந்தவனுக்கு தலையே சுற்றியது... 'எதுக்காக சுவேதா என்கிட்ட பொய் சொல்லணும்? ஆஃபீஸ் மீட்டிங், டூ ஹார்ஸ் பர்மிஷன் இதெல்லாம் ஏன்? ஆஃபீஸ் வரலனா வேற எங்க போயிருப்பா?' எந்த கோணத்திலுமே அவனால் சரியாக யோசிக்க முடியவில்லை...

தலையை அழுத்திப் பிடித்துக்கொண்டே அலுவலக கட்டிடத்தை ஒருமுறை திரும்பிப் பார்த்தான்...

திடீரென, 'இப்போ நான் உண்மையிலேயே உள்ள போனனா? இல்ல அதுவும் என் கற்பனையா?' என யோசித்தான்... எப்படி நினைத்தாலும் அது அப்படி நடந்ததாகவே தோன்றியது..

வேறு வழி தெரியாமல் தலையை அழுத்திய கையை விடுவித்து உடைகளை சரிசெய்து நடையில் மாற்றத்தை கொன்டு வந்து கட்டிடத்திற்குள் நுழைந்தான்...

இளம் பெண்ணின் முன்னால் சென்று ஒன்றுமே நடக்காதது போல நின்று, "ஹாய்... நான் ஹெச்.ஆர் சுவேதாவோட ஹஸ்பண்ட் சாய்பிரதாப்... அவங்கள கொஞ்சம் அர்ஜென்ட்டா பார்க்கணும்... நான் வந்துருக்கேன்னு இன்ஃபார்ம் பண்றீங்களா! பிளீஸ்.."

அவனை கோபத்தோடு மேலும் கீழுமாய் பார்த்தவள், "ஹலோ மிஸ்டர்.. எதாவது பிரச்சனை பண்ணனும்னு வந்திருக்கீங்களா? இப்போ தானே சொன்னேன்... ஒழுங்கா நீங்களே வெளியில போயிடுங்க.. இல்ல செக்யூரிட்டிய வர சொல்ல வேண்டி இருக்கும்..." சொல்லிக்கொண்டே ரிசிவரை கையில் எடுக்க,

பதறிய சாய்பிரதாப், "இல்ல.. இல்ல.. வேண்டாம்... நான்.. நானே போயிடுறேன்.. சாரி..." விட்டால் போதும் என்று வெளியே ஓடி வந்து வண்டியில் ஏறிக் கொண்டான்...

சுவேதா தன்னிடம் பொய் சொல்லிவிட்டு எங்கே போயிருப்பாள்? என யூக்கிக்க முடியாமல், சாய்பிரதாப் பைக்கை அதன் போக்கில் ஓட்டிக் கொண்டு போக, தூரத்தில் போய்
க் கொண்டிருந்த ஒரு கார் அவன் கவனத்தை ஈர்த்தது...

அந்தக் காரை இந்தியாவில் இருப்பதாக சொன்ன நரேன் ஓட்டிக் கொண்டிருந்தான்...
 

Author: Sathya
Article Title: அத்தியாயம் - 5
Source URL: Neerathi-https://neerathi.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Back
Top