Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம் மக்களே! நீரதி உங்களை அன்போடு வரவேற்கிறது! கடிவாளமற்று எழுத ஆசையா neerathitamilsite@gmail.com மெயில் பண்ணுங்க!

KD

Administrator
Staff member
Joined
Apr 24, 2024
Messages
48
இதழ் மிடறும் முத்தம்: 1

வெளியிலோ கனமழை.

பைக்கில் தூரப் பயணம் போயிருந்த படிக்கட்டு தேக அர்னால்டோ நனையாமலே மாளிகை திரும்பியிருந்தான்.

காரணம், ஐயாவின் பைக்கும் சரி, நீர்ப்புகா ஜாக்கெட்டும் சரி ஆயிரங்களின் பெயர் சொல்லும்.

ஆடைகளைக் களைந்து, டவலுக்கு மாறியவன் பின்னால் வந்து நின்றனர் இருவர்.

அதை உணராக் கட்டுடல் மன்னனோ, திரும்பிய வேகத்தில் திடுக்கிட்டுப் பின்னோக்கினான் அடிகளை இருவரையும் முறைத்து.

''தாத்தா, வரச் சொன்னாரு.''

என்று இருவரில் ஒருவன் கைகட்டி நின்றவாறு கட்டளையைப் பிறப்பிக்க,

''குளிச்சிட்டு வரேன்.''

என்றவனோ ஏசியை அதிகப்படுத்தினான்.

''இல்ல, இப்பவே வரச் சொன்னாரு.''

என்று மற்றொருவன் வாயைத் திறக்க,

''இப்படியேவா?''

என்று ஐந்தரை அடிக்கும் மேற்பட்டவனோ இடையில் கரங்கள் இறுக்கிப் புருவத்தை உயர்த்த,

''இப்போவே!''

என்ற குரலோ அழுத்தம் கொள்ள,

''அதெல்லாம் முடியாது! குளிச்சிட்டு ஃபிரெஷா வர்றேன்னு போய்ச் சொல்லுங்க!''

என்று எகத்தாளமாய்ச் சொல்லித் திரும்பியவனை, சூனா மற்றும் பானா இருவரும் ஆளுக்கு ஒரு பக்கமாய் கைத்தாங்கலாய்த் தூக்கிக்கொண்டு நடையைக் கட்டினர்.

''அடேய்! விடுங்கடா! டேய், விசுவாச ஜந்துகளா! என்னடா பண்றிங்க?! டேய்! டேய்! டவல் கழண்டுதுடா!''

என்றலறியவனை மிக பத்திரமாய்க் கொண்டு போய் நிறுத்தினர், பெரியவர் ரத்னவேலுவின் முன்னிலையில், அவரின் லெஃப்ட் ரைட் இருவரும்.

பாவம் மாநிறக் கண்ணனவன், இடையிலிருந்து நழுவப் பார்த்த டவலை ஒருவாரியாய் இழுத்துப் பிடித்து நிறுத்தி ஒரு இறுக்கு இறுக்கினான் இடையில்.

பணம் கொழிக்கும் ஆர்.வி. குரூப்ஸின் மூத்த வாரிசான குருமூர்த்தியின் கடைசி மகன்.

பந்தா பண்ணாத லோ பட்ஜட் ஹீரோ எனலாம். பெரிய அலட்டலெல்லாம் அவனிடத்தில் இல்லவே இல்லை. பார்க்க ஆளும் பக்கத்து வீட்டுப் பையன் கணக்காகத்தான் இருப்பான்.

அவனின் பிரகடனப்படுத்தாத ஆடம்பரமோ, அவனைச் சாமானியனாகவே காண்பிக்கும். அதனாலேயே, அவ்வீட்டின் மற்றக் குருத்துகளுக்கு இவன் பிரியாணியிலிருக்கும் ஏலக்காயே.

கடைக்குட்டி இவனை அந்தஸ்திற்கு ஏற்பப் பள்ளியில் சேர்க்க, ஐயனார் கணக்காய் போத்தலைத் தூக்கிக் கொண்டு, வயசில் மூத்தவனை விடாது விரட்டிச் சாதனை செய்தான் ஹீரோ.

இண்டர்நேஷனல் நிர்வாகமோ கையெடுத்துக் கும்பிட்டுத் துரத்தி விட்டது சேட்டைக்காரனைக் கல்விக்குத் தடா போட்டு, தறுதலை என்ற முத்திரையோடு.

குறும்புக்காரனுக்கோ அதற்குப் பிறகு பதின்ம வயது வரைக்குமே ஹோம் ஸ்கூலிங்தான். அதுவும் ஏனோ தானோ நிலையிலான படிப்பே தவிர, சொல்லிக் கொள்ளும்படி அங்கு எதுவும் வேலைக்கு ஆகவில்லை.

ஒருவழியாய் முக்கித் திக்கி ஹீரோ சோஷியல் சைன்ஸில் டிப்ளோமா முடிக்க, குடும்பத் தொழிலுக்குத் துளியும் உதவாத படிப்பைக் கொண்டிருக்கும் அவனை நிர்வாகத்தில் அமர்த்திட யாரும் ஒத்துக் கொள்ளவில்லை.

இதைச் சாதகமாய்ப் பயன்படுத்திக் கொண்டவனோ அவன் விருப்பம் போல வாழ்க்கையை வாழ்ந்திட ஆரம்பித்தான்.

வீட்டிலும் யாரும் அவனைக் கண்டு கொள்ளவில்லை. எவ்விதத் தொந்தரவும் அவன் யாருக்கும் கொடுத்திடாத வரைக்கும் அவன் போக்கிலேயே அவனை விட்டுவிட்டனர் குடும்பத்தின் பெருசுகள்.

இவனுமே, அவன் ஆர்.வி. குரூப்ஸின் ரத்தமென்று தம்பட்டம் அடித்துக் கொண்டதில்லை. குடும்பப் பெயரையும் கெடுக்கும் அளவுக்கு வளர்ந்த பிறகு எதையும் செய்யவில்லை.

மூன்று அல்லது நான்கு மாதங்கள் மட்டுமே ஒரு வேலையில் நிலைத்திடுவான். எங்கு, என்ன பணி செய்கிறான் என்று யாருக்குமே தெரியாது.

மாதச் சம்பளத்தில் அப்பா தொடங்கி அம்மா மற்றும் தாத்தா வரைக்கும், அவர்களுக்கென்று ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுத்திடுவான்.

அதே வேளையில் தேவையென்று இதுவரை அவன் வீட்டில் யாரிடமும் கையேந்தியதும் கிடையாது.

கோடியில் புரளும் ரத்னவேலுவோ, பேரனின் செயலில் முதலில் வேடிக்கை கொண்டாலும், பின், அவன் சுயம் இழக்காமல் சொந்தக் காலில் நிற்கும் கெத்தில் மரியாதையே கொண்டார்.

அதனால், என்னதான் ஐந்தாறு பேரன் பேத்திகள் இருந்தாலும் இந்தக் குட்டிப் பேரனின் மீது தனிப்பாசமே அவருக்கு.

''என்ன தாத்தா, சீக்கிரம் சொல்லு?''

என்றவனோ பரபரக்க,

''நீ ஏன்டா இப்படி வந்திருக்கே?''

என்ற தாத்தாவோ பால்கனியில் நின்று கொண்டே அரையும் குறையுமான பேரனைக் கண்டு சிரித்தார்.

''இப்படியாவது வந்திருக்கேன்னு சந்தோசப்படு! இல்லாட்டி, உன் உயிர் காக்கும் விசுவாசிங்க என்னை அம்மணக் கட்டையாத்தான் தூக்கிட்டு வந்திருப்பானுங்க!''

என்றவனோ சலித்துக் கொண்டே பின்னந்தலையை அழுந்தக் கோத,

''சரி, சரி, நீ முதல்ல போய்க் குளிச்சிட்டு வா. அப்புறம் பேசலாம்.''

என்ற தாத்தாவோ, பேரனை அக்கோலத்தில் காணச் சகிக்காது அங்கிருந்து போகச் சொன்னார் நிறுத்தாத சிரிப்போடு.

''அதெல்லாம் ஒன்னும் வேணாம்! நீ இப்பவே சொல்லு! நான் நீராட எப்படியும் ரெண்டு மணி நேரமாவது ஆவும், தெரியும்ல!''

என்றவனோ அவனுக்கான தொனியில் ஏற்ற இறக்கம் கொள்ள,

''அப்படி என்னதான்டா பண்ணுவ உள்ளே?''

என்ற தாத்தாவோ செடிகளுக்கு நீர் பாய்ச்சியபடியே வினவிச் சிரித்தார் மீண்டும் தலையை ஆட்டியபடி.

''என்னவோ பண்ணிட்டுப் போறேன்! விடேன்! நீ முதல்ல உன் மேட்டருக்கு வா தாத்தா! எனக்கு மணியாகுது!''

என்றவனோ காலில் சுடுநீர் கொண்டவனாய்த் துடித்தான் வேலைக்கு லேட்டாக.

''அடுத்த வாரம் பொண்ணு பார்க்கப் போறோம். தெரிஞ்ச குடும்பம்தான். நீ வர்றே!''

என்ற தாத்தாவோ ரத்தின சுருக்கமாய்ச் சொல்ல, உச்சுக் கொட்டியவனோ வாயைக் குவித்து காற்றூதினான்.

''என்ன, துரைக்கு மூஞ்சு கோணுது?!''

''நான் இப்போ கேட்டேனா, எனக்குக் கல்யாணம் பண்ணி வைங்கன்னு?! அப்புறம் ஏன்?!''

என்றவனோ பால்கனி ஜன்னலை இறுக்கிப் பற்றிச் சலிக்க,

''வயசு ஓடுதுடா! உன் ஈடுலே எல்லாருக்கும் ரெண்டு புள்ளைங்க இருக்கு!''

என்ற தாத்தாவோ ஆப்பிள் கன்னக்காரனுக்கு வயது இருபத்தி எட்டு என்பதை ஞாபகப்படுத்தினார்.

''நீ இப்போ வரைக்கும் நல்லாதானே இருக்கே?! வேணும்னா நீ கல்யாணம் பண்ணிக்கிட்டு புள்ள பெத்துக்கோ! என்னைக் கல்யாணம் பண்ணச் சொல்லி டார்ச்சர் பண்ணாத தாத்தா!''

என்றவனோ பால்கனிக் கண்ணாடியில் தாளம் போட்டான், நக்கல் குறையாது கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா என்ற பாடலை.

''புள்ள குட்டி பெக்கற வயசாடா எனக்கு?! பேரன் பேத்திங்களே எடுத்திட்டேன்டா! கொள்ளுப் பேரன் பேத்திங்களைக் கொஞ்சற வயசுடா!''

''அப்போ, நிவேதா குட்டி, மாறன், காஜல் இவுங்களாம் யாராம்? குப்பைத் தொட்டி அனாதைங்களா?!''

''டேய், நான் தூக்கிக் கொஞ்சி விளையாட ஆசைப்படறது உன் புள்ளைங்களடா!''

''நான் ஆம்பளையே இல்ல போதுமா! என்னாலலாம் கல்யாணம் பண்ணிக்க முடியாது, போ!''

என்றவனோ எரிந்து விழுந்தான் ஒரே போடாய்ப் போட்டு.

''அதை உனக்கொருத்தியக் கட்டி வைக்கப் போறோம்ல அவ சொல்லட்டும்!''

என்ற ரத்னவேலுவோ கிண்டலடித்துச் சிரிக்க,

''தாத்தா, இது கொஞ்சங்கூட சரியில்ல சொல்லிட்டேன்! அப்புறம் கல்யாணத்தன்னிக்கு நான் ஓடிருவேன் பார்த்துக்கோ!''

என்றவனோ தாத்தாவை மிரட்ட, உடனே வந்து நின்றனர் அவன் பக்கத்தில் சூனாவும் பானாவும்.

''இவனுங்க வேற!''

என்ற ஹீரோவோ தலையிலேயே அடித்துக் கொண்டான் பல்லைக் கடித்து,

''சரி, பரவால்ல விடு! நீ கொடுத்து வச்சது அவ்ளோதான்! நீ மட்டும் ஒரு கல்யாணத்தைப் பண்ணி, மூணே மாசத்துல அப்பனாயிட்டா, ஆர்.வி. குரூப்சோட மொத்தச் சொத்தையும் உன் பேர்ல எழுதலாம்னு நினைச்சேன்!''

என்ற தாத்தாவோ அதிரடியான குண்டொன்றை அசால்ட்டாய்த் தூக்கிப் போட,

''என்ன சொன்ன?! ஆர்.வி. குரூப்சோட மொத்தச் சொத்தையும் என் பேர்ல எழுதப் போறியா? ஏன்?!''

என்றவனோ அதிர்ச்சி கொண்டு விழிகளைப் பிதுக்கினான்.

''அதெல்லாம் உனக்கு எதுக்கு?! நீதான் கல்யாணம் கட்டிக்க முடியாதுன்னு சொல்லிட்டல்ல! கிளம்பு! குளிச்சிட்டு எங்கயோ போறன்னு வேற சொன்னல்ல!''

என்ற தாத்தாவோ வேண்டுமென்றே பேரனைத் துரத்த,

''ஐயோ, தாத்தா! இப்போ உனக்கு என்ன நான் கல்யாணம் பண்ணிக்கணும்! அவ்ளோ தானே?! பண்ணிக்கறேன் போதுமா?! இப்போ சொல்லு, அந்தச் சொத்து மேட்டர் என்னன்னு!''

என்றவனோ பால்கனியில் தாத்தாவின் பக்கத்தில் போய் நின்றான், சொத்து கதையைக் கேட்டறியாது அவன் பொழுது இன்றைக்கு ஓடாதென்றறிந்து.

'அப்படி வா வழிக்கு!'

என்று மனதில் நினைத்து இதழோரம் மென்புன்னகை கொண்ட ரத்னவேலுவோ,

''உங்க அண்ணன் தினேஷ், அண்ணி பிரியா ரெண்டு பேரும் வெளிநாட்டுல செட்டில் ஆகிட்டாங்க! லீவு கிடைக்கும் போது மட்டும்தான் இங்க வராங்க. அதே மாதிரிதான் உன் சின்ன அண்ணன் சுரேஷும் அவன் பொண்டாட்டி மாலாவும். புள்ளைகளைக் கண்ணுல காட்டுறதே வீடியோ கோல்லதான்!''

''என்ன தாத்தா நீ, அவுங்களாம் என்ன சும்மாவா இருக்காங்க?! பெரியண்ணன் டாக்டர், அண்ணி வக்கீல். சின்ன அண்ணன் இன்ஜினியர், அண்ணி டீச்சர். நம்ப ஊர் மாதிரியா, தொட்டதுக்கெல்லாம் லீவு கொடுக்க?! அதான், வருஷத்துல ஒரு தடவையாவது வந்து பார்த்திட்டுப் போயிடறாங்களே?! அப்புறம் என்ன?!''

''அதாண்டா பிரச்சனையே! அவுங்க யாருமே அடுத்த, இல்ல! கண்டங்கள் தாண்டி இருக்காங்க! இப்போதைக்கு இங்க இருக்கறது நீ மட்டும்தானே?!''

என்ற தாத்தாவோ பூடகமாய் ஆரம்பிக்க,

''அதாகப்பட்டது இப்போ நீ என்ன சொல்ல வரேன்னா, உனக்கோ இல்ல அப்பாக்கோ திடீர்னு ஏதாவது ஒன்னுன்னா, நான்தான் பக்கத்துல இருக்கேன்ற?!"

என்றவனோ ஒற்றைப் புருவத்தை மட்டும் மேல் தூக்க,

''கற்பூர புத்திடா உனக்கு!''

என்ற தாத்தாவோ, பேரனின் கன்னத்தைச் செல்லமாய்க் கிள்ள,

''உன் பேரனாச்சே! சரி, மேலே சொல்லு?! அதுக்கும் இந்தச் சொத்தை என் பேர்ல உயில் எழுதறதுக்கும் என்ன சம்பந்தம்?''

என்றவனோ தாத்தாவின் விரல்களை விலக்கி விட்டான் அவன் கன்னத்திலிருந்து.

''உன் அப்பன் மேலயும் அத்தை மேலயும் நம்பிக்கை இல்லன்னு அர்த்தம்!''

என்ற தாத்தவோ விரக்தியில் பெருமூச்சுக் கொண்டார்.

ரத்னவேலுவின் ஒரே பெண் வாரிசு, ராதிகா. ஒற்றை மகளென்று அப்பா செல்லம் கொடுக்க, அவருக்குப் போட்டியாகிப் போனதென்னவோ மூத்த மகன் குருமூர்த்தியே.

தங்கையை உள்ளங்கையில் வைத்துத் தாங்கியவர், வீட்டோடு மாப்பிள்ளை ஆக்கினார் ராதிகா விரும்பிய பிரதாப்பையே.

அடிதடிப் பிழைப்பு நடத்திக் கொண்டிருந்த பிரதாப், கல்லூரி செல்லும் ராதிகாவை எப்படியோ டாவடித்துக் காதலியாக்கிக் கொண்டான்.

படிக்காத கைநாட்டாக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால், குண்டர் கும்பல்காரன் வேண்டாமென்று ரத்னவேல் கறாராய்ச் சொன்ன பிறகும் ராதிகா கேட்கவில்லை.

மகளின் வாழ்க்கையை நினைத்துக் கவலை கொண்டவர் அவசர அவசரமாகப் பணக்கார மாப்பிள்ளை ஒருத்தனைப் பேசி முடித்தார் ராதிகாவிற்கு குடும்ப மானம் காற்றில் பறக்கும் முன்.

ஆனால், தங்கையின் கதறலைத் தாங்கிட முடியா அண்ணனோ, அப்பாவிடம் சண்டை கொண்டு ராதிகாவின் விருப்பத்தையே நிறைவேற்றினார் இறுதியில்.

பிரதாப்பிற்கோ, பெரியிடத்துச் சம்மந்தம் பம்பர் லாட்டரியே. மாமனார் பெயரைப் பயன்படுத்தி பல நாச வேலைகளை இன்னும் அதிகமாய்ச் செயல்படுத்தினான்.

பிஸ்னஸ் ஜாம்பவான்களோ நேரடியாகவே ரத்னவேலுவிடம் அதிருப்தியை வெளிப்படுத்த, மாமனாருக்கும் மருமகனுக்கும் முட்டிக் கொண்டது.

வீட்டை விட்டு மகளையும் கொட்டமடித்த ரவுடியையும், பெரியவர் போகச் சொல்ல, பாசமலர் அண்ணனும் மூட்டை முடிச்சுகளைக் கட்டினார்.

அந்நேரம் பார்த்து ராதிகா வாந்தியெடுக்க, புருஷன் பொஞ்சாதி இருவரையும் மீண்டும் மனைக்குள்ளேயே அடைக்கலமாக்கினார் ரத்னவேலு.

ஊர் போற்றும் பெரியவரின் பெயரையோ பிரதாப் சந்தி சிரிக்க வைக்க, மக்களின் வயிற்றெரிச்சலோ காலனை அவனை நோக்கிச் சீக்கிரமாய் வர வைத்தது.

ராதிகா நிறைமாதக் கர்பிணியாய் இருக்கையிலேயே அவளை விட்டுச் சென்றான் பிரதாப், வெட்டுக்குத்து சம்பவம் ஒன்றில்.

உடைந்திருக்கும் தங்கையை மீண்டும் பழையபடி மீட்டு வர நினைத்த அண்ணனோ, குடும்ப நிறுவனத்தில் ராதிகாவிற்கும் ஒரு பொறுப்புக் கொடுத்தார்.

கடமைகளில் மூழ்கிய ராதிகாவோ திறம்பட வணிகம் செய்ய, பெருமை கொண்ட மூத்தவரோ மகளுக்கென்றே தனியொரு நிறுவனத்தை அமைத்துக் கொடுத்தார்.

ஐந்தாண்டுகள் எல்லாம் நன்றாகத்தான் போனது.

ஆனால், எப்போது ராதிகா சேரக் கூடாத சில கூட்டத்தோடு தண்ணியடிக்க ஆரம்பித்தாளோ, அப்போதே அவளின் வாழ்க்கை மீண்டும் கும்மியடிக்க ஆரம்பித்தது.

வரவெல்லாம், செலவாய் மாறக் கையிருப்பு எல்லாம் சீட்டாட்டத்தில் கரைந்து போனது. தொழில் திவாலாக, ஏதேதோ காரணங்களைச் சொல்லி ரத்னவேலுவை ஏமாற்றிய ராதிகாவோ வசமாய் சிக்கிக் கொண்டாள் குருமூர்த்தியிடம்.

தங்கை மேல் அளவு கடந்த பாசம் வைத்திருந்த அண்ணனோ, பணத்தை வாரிக் கொடுத்தார் முடங்கிய தொழிலைத் தங்கை மீண்டும் தொடங்க.

கடமைக்கு உழைத்த ராதிகாவோ ஒரே மாதத்தில் ஓடினாள் பேராசை கொண்டு மீண்டும் சூதாடிட.

லாபமே காணாத போதிலும் பேருக்கென்று இருந்த ஒரு தொழில் ஓரமாய் இருக்க, மகளைக் கையும் களவுமாய்ப் பிடித்தார் ரத்னவேலு பிரபலமான விடுதி ஒன்றில் பிஸ்னஸ் மீட்டிங்கிற்காய் சென்றிருந்த பொழுது.

இல்லம் திரும்பியவரோ காச் மூச்சென்று கத்த, தங்கையோ வழக்கம் போல் மூத்தவரின் பின்னால் போய் ஒளிந்தாள்.

தங்கைக்காகப் பரிந்து பேசிய அண்ணனோ, இம்முறை அப்பாவிற்காகவும் சேர்த்துப் பேச, வெடித்தது பிரளயம் ஒன்று.

சேர வேண்டிய சொத்தை ராதிகா பிரித்துக் கேட்க, கொடுக்க முடியாது என்ற ரத்னவேலுவோ வீம்பு பிடிக்க, கோபம் கொண்ட மகளோ வெளியேறினாள் வீட்டை விட்டு.

ஐந்து வயது மகளோடு வீதிக்கு வந்த ராதிகாவோ பல துன்பங்களை அனுபவித்தாள். படுத்துத் தூங்க பாதுகாப்பான இடமில்லை. உருப்படியான வேலையில்லை. பிள்ளைக்கோ ஒரு வாய்ச் சோறில்லை.

ஏழ்மை தாளாது மீண்டும் ஓடோடிப் போனாள் குருமூர்த்தியையே தேடி ராதிகா வேறு வழியே தெரியாது. கம்பெனிக்கு கந்தல் கோலம் கொண்டு வந்த தங்கையைப் பார்த்த அண்ணனுக்கோ நெஞ்சு வலியே வந்து விட்டது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவரோ, தக்க சமயத்தில் தன்னைக் காப்பாற்றியது ராதிகா என்றுச் சொல்லி அவளை மீண்டும் வீட்டுக்குள் கூட்டி வந்தார்.

தொழில் ரீதியான பொறுப்புகள் ஏதும் வகிக்காது போயினும் மாதந்தோறும் கம்பெனி ஷேர் மூலம் வரும் பணம் மட்டும் ராதிகாவின் அக்கவுண்டில் சரியாகப் போடப்பட்டது.

குழந்தை மந்த்ராவின் செலவுகளை அண்ணனே கவனித்துக் கொள்ள, மூன்று வேளைச் சாப்பாடும் அண்ணி ஜானகி வஞ்சகம் இல்லாமல் போட, ராதிகாவிற்கு ஒரு பொட்டுச் செலவில்லாமலே சுபபோகமான வாழ்க்கை கிடைத்தது எனலாம் பிறந்த வீட்டில்.

கொஞ்சநாள் அடக்கி வாசித்தவள், மாதங்கள் கடக்கப் பழைய குருடி கதவைத் திறடி கணக்காய் மீண்டும் அதே படுகுழியில் போய் விழுந்தாள்.

சில சறுக்கல்கள் பின் லாபமென்று அவளின் பணத்தைக் கொண்டு இப்போது வரை ஜாலியாய் சூதாடிக் கொண்டேதான் இருக்கிறாள் ராதிகா எவ்விதக் கவலையுமின்றி.

''டேய், என்னடா ஒன்னுமே சொல்லாமப் போற?!''

என்ற தாத்தாவோ பால்கனியைக் கடந்து போகின்றவனை நிறுத்த,

''என்னைப் பார்த்தா உனக்கு எப்படி இருக்கு தாத்தா?! நீங்க அப்பா புள்ளைங்க இன்னிக்கு அடிச்சுக்குவீங்க, நாளைக்குச் சேர்ந்துக்குவீங்க! நடுவுல என்னை எதுக்குக் கோர்த்து விட்டு வேடிக்கை பார்க்க நினைக்கற?!''

''என்னடா ஆகு, நீயே இப்படிச் சொன்னா எப்படிடா?!''

''வேற என்னா தாத்தா சொல்லச் சொல்ற?! சொத்தையெல்லாம் என் பேர்ல மாத்திட்டா அது இன்னும் பெரிய பிரச்சனையாகிடாதா?! அப்புறம், அத்தை மட்டுமில்ல அப்பாகூட ஏதாவது தேவைன்னா என்கிட்டதான் வந்து நிக்கணும்!''

''அவசியம் இருந்தா மட்டும்தான் உங்கப்பன் வருவான்!''

என்ற தாத்தாவோ கறாராகச் சொல்ல,

''அத்தைக்காகவும் வருவாரு!''

என்ற பேரனோ அவன் அப்பாவின் குணமறிந்து சொன்னான்.

''அனாவசியத்தைத் தடுக்கத் தானே மொத்தப் பொறுப்பையும் உன்கிட்டக் கொடுக்கறேன்!''

''இல்ல தாத்தா, எனக்கென்னவோ இது சரியாப் படல! நீ வேணும்னா இந்த வேலைய வெங்கட் சித்தப்பாகிட்டக் கொடுத்திடேன்!''

''ஏன்டா?! அப்புறம் எவனுமே கல்லாலயிருந்து ஒரு ரூபா கூட எடுக்க முடியாமத் திண்டாடறத்துக்கா?!''

என்ற தாத்தாவின் செல்ல முறைப்பில் சத்தமில்லாச் சிரிப்பு கொண்ட ஹீரோவோ,

''சரி, அப்பப் பேசாம புவனாக்கா இல்ல அருள் அண்ணாகிட்டச் சொல்லி இவுங்க யாரையாவது பார்த்துக்கச் சொல்லேன்! இல்லாட்டி, நம்ப சக்தி கிட்டயே சொல்லேன்! அவன் நம்ப கம்பெனிலதானே வேலை பார்க்கறான். அவனுக்குத் தெரியாத கணக்கா!''

என்றவனோ அவனுக்கு மூத்தவர்களை ஆப்ஷன்களாய் அடுக்க,

''நான் ஒன்னும் என் சொத்துகளைப் பார்த்துக்க கணக்குப் புள்ள கேட்கல! நாணயமானவனைக் கேட்டேன்!''

என்ற தாத்தாவோ இவ்வளவு நேரம் கொண்ட பொறுமையைத் துறந்து கடுப்பில் அறைக்குள் நுழைந்த வேகத்தில் கைப்பேசியைக் கையிலெடுத்துத் தொடர்ந்தார்.

''உனக்குத்தான் விருப்பம் இல்லல்ல, விட்ரு ஆகு! இனிமே இதைப் பத்திப் பேச ஒன்னும் இல்ல! எல்லாத்தையும் சந்திரகலா ட்ரஸ்ட்டுக்கு எழுத ஏற்பாடு பண்ணிடறேன்! அதான், ஆளாளுக்குப் படிச்சிருக்கீங்க, வேலை செய்யறீங்க, அப்புறம் என்ன?! இந்தச் சொத்து இருந்தா என்ன, இல்லன்னா என்ன?!''

என்றவரோ மஞ்சத்தில் அமர்ந்தபடி அலைபேசியில் குடும்ப வக்கீலின் எண்ணைத் தேட, நெற்றியை விரல்களால் தேய்த்த ஆகுவிற்கோ என்ன செய்வதென்றே தெரியவில்லை.

தாத்தா எமோஷனல் பிளாக்மெயில் செய்கிறார் என்பது பச்சையாகவே தெரிந்தது ஆகுவிற்கு. ஆனால், அவனால் தாத்தாவைக் காயப்படுத்திட முடியவில்லை. அவரின் உடல்நிலை அவனைத் தடுத்தது.

ஏற்கனவே, இருமுறை அட்டாக் வந்தாயிற்று. திரும்பவும் ஏதாவது ஒன்றென்றால் அவனால் தாங்கிக் கொள்ளவே முடியாது. ஆகுவிற்கும் அவன் தாத்தா என்றால் கொள்ளைப் பிரியம்.

''தாத்தா, நீ சொல்லி நான் எதுவும் கேட்டதா எனக்கு ஞாபகம் இல்ல! இப்போ, என்ன உனக்கு, சொத்தெல்லாம் என் பேர்ல மாத்தணும் அவ்ளோ தான?! மாத்திடு தாத்தா! எனக்கு ஓகே!''

என்றவனோ ரத்னவேலுவின் கையிலிருந்த போனைப் பிடுங்கி ஓரம் போட்டு, திணித்தான் அவர் கையில் தேங்காய் எண்ணெய் போத்தலை.

''அதுக்கு நீ கல்யாணம்ல பண்ணணும்!''

என்ற தாத்தாவோ தரையில் அவரின் கால்களுக்கு இடையில் அமர்ந்திருந்த பேரனின் தலையைத் தேய்த்துக் கொண்டே சிரிக்க,

''அதுக்கும் சேர்த்துதான் ஓகே சொன்னேன் கிழவா!''

என்றவனோ கர்ஜனையிலான தொனியில் கடுப்பைக் காண்பிக்க,

தாத்தாவோ எதையோ சாதித்ததைப் போல் நிம்மதி கொண்டார்.

ஆனால், ஹீரோவோ கடைசி வரைக்கும் அவன் கல்யாணத்திற்கும் சொத்தை அவன் மேல் உயில் எழுதுவதற்கும் என்ன சம்பந்தம் என்று அவன் தாத்தாவிடம் கேட்டிடவேயில்லை.

இதழ் மிடறும் முத்தம்...
 

Author: KD
Article Title: இதழ் மிடறும் முத்தம்: 1
Source URL: Neerathi-https://neerathi.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Back
Top