Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம் மக்களே! நீரதி உங்களை அன்போடு வரவேற்கிறது! கடிவாளமற்று எழுத ஆசையா neerathitamilsite@gmail.com மெயில் பண்ணுங்க!

Sathya

New member
Joined
May 3, 2024
Messages
13
அந்த மிகப் பெரிய வணிகக் கட்டிடத்தின் பத்தாவது மாடியில் அமைந்திருந்த ரெஸ்டாரன்ட்டில் தங்களுக்கென ரிசர்வ் செய்து வைத்திருந்த டேபிளில் சாய்பிரதாப்புடன் அமர்ந்திருந்தாள் சுவேதா....

சாய்பிரதாப் இன்னமும் யோசனையில் தான் இருக்கிறான் என்பதை தரையை நோக்கி தலையை தாழ்த்தியிருந்த நிலையே அவளுக்கு எடுத்துக் காட்டியது...

"நீ இன்னும் அந்த குரலை பத்தியே நினைச்சுட்டு இருக்கியா?" சுவேதா சாப்பிடுவதை நிறுத்திவிட்டு கேள்வி எழுப்ப, சாய்பிரதாப் பதில் சொல்லாமல் ஃபோர்க்கால் உணவை கிளரிக் கொண்டிருந்தான்..

"நான் தான் சொன்னேன்ல சாய்! நான் ஆஃபீஸ் வரலன்னு அந்த பொண்ணு சொன்னதா சொன்னியே! அதுபோல இதுவும் உன் கற்பனை தான்... பிளீஸ் அத பத்தி யோசிக்கிறத விடு.. அதுக்காக தான் உன்னை வெளியில கூட்டிட்டு வந்துருக்கேன்..."

சாய்பிரதாப்பிற்கு அவள் சொல்வதில் உண்மை இருப்பதாகவே தோன்றியது... ஆனால் அவன் இப்போதும் யோசித்துக் கொண்டிருந்தது குரலை பற்றி அல்ல.. எதிரே அமர்ந்திருந்தவளைபற்றித் தான்..

'மதியம் பார்த்த சுவேதா இவள் இல்லை... அப்படி இருந்திருந்தால் சாலையில் நடக்கும் போது என் கையை விட்டுவிடாமல் கெட்டியாக பற்றிக் கொண்டு வந்திருப்பாளா? கடற்கரை மணலில் அமர்ந்து சிரித்துச் சிரித்து பேசியிருப்பாளா? நூற்றுக் கணக்கான நபர்கள் இருந்த அரங்கில் அமர்ந்து ஆதரவாய் என் தோளில் சாய்ந்து மேடை நாடகத்தை ரசித்திருப்பாளா? ஆனால் அனைத்தையும் இவள் செய்தாளே!.'

'ஒருவேளை நடிக்கிறாளோ?' சந்தேகக் கேள்வி மனதில் முளைக்க, அதற்கான பதிலையும் அதுவே தயார் செய்தது...

'சாமர்த்தியமா நடிக்கலாம்.. ஆனா உணர்வுபூர்வமா ஏமாத்த முடியுமா?'

சரியாக யோசிக்க முடியாமல் திண்டாடியவன் கரத்தை பரிவோடு பற்றிக்கொண்டு, "ஏதாவது சொல்லு சாய்?" என்றாள் சுவேதா...

சாய்பிரதாப் சற்று தாழ்த்தியிருந்த தலையை நிமிர்த்தி சுவேதாவின் கண்களை உற்றுப் பார்த்தான்.. அந்தக் கண்களின் பார்வையில் கலப்படம் இருக்கிறதா இல்லையா என்பதை அவனால் கண்டுபிடிக்கவே முடியவில்லை...

ஆஃபீஸில் நடந்ததை மறைக்காமல் அப்படியே சொல்லியிருந்தவன், அந்த வீட்டில் பார்த்ததைப் பற்றி பேச மனம் வரமால் மூடி மறைத்து, "அப்புடி அந்த ரூம்ல வேற என்னதான் இருக்கும்?" என்றான் அவள் போக்கிற்கே...

"அதான் சொன்னனே! ஹவுஸ் ஓனர் அவரோட பழைய திங்ஸ் எல்லாம் போட்டு வச்சிருக்காரு... நாம வீடு பார்க்க வரும்போதே அதை சொல்லிட்டாரு.. அதனால தான் ரூம் கீய கூட நமக்கிட்ட குடுக்கல..."

"எனக்கு உள்ள என்ன இருக்குன்னு பார்க்கணும்..." சாய்பிரதாப்பின் குரலில் உறுதி ஆழத்தில் வெளிப்பட, சுவேதா சம்மதித்தற்கு அடையாளமாக தலையை ஆட்டினாள்....

"அவர் ஃபேமிலியோட வெக்கேஷன் போயிருக்காரு... திரும்பி வர எப்படியும் பத்து நாள் ஆகும் போல... வந்ததும் திறந்து பார்த்துடலாம்..."

"அவ்வளவு நாள் வெயிட் பண்ண முடியாது சுவேதா.. பூட்டை உடைச்சிடலாம்.. நாளைக்கே!"

"என்ன?"

"ஆமா... நாளைக்கே உள்ள என்ன இருக்குன்னு நான் பார்க்கணும்... நீ தான் பூட்டை உடைக்கணும்..." தன்னால் அந்தக் கதவை காயப்படுத்த முடியாததை மனதில் வைத்து சாய்பிரதாப் முடிவாய் சொல்ல,

"என்ன விளையாடுறியா? அப்புறம் அவருக்கு விஷயம் தெரிஞ்சா பிரச்சனை ஆகிடும்.. திடீர்னு வீட்டை காலி பண்ணிடுங்கன்னு சொல்லிட்டா என்ன பண்றது?" என்றாள் படபடப்பான குரலில்...

அவளுக்கு தன் நிலையை என்னவென்று சொல்லி புரியவைப்பது என தெரியாமல் தவித்த சாய்பிரதாப், "என் நிலைமையை கொஞ்சம் புரிஞ்சிக்க சுவேதா... என்னால கற்பனையை கன்ட்ரோல் பண்ண முடியல... இப்போ கூட..." எதையோ சொல்லவந்து சட்டென நிறுத்திக் கொண்டான்...

பின் லேசாக தலையை வலது பக்கமாக சாய்த்து எதிரே இருந்தவளின் பின்னால் கவனிக்க, கண்ணாடிக்கு அந்தப்பக்கமிருந்த பால்கனியின் மங்கலான மஞ்சள் வெளிச்சத்தில் இப்போதும் நின்றிருந்தாள் அவள்...

கண்டிப்பாக ஏழு வயது இருக்கும்... லேசாக கலைந்திருந்த வாரப்பட்ட தலைமுடி... வீசிய காற்றில் ஆடிய வெள்ளை உடையில் ஆங்காங்கே இரத்தக் கரை.... மடக்கி வைக்கப்பட்டிருந்த அடிபட்ட இடது கை.. அதை தாங்கியிருந்த வலது கை... எல்லாவற்றுக்கும் மேலாக அவள் முகம்... கண், மூக்கு, வாய் இது எதுவுமே இல்லாத முகம்... அதை பார்க்கும் போதே விவரிக்க முடியாத உணர்வு ரோமங்களை கூசச் செய்தது...

வீட்டை விட்டு கிளம்பும் போது காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்தாள்... பார்த்ததும் பயந்தான்... போகும் இடமெல்லாம் பின் தொடர்ந்து வந்தாள்... அப்போது கொஞ்சம் தடுமாறினான்... இப்போது இங்கே.. இங்கேயே!. அவனுக்கு பழகிப் போய்விட்டது...

"அங்க என்ன பாக்குற?" சுவேதாவும் தலையை திருப்பி அவன் பார்வை போகும் இடத்தைப் பார்த்தாள்... அடுத்த நொடியே "சாய்... யார் அந்தப் பொண்ணு?"

மிரட்ச்சியான விழிகளோடு வேகமாக சுவேதா பக்கம் திரும்பியவன், "அவ உனக்கு தெரியிராளா?" அதிர்ச்சியாய் கேட்க,

"ஏன்? எனக்கென்ன கண்ணா இல்ல?", கோபப்பட்ட சுவேதா வெடுக்கென தலையைத் திருப்ப, உண்மையிலேயே அவள் முகத்தில் கண்கள் இல்லை...

திடுக்கிட்டுப் போன சாய்பிரதாப் சடாரென எழுந்து பின்னால் நகர்ந்ததில் உட்கார்ந்திருந்த சேர் பின் பக்கமாக தரையில் சரிந்தது... சத்தம் கேட்டு ரெஸ்டாரன்ட்டில் இருந்த அனைவரும் அவன் பக்கம் திரும்ப, எவர் முகத்திலுமே கண்கள் இல்லை.... மாறாக இரண்டு பட்டாம் பூச்சிகள் ஒட்டிக்கொண்டு இமை மூடி திறப்பது போல ஒரே நேரத்தில் மெதுவாய் சிறகை அசைத்தன...

என்ன நடக்கிறது என யோசிக்க நேரம் கொடுக்காமல் காட்சிகள் திடீரென ரீவைண்டாகி, அவர்கள் தலையை திருப்பிக்கொள்ள, விழுந்திருந்த சேர் எழுந்து உட்கார, சாய்பிரதாப்பின் உடலும் அதில் அமர்ந்துவிட, "அங்க என்ன பாக்குற?" மீண்டும் கழுத்தை பின்பக்கம் வளைத்தாள் சுவேதா....

அடுத்து நடக்கப் போவதை நினைத்து பதறி எழுந்த சாய்பிரதாப்பிற்கு பலமாய் மூச்சு வாங்கியது..

ஆனால், "அங்க எதுவுமே இல்லையே!!" என்றபடி கழுத்தை நேராக்கிக் கொண்டவளுக்கு இரண்டு கண்களும் அப்படியே தான் இருந்தது..

சாய்பிரதாப் அவளை பயத்தோடுப் பார்த்தான்... சுவேதா அவனை குழப்பமாகப் பார்த்தாள்...

"ஏன் எந்திரிச்சிட்ட?" காரணம் புரியாமல் கேள்வி கேட்க,

சாய்பிரதாப் நடப்பதை நம்ப முடியாமல் எச்சிலை முழுங்கிக்கொண்டு, "ஒ... ஒ.. ஒண்ணுமில்ல.. நான்... நான் இதோ வந்துடுறேன்.." உடனடியாக அங்கிருந்து நகர்ந்து விறுவிறுவென ரெஸ்ட்ரூமுக்குள் நுழைந்து கொண்டான்...

வாஷ்பேஷன் டேபை திறந்ததும் கொட்டிய நீரை கைகளில் கொள்ளும் அளவிற்கு தாங்கி, கண்களை மூடி முகத்தில் பீச்சி அடிக்க, நொடியில் சுவேதாவின் அந்த கோரமுகம் நினைவில் வரவே துடிதுடித்துப் போய் கிரானைட்டை பிடித்து உடலை நிலைநிறுத்திக் கொண்டான்...

அதேநேரம் அவசரத்திற்காக உள்ளே நுழைந்த ஒருவன் தெரியாமல் இவனை இடித்துவிட, அவனை முந்திக்கொண்டு, "சாரி... சாரி..." என்றான் சாய்பிரதாப், வேகமாக மூச்சு வாங்கியபடியே!

வந்தவன் நகராமல் ஒருநொடி நின்று சாய்பிரதாப்பின் வித்தியாசமான செயலை வேடிக்கைப் பார்த்துவிட்டு பின் டாய்லெட்டுக்குள் நுழைந்து கதவை அடைத்துக் கொண்டான்...

சாய்பிரதாப்பிற்கு மூச்சின் வேகம் சீராக முழுவதுமாக இரண்டு நிமிடம் பிடித்தது... பொறுமையாக முகத்தை அழுத்தித் துடைத்துவிட்டு கிரானைட் மேடையில் கைகளை தாங்கிக்கொண்டு தலையைத் தூக்கி கண்ணாடியை கவனித்தான்... சாதுவாய் இருந்த சாய்பிரதாப்பின் உருவம், கண்ணாடியில் மட்டும் கோபமாய் தெரிந்தது...

"ஏன் என்னை முறைக்கிற?" தன் பிம்பத்தைப் பார்த்தே இயலாமையில் கேட்டான் சாய்பிரதாப்...

கண்ணாடியில் விழுந்திருந்த பிம்பம், "நீ எதுக்காக இப்படி பயந்து சாகுற?" என்றது...

சாய்பிரதாப் பதில் சொல்ல வரும்முன் டாய்லெட்டுக்குள் சென்றிருந்தவன் கதவை திறந்து வெளியே வந்தான்.. ஹாண்ட் வாஷ் செய்துவிட்டு அவன் வெளியே போனதும், "நான் ஒன்னும் உன்ன மாதிரி கிடையாது.." என்றான் கண்ணாடியைப் பார்த்து...

பிம்ப உருவம் கோபத்தை குறைக்காமல், "நீ சுவேதாவை நம்புறியா?" என்றது..

"அவ சொல்றதும் உண்மை மாதிரி தான் தெரியுது! ஏன்? அது கற்பனையா இருக்கக் கூடாதா?" பதிலுக்கு கேள்வி எழுப்பினான் சாய்பிரதாப்...

"இருந்தா நல்லது... ஆனா உண்மையா இருந்தா?"

"அவ கையாலேயே செத்துப் போறேன்.. காதலிச்சவளை கஸ்டப்படுத்துறதுக்கு இது எவ்வளவோ மேல்..."

"என்னால அப்படி விட முடியாது... அவள நீ கல்யாணம் பண்ணிக்கிட்டது சந்தோஷமா வாழத்தான்... செத்துப் போறதுக்கு இல்ல... எல்லாத்துக்கும் மேல அந்த நரேனையும் ஜானுவையும் எப்படி சும்மா விடுறது?" குரலில் குரோதம் கொத்தித்தெழ,

"இப்போ என்னை என்ன தான் பண்ண சொல்ற?" என்றான் அவனிடம் சரணடைந்தது போல...

"பாக்கெட்ல உள்ளதை வெளியில எடு..."

கண்ணாடியில் தெரிந்தவன் சொன்னது போலவே சாய்பிரதாப் ஜீன்ஸின் வலது பாக்கெட்டுக்குள் கையை நுழைத்து எதையோ வெளியே எடுத்து உள்ளங்கையை விரித்துக் காட்ட, ஒரு சின்ன பிளாஸ்டிக் கவருக்குள் டாக்டர் ஜானு அவனுக்காக எழுதி கொடுத்த மூன்று தூக்க மாத்திரைகள் குறட்டை விட்டுக் கொண்டிருந்தன....

அசிங்கத்தை தொட்டது போல உடனே அதை கீழே போட்டுவிட்டு, "இல்ல.. இல்ல... பிளீஸ் வேண்டாம் இப்படி செய்யாத... சுவேதா நல்லவ தான். நான் தான் ஏதோ தப்பு தப்பா கற்பனை பண்ணிருக்கேன்.." கண்ணாடியைப் பார்த்து முடிந்தவரை கெஞ்சினான் சாய்பிரதாப்...

ஆனால் கண்ணாடியில் இருந்தவனால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. "நீ சொல்றபடி அது கற்பனையாவே இருந்தாலும் எதுக்காக அப்படி ஒரு கற்பனை உனக்கு தோணனும்? அப்போ ஏதோ ஒரு தப்பு அவ பக்கமிருக்கு..." என்றான்...

சாய்பிரதாப்பினால் இதற்கு பதில் சொல்ல முடியவில்லை... எதுவும் பேசாமல் அமைதியாய் கண்ணாடியைப் பார்த்துக் கொண்டு நின்றுவிட்டான்...

"அவ கையில துப்பாக்கிய எடுக்குற வரைக்கும் நடக்கிறது எல்லாம் உண்மையா பொய்யான்னு யோசிட்டே இருக்க முடியாது பிரதாப்.. எப்போதும் போல ஒழுங்கா நீ ஒதுங்கிப் போ.. என்ன பண்ணனுமோ அதை நானே பண்ணிக்கிறேன்..." கீழே விழுந்து கிடந்த கவரை குனிந்து இடது கையால் எடுத்துவிட்டு நிமிர, கோபமான முகம் சாய்பிரதாப்பிற்கு வந்திருந்தது... சாதுவான முகம் கண்ணாடிக்கு மாறியிருந்தது...

கண்ணாடி பிம்பத்திற்கு முன்னாலேயே கவரிலிருந்த மாத்திரைகளை கிரானைட் மேடையின் மேல் கொட்டியவன், ஒவ்வொன்றையும் கையால் நசுக்கிக் கொன்று அதன் சாம்பலை மீண்டும் கவரில் எடுத்துக் கொண்டு வெளியேறினான்...

அவன் எழுந்து சென்றதில் இருந்தே ரெஸ்ட்ரூம் பக்கம் பார்வையை செலுத்தியிருந்த சுவேதா, அவன் திரும்பி வந்து உட்கார்ந்த பின்பு தான் சகஜநிலைக்கு திரும்பினாள்...

அவள் எதுவும் கேட்பதற்கு முன்னாலேயே, "சாரி... வயிறு கொஞ்சம் சரியில்லன்னு நினைக்கிறேன்..." என்றான் லேசான சிரிப்போடு...

அவன் நினைத்தபடியே சுவேதாவும் எதைப் பற்றியும் கேட்காமல் பதிலுக்கு புன்னகைத்து விட்டு மீண்டும் உணவருந்த ஆரம்பித்தாள்... ஆனால் அவன் சாப்பிடாமல் அவளையே அவளுக்கு தெரியாமல் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்... சுவேதா உண்மையிலேயே நடிக்கிறாளா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள ஏதாவது செய்யவேண்டும் என்று தோன்றியது...

விழிகளை உருட்டி, 'என்ன செய்யலாம்?' என தீவிரமாய் யோசித்தவன் சட்டென ஒரு யோசனை பிறக்கவே, "அடுத்த தடவை நாம இங்க வரும்போது கூடவே இன்னொரு புது ஜோடியும் வரும்ன்னு நினைக்கிறேன்..." என்றுவிட்டு ஒயின் கிளாஸை கையில் எடுத்தான்...

"என்ன சொல்ற சாய்? புது ஜோடியா! யார் அது?" சாப்பிடுவதை நிறுத்திவிட்டு சுவேதா புரியாமல் பார்க்க,

கிளாஸை கீழே வைத்துக்கொண்டே தொண்டைக்குள் இருந்த ஒயினை விழுங்கியவன், "ஹ்ம்ம்... ஜோடி புதுசு.. ஆனா ஆளுங்க பழசு.. நம்ம டாக்டர் ஜானுவும் நரேனும்..." என்றான் அழுத்தமாய்...

அவன் சொன்னதைக் கேட்டதும் சுவேதாவின் புருவங்கள் திடீரென உயர, அது அதிர்ச்சியிலா! அல்லது ஆச்சரியத்திலா என புரியவில்லை...

"என்ன சொல்ற நீ? உனக்கு யார் இதை சொன்னா?" சுவேதா குழப்பத்தோடு கேட்க,

தாமத்திக்காமல், "நரேன் தான்..." என்றான் அவன்... "காலையில நீ என்னை வீட்டுல விட்டுட்டு ஆஃபீஸ் போனதும் அவன்கிட்ட இருந்து கால் வந்துச்சு... புராஜெக்ட் விஷயமா இந்தியா போயிருக்கானாம்... அப்போ தான் இதையும் சொன்னான்... அங்கேயே ரிங் எல்லாம் வாங்கி வச்சிட்டான்... திரும்பி வந்ததும் அவளோட பர்த்டே அனைக்கி புரோபோஸ் பண்ண போறேன்னு சொன்னான்.."

கேட்பவள் நம்பும் அளவிற்கு வாய்க்கு வந்ததை கதைகட்டிவிட்டு சுவேதாவின் கண்களை உன்னிப்பாக உற்றுப்பார்த்தான்... அவன் எதிர்பார்த்து காத்திருந்த தடுமாற்றம் அவள் கண்களின் கருவிழிகளில் லேசாக வெளிப்படுவது போல தெரிந்து, 'இதோ வந்துவிட்டது!' என அவன் நினைத்த வேளையில் திடீரென சுவேதாவின் மொபைல் ரிங்டோனை அலறவிட்டுவிட, இருவர் கவனமும் நொடியில் கலைந்து போனது...

முன்முடியை சரிசெய்து இருக்கையில் அசைந்து உட்கார்ந்த சுவேதா, மொபைலைப் பார்த்ததும், "ஆஃபீஸ்ல இருந்து கால் பண்றாங்க... இரு ஒரு நிமிஷம் பேசிட்டு வந்துடறேன்..." என்றுவிட்டு அங்கிருந்து எழுந்து பால்கனி பக்கம் சென்றுவிட்டாள்...

அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு ஏமாற்றமாய் போய்விட்டது... மற்றவர்கள் கவனம் தன்மீது விழுந்து விடாத அளவிற்கு, "அடச்சே..!" என டேபிளை தட்டி கோபத்தை வெளிப்படுத்தினான்....

பால்கனியில் நின்று பேசிய சுவேதா முதுகை காட்டிக்கொண்டு நிற்க, இதுதான் சமயமென சுற்றிமுற்றிப் பார்த்தபடியே கவரிலிருந்த பவுடரை அவளுக்கான ஒயினில் கொட்டினான்..

கிளாஸின் அடியில் மூழ்கிப்போன பவுடர் தன் கடைசி மூச்சை சின்னச் சின்ன குமிழ்களாய் வெளியேற்றிவிட்டு மொத்தமாய் கரைந்து போக, அதன்பின்பே அங்கே வந்து அமர்ந்தாள் சுவேதா... அவள் கண்களில் இப்போது தெளிவு தான் தெரிந்தது அவனுக்கு... அதற்கு ஏற்றார்போல நரேன் மற்றும் ஜானுவின் பழக்கத்தைப் பற்றி சந்தேகம் ஏற்படாத அளவிற்கு பொதுவாக பேச ஆரம்பித்தாள் அவனோடு...

அவனும் சொன்ன பொய்யை நம்ப வைக்க, பல விஷயங்களை உண்மை கலந்து கற்பனையாய் தயார் செய்து சுவார்ஸ்யமாய் பதிலளித்தான்.... எல்லாவற்றையும் புன்னகை மாறாத முகத்தோடு கேட்டுக் கொண்டே உணவை முடித்து கடைசியாக மருந்து கலந்த ஒயினை எடுத்து மொத்தமாய் குடித்து முடித்தாள் சுவேதா...

அரைமணி நேரம் கழித்து இருவரும் லிஃப்ட்டில் கீழே இறங்கும் போது சுவேதாவிற்கு கண்கள் கொஞ்சம் கொஞ்சமாக சொக்க ஆரம்பித்தது... தலையை சிலுப்பி தன்னை நிலைபடுத்திக்கொள்ள அவள் முயற்சி செய்ய, ஒவ்வொன்றாக குறைந்து கொண்டே வந்த டிஸ்ப்ளேயின் எண்ணிக்கை முடிந்து பார்க்கிங் பகுதியை குறிக்கும் எழுத்திற்கு வந்து நின்றதும் மொத்தமாய் பக்கத்தில் இருந்தவன் மீது சரிந்தாள் சுவேதா...

உதட்டில் மர்மான வெற்றிச் சிரிப்போடு அவளை கைத்தாங்களாக கூட்டிச் சென்று காரின் பின்சீட்டில் கடத்திவிட்டு காரை எடுத்தான்...

கட்டிடத்தை விட்டு வெளியேறி வந்ததும் கார் சாலையில் இணைந்து வீட்டை நோக்கி வேகமெடுக்க, ரெஸ்டாரன்ட்டின் பால்கனியில் நின்று அதை கள்ளச் சிரிப்போடு நோட்டமிட்டுக் கொண்டிருந்தான் ரெஸ்ட்ரூமிற்குள் சாய்பிரதாப்பை இடித்தவன்... அவன் ரகசியமாய் கையில் வைத்திருந்த கேமரா சாய்பிரதாப்பின் காரை ஜுமிங்கில் படம் பிடித்துக் கொண்டிருந்தது...
 

Author: Sathya
Article Title: அத்தியாயம் - 8
Source URL: Neerathi-https://neerathi.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Back
Top